ராமச்சந்திரன். இப்போது ஷேர்மார்க்கெட் பிஸினஸில் கிங். கரூரை சேர்ந்தவர், இப்போது இருப்பது சேலத்தில். சேலத்தில் குறிப்பிடத்தக்க பிரமுகர். ரோட்டரி கிளப் தலைவர். கல்லூரிப் படிப்பை முடித்த உடன் ஷேர்மார்க்கெட்டில் இறங்கியவர், படிப்படியாக முன்னேறி இந்த நிலையை அடைந்திருக்கிறார்.
செந்தில் பல தொழில்கள் செய்தவர். ஒரிசா சென்று, விவசாயத்திற்கான பைப் லைன் அமைக்கும் காண்டிராக்ட் எடுத்து செய்தவர். தஞ்சை மாவட்டத்தில் தங்கி, செங்கல் சேம்பர் தொழிலை சிறப்பாக செய்தவர். இப்போதும் செங்கல் தொழில் மாத்திரமல்லாமல் விவசாயத்தில் தீவிரமாக இறங்கி விட்டார். பல்தொழில் வித்தகர்.
அண்ணாதுரை. இவரது குடும்பம் தொழில் குடும்பம். இவரது தந்தையார் பித்தளைப் பாத்திரக் கடை நடத்தியவர். பிறகு சில்வர் பாத்திரங்களை விற்கும் பெரிய நிறுவனமாக உழைப்பின் மூலமாக கொண்டு வந்தார். அண்ணா அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். ஜுவல்லரி பிஸினஸிற்கு சென்றார். இப்போது தங்கம், வெள்ளி விற்பனையில் அண்ணன் அண்ணா பிஸி.
முத்துஷங்கர். இவரும் குடும்பத் தொழிலை தொடர்ந்து நடத்துபவர். கிரானைட் தொழிற்சாலை. உலக நாடுகளை ஒரு வலம் வந்துவிட்டவர், வந்துக் கொண்டிருப்பவர். வெளிநாட்டினர் விரும்புகின்ற வகையில் தரமான கிரானைட் தயாரிப்புகளை அனுப்பி பாராட்டுப் பெறுபவர். ரசித்து, ரசித்து தொழிலை செய்பவர். அவரது தொழிற்சாலை ஒரு கலைக்கூடம் போல் காட்சியளிக்கும்.
விஜயன். இப்போது கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறார். அத்தோடு இன்னும் சில விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்து கொண்டிருக்கிறார். இடையில் சில காலம் பொதுவாழ்க்கையில் உலா வந்தார். இப்போது தொழில் மாத்திரம் தான்.
மேலே சொன்ன அத்தனைப் பேரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொறியியல் புலத்தில் பயின்றவர்கள். படித்ததற்கு தொடர்பில்லாமல் வெவ்வேறு துறையில் இருப்பவர்கள், சாதித்துக் கொண்டிருப்பவர்கள். இப்படி ஒரு 20 சதவீதம் பேர். மீதி 80 சதவீதம் பேர் படித்த படிப்பிற்கு ஏற்ப பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள்.
படித்து முடித்தவுடன் உலகின் தலைசிறந்த நிறுவனமான ABB யில் வேலைக்கு சேர்ந்து உச்ச நிலையில் இருக்கும் "கீச்" என்னும் கிருஷ்ணக்குமார். வெவ்வேறு பணிகளுக்கு சென்று, இன்று மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் போஸ். சிறந்தப் அறிவாளியாக விளங்கி, அதனாலேயே பேராசிரியர்களிடம் மோதி, வாழ்க்கையையே தொலைத்த ராமானுஜம்.
மெக்கானிக்கல் படித்துவிட்டு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் எஞ்சினியராக கொடி கட்டும் சங்கர். மெக்கானிக்கல் படித்து விட்டு சாப்ஃட்வேர் எஞ்சினியராக அமெரிக்காவில் குப்பைக் கொட்டும் முத்து எழிலன். படித்த துறையில் பணியாற்றி, உயர்பதவிகளை கடந்து தற்போது சொந்தத் தொழில் செய்யும் சாய்.
சிங்கப்பூரின் பொறியியல் துறையை ஆட்டிப் படைக்கும் முகில்வண்ணன், டான் கலை, மீனாட்சிசுந்தரம், வாசு, நெடுஞ்செழியன், சுந்தரம்... பட்டியல் நீண்டு கொண்டே போகும். கத்தாரில் கலக்கும் ராஜவிஜயன். பெங்களூரு நந்தா.
ஏன், இப்போ இந்தக் கதையெல்லாம் அப்படின்னு கேக்குறீங்களா?. நேத்து ஒரு மெசேஜ் வந்துது. என்னப் பாத்து எப்புடி, அப்புடி ஒரு மெசேஜ் அனுப்பலாம்?
நான் யார்? சிவசங்கர். வேலைக்குப் போய் வந்து, காண்டிராக்ட் பணிகள் செய்து, பொதுவாழ்க்கைக்கு வந்து, எம்.எல்.ஏ ஆகி அப்புறம் தோற்றுப் போய், இந்தக் கதையெல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான்.
இதெல்லாம் தெரிந்தும் "Happy Engineer's day" அப்புடின்னு வாழ்த்து அனுப்புனா...
# நான் கேட்டனா, இல்ல நான் கேட்டனா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக