பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை அவர் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அவரது மேசை மேல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் கிடந்தது. புரட்டிப் பார்த்தேன். அரக்கோணம் அருகே ஒரு நகர்.
" ஏம்பா சென்னைக்கு பக்கம்னா அரக்கோணம் தானா ? " எனக் கேட்டேன். " இல்லம்மா, அஙக மார்க்கெட் நல்லாருக்கு. அதனால தான்" என்றார். " அட, அரக்கோணத்தில அவ்வளவு கிராக்கியா ?"
" நீ ஒரு மனை வாங்கு, இரண்டு வருஷம் கழிச்சி வித்துட்டு லாபம் எவ்வளவுன்னு சொல்லு" என்றார் ஸ்ரீதர். "கிண்டல் பண்ணாதம்மா" என்றேன். "இருக்கறத அட்வான்ஸ் கொடும்மா" என்றார்.
சட்டை பாக்கெட்டை பார்த்தேன், அய்யாயிரம் தான் இருந்தது. மனை விலை இரண்டு லட்சத்தை தொடும். "சரி, அடுத்த முறை தர்றேன்" என்றேன். "பரவாயில்ல, இருப்பதைக் கொடு" என்றார். அய்யாயிரத்தை கொடுத்தேன்.
அரசியல் பணி நெருக்கடியில் அவரது அலுவலகம் செல்ல நேரம் வாய்க்கவில்லை. ஆறு மாதம் கழித்து ஒரு நாள் போன் செய்தார். "சிவா, அந்த மனை நல்ல ரேட் வருது. கேட்குறாங்க, கொடுத்துடலாமா ?" என்றார். " சரி ஸ்ரீதர்" என்றேன். "எவ்வளவுன்னா கொடுக்கலாம் ?" " உன் இஷ்டம் ஸ்ரீதர்".
அடுத்த முறை சென்னை வந்த போது அழைத்தார். ஒரு கவரை கொடுத்தார். பிரித்து பார்த்தால் ஒரு லட்ச ரூபாய். மயக்கம் வராதக் குறை. "என்ன இது" என்றேன். "அந்த மனையில் கிடைத்த லாபம்" என்றார்.
எனது கல்லூரி நண்பர் ஸ்ரீதர். சிவில் இன்ஜினியர். படித்து முடித்தவுடன் சென்னையில் கட்டுமானத் தொழில் துவங்கிவிட்டார். பல கட்டிடங்களை கட்டி ஒரு வெற்றிகரமான பில்டராக பரிணமித்து வருகிறார்.
எங்களோடு கல்லூரியில் படித்த நண்பர்கள் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். அவர்கள் சென்னையில் வீடு வாங்குவதென்றால் ஶ்ரீதரை தான் அணுகுவார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்.
இது போல பல நண்பர்கள் இவர் கட்டும் ஃபிளாட்களில் முதலீடு செய்து நாற்பது, அய்ம்பது லட்சம் லாபம் பார்த்தவர்கள் உண்டு.
சில வருடங்கள் கழித்து ஒரு நண்பரோடு அவரது அலுவலகம் சென்றிருந்தேன். ஒரு புது பிராஜக்ட் குறித்து தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நண்பர் ,"சிவசங்கர் இதுவரை சென்னையில் லாட்ஜ்க்கு கொடுத்த வாடகைக்கு வீடு வாங்கியிருக்கலாம். இவருக்கு ஒரு வீடு கொடுங்க" என கிண்டலடித்தார். உடனே ஶ்ரீதர் "இரண்டு வருஷமாவே நான் சொல்றேன். சிவா கேட்கல. இப்ப சரின்னு சொல்லட்டும், ஒரு பிளாட் எடுத்துக்கட்டும். லாபமே வேண்டாம்" என்றார்.
இப்போ அய்ம்பதினாயிரம் அட்வான்ஸ். அவரே பேங்கிற்கு பேசினார். அவரே ஆடிட்டரை பார்த்தார். அவரே பேப்பர் தயார் செய்தார். அவரே லோன் சேங்ஷன் பெற்றார். ஒரு நாள் சாவியை கையில் கொடுத்துவிட்டார். வேறு யாருக்காவது விற்றிருந்தால் இருபது லட்சமாவது லாபம் பார்த்திருக்கலாம் அவர். இது எனக்கு மட்டுமல்ல, பல நண்பர்களுக்கும்.
அந்த ஸ்ரீதர் இல்லத்தில் ஒரு விழா. குடும்பத்தோடு கலந்து கொண்டு வாழ்த்தினேன். அவரது துணைவியார் விருந்து உபசரித்தார். அப்போது அவரிடம் சொன்னேன்," இருபது வருடம் கழித்து இப்போதாவது ஶ்ரீதருக்கு இந்த எண்ணம் வந்ததே, மகிழ்ச்சி".
ஸ்ரீதர் துணைவியார் " இப்போ இல்லன்னாலும் வருத்தம் இல்லைங்க. அவரு சந்தோஷமா இருந்தா போதும். எத்தனை பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பாரு, அவங்க சந்தோஷம் தாங்க பெரிசு" என்றார்.
இருபது வருடம் கழித்து, மற்றவர்களுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்த ஸ்ரீதருக்கு வந்த "அந்த எண்ணம்", இப்போது தான் சொந்தமாக ஒரு ஃபிளாட். அதற்கான புதுமனை புகுவிழா தான் அது.
# நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க !
( ஸ்ரீதர் தன் குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் )
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
அவன் தோற்றமே என்னை கவர்ந்தது. சிறிய உருவம். வயதும் குறைவாகத் தான் தெரிந்தது. ஆனால் வயதுக்கும், உருவத்திற்கும் மீறிய உடை. ஒரு நாலடி உயரம் தா...
-
மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர். கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக