பிரபலமான இடுகைகள்

சனி, 15 ஜூன், 2013

டிரஸ்ஸு கண்டு தள்ளாமை வேண்டும்

மலைக்கோட்டை தொடர்வண்டி வழக்கம் போல் லேட். எப்பவுமே லேட், இன்னும் இழுக்கும் போல...

அரியலூர் ரயில் நிலையம். வழக்கத்தைவிட கூட்டம் குறைவு தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார்ந்திருந்தார்கள்.

பத்து நிமிடம் கடத்தினேன், முடியவில்லை. நம் வர்க்கத்திற்கான இணைய நோய் வாட்டியது. Ipad எடுத்து தற்சமய செய்திகளை பார்த்தேன். அப்புறம் முகநூலில் மூழ்கினேன்.

காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுதும் ...18 திருமணம் மற்றும் மற்ற நிகழ்வுகளுக்காக 300 கி.மீ அலைந்த அசதி தலை தூக்கியது.

சுற்றிலும் பார்த்தேன். இரண்டு பென்ச் தாண்டி ஒருவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். ரயில் வர நாற்பத்தைந்து நிமிடம் ஆகும் என அறிவிப்பு.

மற்ற பென்ச்களில் யாரும் இல்லை. கிரானைட் பென்ச் படுக்க தூண்டியது. கையிலிருந்த பையை தலைக்கு வைத்து சாய்ந்தேன். கூட இருந்த நண்பர் ஒரு பென்சில் சாய்ந்தார்.

முகநூலை தூக்கம் வென்றது. சிறிது நேரத்தில் 'டொக் டொக்' சத்தம். இரு காவலர்கள் தங்கள் பணியை நினைவுப்படுத்த ஒவ்வொரு பென்சாக தட்டிக் கொண்டு வந்தனர்.

எனக்கு முன் படுத்திருந்தவரை எழுப்பி "எங்கே" என்றனர். "சென்னை" என்றார். "தூங்கிடாதீங்க" என சொல்லி என்னை பார்த்தனர். "சென்னை, ராக்போர்ட்" என்றேன். தலையசைத்து, அடுத்த பென்சை நோக்கி நகர்ந்தனர்.

சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு ரயில் வரும் அறிவிப்பு. அரக்க பரக்க எழுந்தேன். அடுத்த பிளாட்பாரத்தில் ரயில் வந்தது. ஓடி பெட்டியில் ஏறினேன். இன்னும் இரு வட இந்தியர்களும்.

வாசலிலேயே பயணச்சீட்டு பரிசோதகர். அவர்களையும் பார்த்தார், என்னையும் பார்த்தார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள் போல இன்சர்ட் செய்து, பவுடர் போட்டு பளிச் என்று இருந்தனர். இரவு 12.30.

அவர்கள் பயணச்சீட்டையும் Pancard-ம் காட்டினார்கள். சார்ட்டில் டிக் அடித்தார். நான் பயணச்சீட்டையும் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையையும் காட்டினேன்.

அடையாள அட்டையை கொஞ்ச நேரம் பார்த்தார், திருப்பி திருப்பி பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தார். கலர் பேண்ட் சர்டில், தோள் பையோடு இருந்தேன். அலைச்சல் மற்றும் தூங்கி எழுந்ததில் தலை கலைந்து அயர்வாக இருந்தேன்.

" இது என்ன கார்டு ?" என்றார். " மேலேயே தமிழ், இங்கிலீஷில் போட்டிருக்கு" என்றேன். படித்தார், அதிலிருந்த படத்தையும் என் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்தார்.

" ஹிஹி. இந்தக் கார்ட பார்த்ததில்ல, இந்த டிரஸ்ல எதிர்பார்க்கல" என்றார். "ஹிஹி" என்றேன். வேற என்னத்த சொல்ல...

# டிரஸ்ஸு கண்டு தள்ளாமை வேண்டும் !
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக