பிரபலமான இடுகைகள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

“ஏ, பொறம்போக்கு..இன்னா வண்டி ஓட்டுற”...

கிடைத்த இண்டு இடுக்குகளில் பைக்குகள் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தன. கார்கள் லேசாக அசைந்துக் கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் டிராபிக் கூடுதலாகிக் கொண்டே இருந்தது. இன்ச் இன்சாக வாகனங்கள் நகர்ந்தன.

       

அது அடையாறு பாலம் கடந்து ஆந்திர மகிள சபாவுக்கு சற்று முன்பு. அகலமான பாலம் முடிந்து சாலை சட்டென்று குறுகும் இடம் அது. அதனால் அது வரை எளிதாக வந்த வாகனங்கள் அங்கே ஒருவரை ஒருவர் முந்துவதற்கு நெருக்கியடிப்பர்.

நானும் ரயிலை பிடிக்கும் அவசரத்தில் இருந்தேன். டிரைவரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு நான் ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நெருக்கடியில் அவரால் நுழைந்து வர இயலாது, அதனால்.

ஆந்திர மகிள சபா வாயிலில் நிற்கும் போது சிக்னல் சிகப்பு விழுந்து விட்டது. மொத்த சாலையும் ஸ்தம்பித்தது. ஆனால் இரு சக்கர வாகனங்கள் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

எனது ஸ்விப்ட் காருக்கு இருபுறமும் அதேபோல பைக்குகள் நகர்ந்தன. இடது பக்கம் பின்புறமிருந்து ஒரு பெண்மணி ஸ்கூட்டியில் சற்றே ஆடி ஆடி வந்தார். டிராபிக் நகராததால் நின்றார்.

சிக்னல் மாறியது. பைக்குகள் வேகமாக நகர முயன்றார்கள். அந்தப் பெண்மணியும் தடுமாறி நகர முயன்றார். கார்களும் லேசாக நகர நானும் நகர்த்தினேன், பைக்குகள் இடித்து விடாமல் மெல்லமாக.

கார்கள் நகர ஆரம்பிக்க பைக்குகள் ஹார்ன் அடித்தவாறு ஆக்சிலேட்டரை முறுக்கினார்கள். இப்போது ஸ்கூட்டி பெண்மணி காரின் சைட்வியூ மிர்ரரை கடந்தார். ஆனால் லேசாக ஆடியவாறு நகர்ந்தவர் காரின் மட்கார்டில் உரசினார். தடுமாறி காலை ஊன்றினார்.

நான் காரின் இடதுபுற முன்புற கண்ணாடியை இறக்கினேன். நடுத்தர வயதை கடந்த பெண்மணி. சற்றே நாகரிகமாகத் தெரிந்தார். “பொறுமையா போங்கம்மா” என்றேன். அவ்வளவு தான்.

“ஏ, பொறம்போக்கு..இன்னா வண்டி ஓட்டுற” என்று ஆரம்பித்தவர். வார்த்தைகள் எல்லையை கடக்க ஆரம்பித்தன. கூவம் நதியை பம்ப் செய்து காருக்குள் விட்டது போல இருந்தது. “இரும்மா. உங்க வண்டி தான் இடிச்சுது” என்றேன்.

உடனே மீண்டும் கூவ(ம்) ஆரம்பித்தார். சுற்றிலும் பைக்கில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பி.பி எகிறியது. கண்கள் சிவந்தது. என்னை மீறி வெடித்தேன். “எவன்டி பொறம்போக்கு?”. அடுத்த செகண்ட் ஸ்கூட்டி வேகமாக நகர ஆரம்பித்தது.

நான் இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை. கொஞ்சம் முன்னால் போன ஸ்கூட்டி பெண்மணி திரும்பிப் பார்த்து, வேகம் பிடித்தார். சிக்னலை நெருங்கினார். அங்கிருந்த போலீஸ்காரரிடம் புகார் செய்தால், பதில் சொல்லலாம் என பார்த்தேன்.

ஆனால் நிற்கவில்லை. சந்து பொந்துகளில் நுழைந்து என் கண்ணில் இருந்து மறைவதே நோக்கம் போல சென்றார். அந்த இடத்தில் ஒரு முக்கோணப் பூங்கா இருக்கும். அதை தாண்டியவர் ஒரு சந்தில் நுழைந்து மறைந்தார்.
வெகு நேரம் மனம் சங்கடமாக இருந்தது, தேவை இல்லாமல், ஒரு பெண்மணியிடம் சூடாக வார்த்தையை பயன்படுத்தி விட்டோமோ என. ஆனால் யோசித்தால் சரி போலவும் தோன்றியது, தவறு போலவும் தோன்றியது.

# ஆயுதங்களை எதிரிகளே திணிக்கிறார்கள் நம்மிடம், நம்மை அறியாமலே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக