பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சினிமாவுல நடிச்சீங்களா

"தங்கர்பச்சான் உங்களை பார்க்கனும்கிறார்". " என்னையா? என்னை அவருக்கு அறிமுகம் கிடையாதே? ஆனா நானே அவரப் பார்க்கனும்னு நினைச்சேன். நம்ம ஊர்ல வந்து படம் எடுக்குறாரு. நம்ம ஊரு பேரு அவரால வெளியில தெரியற வாய்ப்பு. ஒரு நல்ல டைரக்டர் நம்ம ஊருக்கு வந்துருக்கும் போது பார்க்கறது தான மரியாத. அதனால், நானே வந்து பார்க்கிறன்". "அழகி" திரைப்படம் பார்த்த பாதிப்பு அது. உணர்ச்சி இயக்குநர் தங்கர்பச்சான்.

ஆண்டிமடத்தில் இருக்கும் கிரீன்லேண்ட் பள்ளியில் "பள்ளிக்கூடம்" திரைப்படத்தின் ஷூட்டிங் ஒரு வாரமாக நடந்துக் கொண்டிருந்தது. அப்போது சட்டமன்றம் நடந்துக் கொண்டிருந்ததால், அன்று தான் சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்தேன். அன்று பல்வேறு பணிகள், அதனால் மறுநாள் சென்று சந்திந்து சால்வை அணிவித்தேன்.

மகிழ்ச்சியாக வரவேற்றவர், " சின்ன வயசு எம்.எல்.ஏ, நல்லா செயல்படுறீங்கன்னு சொன்னாங்க. அதான் சந்திக்கனும்னேன். வேறு ஏதும் இல்லை" என்றார். "எங்க ஊரு இதுவரைக்கும் திரைப்படங்களில் வந்ததில்லை. நீங்க இங்க படம் எடுக்கறதுல மகிழ்ச்சி", என்றேன். " முந்திரிகாட்டு பகுதியின் வாழ்வியல் முறையை காட்டுனது நீங்க தான். சிறப்பா இருக்கு" என்றும் மகிழ்ச்சியை  தெரிவித்தேன்.

"ஆண்டிமடத்தை சேர்ந்தவங்க நிறைய பேர் படத்தில் இடம் பெறுறாங்க. நீங்களும் எங்களோடு இருந்தா நல்லா இருக்கும்" என்றார். "நானும் இது வரை ஷூட்டிங் பார்த்ததில்லை, கொஞ்சம் நேரம் வந்து பார்க்கிறேன்", என்றேன். " அப்படியே சில சீன் வர்ற மாதிரி ரெடி பண்றோம். பள்ளி ஆண்டு விழா நடக்கிற மாதிரி எடுக்கிறோம். அதுல வந்துடுங்க" என்றார். "அதுக்கு எவ்வளவு நேரம் இருக்கனும்?". " நேரமா, ஒரு வாரம் எடுப்போம்", என்றார்.

"அய்யோ அதெல்லாம் கஷ்டம், நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு. ஒரு இரண்டு மணி நேரம் இருக்கற மாதிரி வர்றேன்" ,என்றேன். "அப்போ பார்வையாளர் வரிசையில் உட்காருங்க", என்றார். இப்படி தான் நான் "பள்ளிக்கூடம்" திரைப்படத்தில் இடம் பெற்றேன். அப்போது மழையில் ஒழுகும் பள்ளிக்கூடத்து  கூறையை நடிகை சினேகா அடைக்கும் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பணிகளுக்கு இடையே, ஒரு வாரம் கழித்து  ஷூட்டிங் ஸ்பாட் சென்றேன். மாலை நேரம், நல்ல வெய்யில். பள்ளி மைதானத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ஆண்டிமடத்தின் முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களாக அமர்ந்திருந்தார்கள். எதிரே பெரியக் கூட்டம். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவர்களை, பார்வையாளர்களாக அமர வைத்திருந்தார்கள்.

எங்களை முதல் வரிசையில் உட்கார வைத்தார்கள். இயக்குநர் தஙகர் நடிகர்கள் உட்பட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். கேமரா எங்களைப் பார்த்து சுழல ஆரம்பித்தது, கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தது. அப்புறம் மேடையை நோக்கி திரும்பியது. பிறகு கூட்டத்தில் இருப்பவர்களை கைத்தட்ட சொல்லி, ஒரு ஷாட் எடுத்தார்கள். பிறகு இன்னொரு சுற்று கேமரா வந்தது.

இந்தக் காட்சிகளை எடுக்கவே இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. அடுத்து ஒரு இலவசத் தொலைக்காட்சி கொடுக்கும் அரசு நிகழ்ச்சி எனக்கு காத்திருந்தது. அதனால் நான் நேரத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். படம் வந்த பிறகு பார்த்தால், இந்த இரண்டு மணி  ஷூட்டிங் பத்து நிமிடக் காட்சியாக இடம் பெற்றது. அதிலும் நாங்கள் இடம் பெறும் காட்சி, கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு முறை தோன்றி மறைந்தது. அப்போது தான் இரண்டரை மணி நேர படம் எடுக்க இயக்குநர்கள் படும்பாடு புரிந்தது.

பார்வையாளர்களான எங்கள் பக்கம் இருந்த கேமரா மேடைப் பக்கம் இப்போது திரும்பியது. அங்கு நடக்கும் காட்சிகளை எடுக்க ஆரம்பித்தார்கள். "ஹோ" வென்ற சத்தத்தோடு எங்களுக்கு பின்னால் இருந்தக் கூட்டம், அலையடிப்பது போல எங்களைத் தாண்டி சென்றது. இப்போது நாங்கள் நான்கைந்து பேர் மாத்திரமே அங்கு அமர்ந்திருந்தோம். மீதி அத்தனை பேரும் மேடையை மொய்த்திருந்தனர். என்னவென்று பார்த்தோம்,"மேடை மீது நடிகை சினேகா". அது தான் சினிமா பவர் போலும்.

எப்போது "பள்ளிக்கூடம்" திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கே.டிவியில் ஒளிப்பரப்பானது.

# மீண்டும் பள்ளிக்கு போகலாம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக