பிரபலமான இடுகைகள்

சனி, 15 மார்ச், 2014

கப்பலை குஜராத்துக்கு திருப்பி விட்டார்...

(லெஃப்ட் டுடே இணைய இதழில், எனது கட்டுரை.)


கேப்டனின் கப்பல் எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்று தமிழக மக்களை சஸ்பென்ஸிலேயே கொண்டு சென்றது தான் விஜயகாந்தின் திறமை.

பாஜவா, திமுகவா, காங்கிரஸா எந்த பக்கம் சுக்கானை திருப்புவார் கேப்டன் என்று யாருக்கும் புரியவில்லை. ஒரு தேர்ந்த கதாசிரியரின் திரைக்கதை போல யாரலும் யூகிக்க முடியாத திருப்பங்களை கொடுத்து வந்தார்.

ஒரு வழியாக சிங்கப்பூரில் இருந்தே கப்பலை குஜராத்துக்கு திருப்பி விட்டார். இப்போது அங்கு ஏற்கனவே வரிசையில் நிற்கும் ஈழத் தோணி, மாம்பழப் படகு, எஸ்.ஆர்.எம் போட் ஆகியவற்றோடு கேப்டனின் கப்பலையும் பொருத்த முடியாமல் திணறுகிறது பா.ஜ.க.

நடிகரோடு மேடை ஏற மாட்டேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். நான் பிறந்த கள்ளக்குறிச்சியையும்,  பெரம்பலூரையும் தராவிட்டால் தனித்து போட்டி என்கிறார் வண்டலூர் மாநாட்டை நட்த்திக் கொடுத்த பச்சமுத்து.

கொங்கு கட்சி முறுக்கிக் கொண்டு இருக்கிறது. மதிமுக மாத்திரம் தான் தொந்தரவு செய்யாமல், யஷ்வந்த் சிங் வந்தாலும் விருந்து கொடுத்து மகிழ்ச்சி படுத்தி வருகிறார் வைகோ.

டாட்டாவோடும், ரிலையன்ஸோடும் ஒரே நேரத்தில் கூட்டணி அமைக்க முடிந்த தொழிற் வித்தகர் நரேந்திர மோடியால் தமிழக கூட்டணியை மாத்திரம் சீரமைக்க முடியாமல் ராஜ்நாத் சிங் தலையில் கட்டி விட்டார்.

பாவம் பொன்னாரும், இல.கனேசனும், முழி பிதுங்கி போயிருக்கிறார்கள். டெல்லி-சென்னை அனைத்து விமானங்களையும் ஏறி பார்த்து விட்டார்கள், மொபைல் பில்லும் எகிறி விட்டது, ஆனால் கூட்டணி தான்...


இப்போதைக்கு திமுக கூட்டணி தான் சீராக அமைந்திருக்கிறது. புதிதாக கூட்டணிக்கு வந்த புதிய தமிழகத்திற்கு ஒரு இடமும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அதற்கு கூட விமர்சனமும் உண்டு.

ஏற்கனவே கூட்டணியில் இருந்த முஸ்லீம் லீக்கிற்கு வேலூர் ஒதுக்கப்பட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது.

அந்த இயக்கத்தின் தொண்டர்கள் எதிர்ப்பை காட்டிய போது, பத்திரிக்கைகள் பிரதானப்படுத்தின. ஆனால் அதனை கலைஞர் பெரிது படுத்தாமல், அவர்களது உணர்வை மட்டும் ஏற்று இன்னொரு இடம் ஒதுக்கி விட்டார்.

திருவள்ளூர் ஒதுக்கப்பட்டது, நெருடல் நீங்கியது. ஊதி பெரிதாக்க நினைத்த உளவுத்துறையும், மற்றக் கட்சிகளும் தடுமாறிப் போனார்கள். திருமாவளவனின் கொள்கைக் கூட்டணி என்ற வாதம் உண்மையானது.



ஜெயலலிதா தான் எப்போதும் முதல், எதிலும் முதல். பலரும் இதை இதை தான் பாராட்டுவார்கள். குறிப்பாக அய்யா தா.பாண்டியன் புளகாங்கிதப் படுவார். ஏன், முதல் தமிழ் பிரதமர் என்று பட்டயமே கொடுத்தார்.

அவரும் இப்போது நிரூபித்துவிட்டார், முதல் தான் என்று. இடதுசாரித் தலைவர்களை டெல்லியில் இருந்து வரவழைத்து கூட்டணி அறிவிப்பு வெளியிட்ட முதல் தலைவர் ஜெயலலிதா தான்.

வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டவரும் ஜெயலலிதா தான். அதிலும் 40 தொகுதிக்கும் வெளியிட்டவரும் அவர் தான். தேவை என்றால், சிலரை வாபஸ் வாங்கி, கூட்டணிக்கு இடம் ஒதுக்குவேன் என்று சொன்னவரும் அவர் தான்.

தேர்தல் அறிக்கையை இந்தியாவிலேயே முதலில் வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர் ஜெயலலிதா தான். அதே போல தமிழகத்தில் முதன்முதலில் பிரச்சாரம் துவங்கிய தமிழக தலைவர் ஜெயலலிதா தான்.

இப்படி எதிலுமே முதல் ஆக இருந்து தா.பா மனம் கவர்ந்த ஜெயலலிதா இன்னொன்றிலும் முதலாவதாக திகழ்கிறார். கூட்டணிக் கட்சியை தயவு தாட்சண்யமின்றி வெளியேற்றியதில் தான்.

அதையும் அவர்களுக்கு சொல்லிய விதம் தான் நயம். ஊமைகாயமாக, அவர்களால் இரண்டு நாட்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து விட்டார்கள்.

அவர்கள் அலுவலகத்திற்கே சென்று, “இரண்டு நாட்களாக நீங்கள் எதுவும் சொல்லவில்லை. நண்பர்களாக இணைந்தோம், நண்பர்களாக பிரிவோம் என்று கலாய்த்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, கம்யூனிஸ்ட்டுகளுக்கு.

# வரலாறு முக்கியம் அமைச்சரே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக