பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 21 மே, 2017

திராவிட கொள்கை அரசியல்

ஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் !

**********************

கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை பேசி, தேர்தல் அரசியலில் வென்று, கொள்கையை செயல்படுத்தும் கட்சிகள் மிகக்குறைவு. கொள்கை அரசியலிலும் சமூக நீதிக் கொள்கை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கொள்கை பேசி வெல்லுதல் சிரமம். மதவாத, சாதீயவாத கொள்கை பேசும் கட்சிகள் உணர்வைத் தூண்டி தேர்தலில் எளிதாக வென்று விடுவார்கள்.

சமூக நீதி, பகுத்தறிவு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, பெண்ணுரிமை என பேசி தேர்தலில் வென்று, கொள்கையை செயல்படுத்தி இருக்கிற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் தான் இந்தியாவில். அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்.

ஓங்கி உச்சந்தலையில் அடித்து, கடவுள் மறுப்புக் கொள்கையையும் பகுத்தறிவு வாதத்தையும் சொன்னவர் பெரியார். முன்னேறிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கவே தயங்கிய காலத்தில் 1920 களில் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று முழங்கியவர்  பெரியார். நீதிக்கட்சி காலத்திலிருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முன்னெடுக்கப்பட்டது.

எந்த சாதிப் பெயரை சொல்லி ஒடுக்கப்பட்டர்களோ, அந்த சாதியின் பெயராலேயே அவர்கள் கைத்தூக்கி விடப்பட வேண்டுமென வலியுறுத்தி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார் பெரியார்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் பெரியார் முழங்கிய இத்தனை கொள்கை சிந்தனைகளையும் அப்படியே ஏந்திக் கொண்டு தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

"அவங்க சாமி இல்லன்னு சொல்ற கட்சி, நாத்திகவாதிங்க" என்று பிரச்சாரம் செய்து, கடவுளை வணங்கும் பெரும்பான்மை மக்களை திமுகவுக்கு எதிராக திருப்பும் முயற்சி நடந்த நேரத்திலும் அதை எதிர்கொண்டு, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது திமுக.

ஆட்சி அமைந்த பிறகு மெல்ல, மெல்ல பெரியார் முழங்கிய கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

அப்படி நடைமுறைப்படுத்தும் கொள்கைகளால் சில ஆதிக்க சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், பெரும்பான்மை சமூகங்களின் எதிர்ப்பை சந்திக்கும் நிலை, காலம்காலமாக வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை மாற்ற நேரிடும் போது ஏற்படும் முரண்கள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு ஓட்டரசியலிலும் வெல்லுதல் மிக, மிக சிரமமான காரியம். ஆனால் அதை திறம்பட செய்து அய்ந்து முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. இதன் காரணகர்த்தாக்கள் பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்.

அரசியல் ஆணாதிக்கம் மேலோங்கி இருக்கும் வெளி. அதில் பெண்ணுரிமையை நிலை நாட்டுவது சிரமமானக் காரியம். 1929ல் கொள்கை முழக்கமாய் பெரியார் முன் வைத்தக் கொள்கையை 1989 ல் தலைவர் சட்டமாக்கி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை நிலை நாட்டினார். இது மாத்திரம் பெண்களை முன்னேற்றாது, பெண்களுக்கு கல்வி அவசியம் என முடிவெடுத்தக் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கை சாதூர்யமானது.

எட்டாம் வகுப்பு படித்திருந்தால் பெண் திருமணத்திற்கு ரூபாய் அய்ந்தாயிரம் அரசால் வழங்கப்படும் என அறிவித்தார். அந்தத் தொகையை பெறுவதற்காக ஏழை எளியக் குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்க வைத்தார்கள். எட்டாம் வகுப்பு என்பதை பிறகு பத்தாம் வகுப்பு என ஆக்கினார். பெண் கல்விக்கு இந்தத் திட்டம் மிகப் பெரும் பலம் ஆகும்.

இது மாத்திரமல்லாமல், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்த கலைஞர், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆரமபத்தில் குடும்பத்துப் பெண்கள் பெயரில், ஆண்கள் அதிகாரம் செலுத்தினாலும், படிப்படியாக பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவராக பணியாற்றியவர் திருமதி லதாபாலு. அரியலூர் நகராட்சித் தலைவராக பணியாற்றியவர் திருமதி விஜயலட்சுமி செல்வராஜ். கணவர் அரசியலில் இருந்ததால் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வந்தவர்கள். ஆனால் பின்னாளில் கட்சியில் பதவிக்கு வரும் அளவிற்கு தனித்தன்மையோடு உருவெடுத்தார்கள். இது போல் தமிழகம் முழுதும் பெண்கள் அரசியலுக்கு வரக் காரணமாக, கலைஞர் கொண்டு வந்த 33 சதவீத இட ஒதுக்கீடு அமைந்தது.

அடுத்துப் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை என முடிவெடுத்தார் கலைஞர். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தார். அந்தக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கினார். சிறு தொழில் செய்து முன்னேற, கடன் உதவிகளை வழங்கினார். வங்கிப் பக்கமே சென்றிராத, கிராமத்து ஏழைப் பெண்கள் இப்போது சர்வசாதாரணமாக வங்கி நடைமுறை அறிந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான். பொருளாதாரத்திற்கு ஆண்களையே எதிர்பார்த்திருந்தவர்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியம் பெற்றிருக்கிறார்கள்.

இது அத்தனையும் காலம்காலமாக ஆதிக்கத்தில் இருந்த  ஆணாதிக்க சமுதாயத்தை உடைத்து பெண்ணுரிமையை நிலை நாட்டிய மகத்தானப் பணி. இந்த நடவடிக்கைகள் தமிழகத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதற்கு வித்திட்டு செயல்படுத்திய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், முதல்வர் கலைஞர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களிப்பும் உண்டு. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் படும்பாடு, இந்தியாவின் மற்ற இயக்கங்கள் பெண்ணுரிமையில் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும். திராவிட இயக்கம் கொள்கை வழி நிற்பது விளங்கும்.

மதவாதத்திற்கும், சாதீயவாதத்திற்கும் எதிரான கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் சாதி மறுப்பு திருமணங்களுக்கு அரசு நிதி உதவி திட்டம் வழங்கப்படுவதற்கு எதிர் கருத்துக்கள் இருந்தாலும் திமுக பின்வாங்கவில்லை.

இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்தியா முழுதும் பல்வேறு இயக்கங்கள் போராடியிருந்தாலும், அதனை சட்டப்பூர்வமாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான். படிப்படியாக இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தி, 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான். எம்.ஜி.ஆர் வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என அறிவித்து சமூக நீதிக்கொள்கையில் சறுக்கினாலும், எதிர்ப்பு வந்த உடன் பின்வாங்கினார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டரீதியான சவாலை எதிர்கொண்டு நிலைத்தது. பிற்பட்டோர் சமூகத்தில் வன்னியர் உட்பட 108 சாதியினரை மிகப்பிற்பட்டோர் என அறிவித்து 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான இடஒதுக்கீட்டில் 3சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார். இஸ்லாம் சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு வழங்கினார் கலைஞர்.

சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கூடுதல் ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தமிழ்நாட்டையும், பெரியாரையும் தான் உதாரணம் காட்டிப் பேசினார்.

அப்படி திராவிட இயக்கம் இந்தியாவிற்கே வழிகாட்டி நிற்கிறது. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கிறேன் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அது தான் "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்". இதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு வந்தது. தங்கள் கையில் இருந்த கோவில்கள் கையை விட்டு நழுவுவதை பிராமணர்கள் ஏற்கவில்லை. நெடுங்காலமாக இந்த வழக்கத்திலேயே ஊறிப் போன பிராமணர் அல்லாதோருக்கும் சஞ்சலம் தான்.

தங்கள் முன்னோர் கட்டிய கோவிலிலேயே கர்ப்பகிரகத்தில் அனுமதிக்கப்படாமல் இருப்பதை பொதுமக்களே எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக வந்த சட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்தபோது, அதைக் கூட மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல்  கொள்கையில் உறுதியாக நின்றார் கலைஞர்.

" மாநில சுயாட்சி" கொள்கை தி.மு.கவின் உயிர் நாடிக் கொள்கை. பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது, அதனை முழுமையாக எதிர்த்த இயக்கம் தி.மு.க தான் இந்தியாவிலேயே. அதிலும் இழப்பு வரும் என்று தெரிந்தும் எதிர்த்தார் தலைவர் கலைஞர். இதனால் ஆட்சியே பறிபோனது. அத்தோடு நிற்கவில்லை மத்திய அரசு, தி.மு.கவின் தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்பட்டனர். கொள்கைக்காக ஆட்சியை இழந்ததோடு மாத்திரமல்லாமல் தியாகமும் செய்தது தி.மு.க.

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்த போது, அதனை உயிர் தியாகம் செய்து எதிர்த்த இயக்கம் திராவிட இயக்கம் தான். அதன் காரணமாகத் தான், தமிழ் மாத்திரம் இந்தியால் அழிக்கப்படாமல் இன்றும் சீரிளமையோடு இருக்கிறது. பிகாரி, மராத்தி போன்ற வட இந்தியாவின் எண்ணற்ற மொழிகள் மெல்ல அழியத் துவங்கியுள்ளன. இப்போது தென் மாநிலங்களில் இந்திக்கு எதிரான குரல் வலு பெற ஆரம்பித்துள்ளது.

இப்போது மோடி அரசு, சர்வாதிகாரமாக இந்தியையும், இந்துத்துவாவையும் திணிக்க முற்படுகிற நேரத்தில் ஒரே ஒரு குரல் தான் வலுவாக எதிர்த்தது, இந்திய அளவில். அது தி.மு.கவின் செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் குரல் தான். இந்திய அளவில் பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது அவர் குரல்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்று மத்திய அரசின் அதிகாரங்களைக் கொண்டு மாநிலக் கட்சிகளை மோடி அரசு மிரட்டிக் கொண்டிருந்தாலும், தைரியமாக ஒலிக்கிறது தி.மு.கவின் கொள்கைக் குரல்.

*********************************

நக்கீரன் மே 08- 10 இதழில், திராவிட ஆட்சி 50 ( 1967 - 2017) தொடரில் இடம் பெற்ற எனது கட்டுரை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக