பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 5 ஜூன், 2016

சாதனைத் தலைவர்

1991மே மாதம். தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வந்தார். திருப்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல், காரணம் திமுகவினர் என அதிமுக பொய் பிரச்சாரத்தில் குதித்தது. ராஜீவ் கொலையில் கொதித்து போன மக்கள், அந்தப் பிரச்சாரத்தை நம்பி திமுகவிற்கு எதிரான மனநிலைக்கு சென்றனர். அதிமுகவினர் திமுகவினர் இல்லங்களை தாக்கினர், கொடிக் கம்பங்களை வீழ்த்தினர்.

ஊருக்கு ஊர் ராஜீவ்காந்தி படத்தை வைத்து மாலை அணிவித்து, மக்களை துக்க மனநிலையிலேயே  வைத்திருந்தனர். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. ராஜீவ் மரணம் சுனாமியாக திமுகவை தாக்கியிருந்தது. போட்டியிட்ட தொகுதிகளில், ஒன்றைத் தவிர அத்தனையிலும் தோல்வி.

திமுக வெற்றி பெற்ற அந்த ஒரு தொகுதி துறைமுகம். வெற்றி பெற்ற அந்த ஒரே திமுக வேட்பாளர் தலைவர் கலைஞர். (பொதுத் தேர்தல் அன்று தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து, எழும்பூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று, பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார்.)

அந்த மாபெரும் அனுதாப அலையை எதிர்த்து வென்றது மாத்திரமல்ல, இது வரை போட்டியிட்ட 13 தேர்தல்களில் தோல்வியே காணாமல் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார். இது இந்திய சாதனை. உலக சாதனையாகவும் இருக்கும்.

1977 தேர்தலில், திமுக நெருக்கடி நிலையால்(மிசா) பாதிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த சூழல். 1980 தேர்தலில், அதற்கு முன்பான எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை. 1984 தேர்தலில், அன்னை இந்திரா இறப்பாலும் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவாலும் ஏற்பட்ட அனுதாப அலை (சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற சொற்றொடர் அப்போது பிரபலம்).

இப்படி தொடர் தாக்குதலில் மூன்று சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும், தோல்வி சுற்றி வந்தது திமுகவை. திமுகவின் வெற்றி பாதிக்கப்பட்ட போதும், தலைவர் கலைஞருக்கு மக்கள் வெற்றியையே அளித்து வந்துள்ளனர். அது இந்தத் தேர்தலில் இன்னும் பல சாதனைகளாக வடிவெடுத்துள்ளது.

92 வயதில் தேர்தலை சந்தித்தார். இந்த வயதின் தளர்ச்சியைப் புறம் தள்ளி, வேன் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வென்றார். அதிலும் சாதனைப் படைத்தார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மண்ணின் மைந்தராக திருவாரூர் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

92 வயதில் வெற்றி. அதுவும் 13வது முறையாக வெற்றி. அதுவும் தோல்வியே காணாத வெற்றி. இனி ஒருவர் இந்த சாதனையை முறியடிப்பது எளிதல்ல. எளிதல்ல என்று சொல்வதை விட வாய்ப்பே இல்லை.

# சோதனைகளையும் சாதனைகளாக்கும் தலைவர் கலைஞர் வாழ்க !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக