பிரபலமான இடுகைகள்

வியாழன், 13 நவம்பர், 2014

அறிவு வரமாட்டான்

அறிவழகன்.

பென்சிலுக்கு உடை உடுத்தியது போன்ற ஒல்லியான உருவம். பென்சிலால் வரைந்தது போல மீசை. எப்போதும் சிரித்த முகம். துறுதுறுப்பான பார்வை. விறுவிறுப்பான நடை. இவை அறிவுக்கு அமைந்த அடையாளங்கள்.

                

திருத்தமானப் பேச்சு. உறுதியான நிலைப்பாடு. எந்நேரமும் கருப்பு-சிவப்பு கரை வேட்டி. ஓயாத உழைப்பு. சலியாத கழகப்பணி. கழக நிகழ்வுகள் குறித்த துல்லிய நினைவு. இவை அறிவு ஏற்படுத்திக் கொண்ட அடையாளங்கள்.

பள்ளி செல்லும் காலத்திலேயே கழக மேடைகளிலேயே அதிக நாட்டம். பாடப்புத்தகம் படித்ததை விட முரசொலி படித்ததே முதற்பணி. அரை டிராயரோடு கழக நிகழ்ச்சிகளுக்கு வரத் துவங்கிய அறிவு இங்கேயே வளர்ந்தான்.

ஓலைக் குடிசை வீடு, போக்குவரத்து வசதியில்லா கிராமம், ஊக்குவிக்க யாரும் இல்லை என இவை யாவும் அறிவை தடுத்தாலும் அறிவின் கழகப்பணி நிற்கவில்லை. மகன் அறிவு, கழக மாநாட்டுக்கு போக விருப்பப்பட்டால் அண்டா, குண்டாவை அடகு வைத்து அனுப்பிவிடும் ஏழை விவசாயி தந்தை.

உள்ளுர் நிர்வாகிகள் அறிவை ஆளாகக் கூட மதிக்காத நிலை. காரணம் தோற்றம், ஏழ்மை. ஆனாலும் தன் பணியின் மூலம் மெல்ல, மெல்ல வெளிச்சத்திற்கு வந்தான். அப்போது மாவட்ட செயலாளராக இருந்த என் தந்தையார் பார்வையில் பட்டான். அங்கீகரிக்கப்பட்டான்.

நான் மாவட்ட செயலாளராக ஆன பிறகு அறிவுக்கான முக்கியத்துவம் கூடியது. மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடக்கும் போது கூட்ட நடவடிக்கை குறிப்பேட்டில் பதியப்படும். “மினிட் நோட்” என்று சொல்லப்படும் அவை வரலாற்று ஆவணங்கள். அதை எழுதி பராமரித்தவன் அறிவு.

அடுத்து பொதுக் கூட்டங்களுக்கு துண்டறிக்கை தயாரிப்பது. அது தான் பெரிதும் அரசியலாகும். யார் பெயரை எங்கு போடுவது, எப்படிப் போடுவது எனபதில் தான் சிக்கல் வரும். ஆனால் எந்த விமர்சனமும் வராமல் அதை தயாரித்து விடுவான் அறிவு. எங்கும் கண்ணுக்கு தெரியாத செயல்பாட்டாளர்கள் ஓரிருவர் தான் இருப்பர். எனக்கு அது போல் அறிவு.

2001 உள்ளாட்சித் தேர்தல். கழகம் எதிர்கட்சி. முக்கியப் புள்ளிகள் வெற்றி தோல்விக்கு அஞ்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (50,000 வாக்கு) பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை. வாய்ப்பு கேட்காத அறிவை கூப்பிட்டு “நிற்கிறாயா?” என்றேன். "அண்ணன் சொன்னா நின்னுடறேன்” என்றான். நின்றான். தோல்வி தான், துவளவில்லை.

அந்த தோல்விக்கு பரிசாக 2006 தேர்தலில், பலத்த போட்டிக்கிடையே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வெற்றிப் பெற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினரானான். கழகப் பணிக்கு அங்கீகாரமாக, அண்ணன் ஆ.ராசா பரிந்துரையில் தொண்டரணியின் மாவட்ட துணை அமைப்பாளரானான். திருமணமானது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானான்.

2011 உள்ளாட்சித் தேர்தல். இந்த முறை தோல்வி. ஆனாலும் சலிக்காமல் தன் பணி தொடர்ந்தான். இந்த முறை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பணிக்கு பரிந்துரைத்தேன். மாநில அமைப்பாளர் அண்ணன் மா.உமாபதி கூட கிண்டலாகக் கேட்டார்,”தூணா ஆள் கொடுப்பீங்கன்னு பார்த்தேன், துரும்பா கொடுத்திருக்கீங்களே மாவட்டம்?”

கழக நிகழ்ச்சிகளின் போது கூட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பணி என்பதால் அறிவின் ஒடிசலான தேகத்தை குறித்து அப்படிக் கேட்டவர், இப்படி முடித்தார்,” ஆனா அறிவா கொடுத்திருக்கீங்க. மகிழ்ச்சி”. இப்படி அனைவரையும் பணியால் கவர்ந்தவன் அறிவு.

இந்த நிலையில் அறிவின் சொந்த வாழ்க்கையில் சிறு இடர்பாடுகள். அதற்கு தீர்வாக மதுவை நாட ஆரம்பித்தான். கண்டிக்க முற்பட்ட காரணத்தால், என் கண்ணில் படுவதை தவிர்த்தான். தீபாவளிக்கு முன்பாக அலைபேசியில் அழைத்தான்,”அண்ணா, தீபாவளிக்கு தம்பிக்கு ஒண்ணும் கவனிப்பில்லையா?”

“நீ தான் என்னைப் பார்க்காம ஓடிட்டியே தம்பி” என்றேன். “பார்க்கலன்னா, அண்ணன் விட்டுடறதா” என்றான். “தீபாவளி முடிஞ்சு அண்ணன பார்க்கறேன். அண்ணன் நினைக்கிறது போல சரியாயிடுவேன்” என்றான். எப்போதும் அண்ணன் என்ற அழைப்பு தவறாது.

அதைவிட அவனது உறவினர்கள் அவனை எப்படி அழைக்கிறார்களோ, அதே முறையில் என்னை அழைப்பார்கள். அப்படி என்னை உடன்பிறந்தவனாகவே அவர்களிடம் உணர்த்தி வைத்திருப்பான். அவனது ஊரை சுற்றியிருக்கும் ஊர்களில் கழகத் தோழர்கள் இல்ல நிகழ்ச்சியில் என்னை கொண்டு போய் நிறுத்திவிடுவான். எனது சொந்த ஊர் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டான்.

தீபாவளி முடிந்து இரண்டு நாட்களில் அறிவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி. சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதி. தொண்டையின் உட்புறம் ஒரு கட்டி. சாப்பிட முடியவில்லை, பேச முடியவில்லை. மதுப்பழக்கத்தால் கல்லீரல் பிரச்சினை. மஞ்சள் காமாலை என ஒட்டு மொத்தத் தாக்குதல்.

தன் உடல்நலம் சரியில்லாத என் தந்தையார், மருத்துவமனைக்கு சென்று அறிவை பார்த்துவிட்டு மருத்துவர்களை அழைத்து, “இவன் என் மகன். எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று சொல்லி வருமளவுக்கு அவர்களது செல்லப்பிள்ளை.

நானும் போய் பார்த்து, உயரதிகாரிகள் மூலமாக மருத்துவர்களுக்கு தகவல் சொல்லி சிறப்பு சிகிச்சையளிக்க வேண்டிவிட்டு வெகு நேரம் உடனிருந்தேன். கிளம்பும் போது,”3-ந்தேதி ஆர்ப்பாட்டம். 6-ந்தேதி தளபதி வருகை. இடையில் திருமணங்கள், 11-ந்தேதி உண்ணாவிரதம். 12-ந்தேதி வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு வந்தேன்.

ஆனால் அவன் முந்திக் கொண்டான். ஆம், நேற்று உயிரற்ற உடலாய் ஊர் திரும்பி விட்டான். சுற்று வட்டாரமே திரண்டுவிட்டது. இரவு 10.00 மணிக்கு உடல் எரியூட்டப்படும் வரை ஆயிரக்கணக்கானோர் அகலவில்லை. அது தான் அறிவின் பணிக்கான அடையாளம்.

மருத்துவமனையில் விடைபெறும் போது, ஒரு நிமிடம் என்ற அறிவு ஏதோ சைகை காட்டினான். எனக்கு புரியவில்லை. பேனாவையும், பேப்பரையும் வாங்கி எழுதிக் கொடுத்தான். "மினிட் நோட்டில் ஒரு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை எழுத விட்டுவிட்டேன், பேப்பரில் எழுதி வைத்திருக்கிறேன். அதை எடுத்து எழுதி விடுஙகள்"

என் கண்கள் கலங்கிவிட்டன. உயிருக்கு போராடும் நிலையிலும் கழகப்பணி தான். "உடல் நிலை சரியாகி நீயே வந்து எழுது" என்று சொல்லி வந்தேன். மினிட் காத்திருக்கிறது. அறிவு வரமாட்டான்.

# நீ என்ன வராமல் போவது, எங்களுள் தான் வாழ்கிறாய் அறிவு

                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக