பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

வாலி ஓய்ந்திருக்கலாம்...

"நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே"

எம்.ஜி.ஆரின் பொதுவாழ்வை உச்சத்தில் தூக்கி வைத்தப் பாடல் இது தான். பட...்டுக்கோட்டை, கண்ணதாசன் போன்றோர் எம்.ஜி.ஆருக்கு கொள்கைப் பாடல்கள் எழுதி அவரது பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்து வந்தார்கள்.

ஆனால் எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதரின் மீது ஈர்ப்பு வருகிற அளவிற்கான பாடல்களை எழுதியவர் வாலி தான். பிற்கால எம்.ஜி.ஆர் பாடல்கள் எளிய தமிழில், கேட்கும் போதே துள்ளலை ஏற்படுத்தி ரசிகனை இழுத்து உள்ளே போட்டதற்கு காரணம் வாலியின் வார்த்தைப் பிரயோகம் தான்.

பல போட்டியாளர்கள் வந்த போதும், சிறிதும் தம் இடத்தை நழுவ விடாமல் இன்றைய தேதி வரை இளமை குன்றாமல் சீனில் இருந்தவர். சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல் கவிதையிலும் களை கட்டியவர். அதிலும் அவரது எதுகை-மோனை மிகவும் ரசனைக்குரியது. அட நாமும் இது போல எழுதலாமே என தோண வைக்கும், ஆனால் முடியாது. அதுவே அவரது தனித்தன்மை.

ஆங்கிலமும், தமிழையும் கலந்துகட்டி விலாசும் பாங்கு, என்ன என்றே புரியாத வார்த்தைகளை போட்டு அதையும் ஹிட்டாக்கியது என ஒரு வித்தியாசமான பாடலாசிரியர்.

அவரது புகழ்பெற்ற “லாலாக்கு டோல் டப்பிமா” அர்த்தம் புரியாமலே மெகா ஹிட். .எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் வரை யாருடைய இசைக்கும் பொருந்திய வார்த்தைகள் அருவியாய் கொட்டியது.

எப்படி எல்லா இசை அமைப்பாளர்களோடும் பொருந்திப் போனாரோ, அப்படி அனைத்து அரசியல்வாதிகளுடன் அலாதியான நட்பு கொண்டவர். கலைஞருடனான நட்பை சிலாகிப்பவர். கடந்த முறை உடல்நலம் குன்றிய போது, கலைஞரின் உதவியை மறவாமல் குறிப்பிடுபவர்.

சமீபகால பாடல்களில், தசவாதாரம் படத்தில் இடம் பெற்ற "முகுந்தா, முகுந்தாவும், கல்லை மட்டும்" பாடல்களின் ஹிட் அவரது தமிழின் வலிமையையும், இளமையும் உறுதி செய்தது.

# வாலி ஓய்ந்திருக்கலாம், இறைத்து ஊற்றிய தமிழ் நதியாய் ஓடிக்கொண்டேயிருக்கும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக