பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

நலிவு நீங்கி வாழ்க கவிப்பேரரசே !

நோய் வந்தால் முடங்கிப் போவோம் அல்லது புலம்பி தீர்ப்போம். இங்கொருவர் கொண்டாடித் தீர்க்கிறார். நோய் தன்னை வாட்டி, மருத்துவமனையில் தள்ளி வதக்கியதை “கொண்டாடிவிட்டுப் போகிறது நோய்” என்று இலக்கியப்படுத்திவிட்டார்.

           

வேறு யார், கவிப்பேரரசு வைரமுத்து தான். நோயை கொண்டாடி மூன்று பக்கத்திற்கு ஆனந்தவிகடனில் கட்டுரை எழுத அவரால் தான் முடியும். “இடுப்பில் சூல் கொண்டது வலி” எனும் போதே கட்டுரையை தொடர்ந்து படிக்க வைக்கிறார்.

இயற்கையாகவே அறிவியலை சற்று ஆழ்ந்து உள் வாங்கி தன் கவிதைகளில் கையாள்பவர் கவிப்பேரரசு. அதிலும் தன்னையே பீடித்த நோய் எனும் போது, தன் அனுபவத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

“வலி சிரித்தது; சிரிப்பு வலித்தது” படிக்கும் போதே நமக்கு வலிக்கிறது. இரண்டு வார்த்தைகளை மாத்திரம் கொண்டு ஒட்டு மொத்த உணர்வையும் சொல்லிவிட்டார்.

“என் வலி மீது புன்னகையை அள்ளி அப்பி ஒப்பனை செய்தேன். தமிழ் நடைக்குப் புறப்பட்டேன்” ஒவ்வொரு வரியும் வலியை ரசிக்க வைக்கிறது. அது தான் கவிஞரின் தமிழ்.

மயக்க மருந்து கொடுத்து அறுவைசிகிச்சை முடித்த போது நினைவு வருகிறது கவிஞருக்கு. இப்படி சொல்கிறார், “இன்னொரு கிரகத்தில் இருந்தேன். என் உடலும் உயிரும் என் வசம் இருப்பதை உணர்ந்தேன்”.
வழக்கமாக காதலை வர்ணிக்கும் போது, கழியும் நிமிடங்கள் கணங்களாகும் என்பார். இங்கு “ஒவ்வொரு கணமும் ஓராண்டின் கனத்தில் கழிகிறது”. சிறுநீர் கழிக்க அவர் பட்ட சிரமத்தை விளக்கும் போது, நாமே உணர்கிறோம்.

“நிமிர்தல், குனிதல், கழித்தல், குளித்தல், படுத்தல், புணர்தல், நகைத்தல், அழுதல், நட்த்தல், ஓடுதல், அமர்தல், எழுதல்..என்று உடம்பின் ஒவ்வொரு வினையும் ஒட்டு மொத்த உடம்பின் சம்மதமின்றி முற்றிலும் நிகழ்வது இல்லை, முழுமையும் அடைவது இல்லை”

இதை படிக்கும் போது கவிஞர் மேடைகளில் அடுக்கும் வார்த்தைகள் போல் தோன்றினாலும் உணர்ந்து படித்தால் அப்படியே உண்மை.

கடைசியாக நமக்கு சில அறிவுரைகள் போல் தான் கற்றுக் கொண்டவைகளை சொல்கிறார். "வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று. உலகம சிறிது; பேரன்பு செலுத்து".

படித்து, வலியை ரசியுங்கள்.

# உன் தமிழ் உன்னை குணப்படுத்தும். நலிவு நீங்கி வாழ்க கவிப்பேரரசே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக