பரணம் ஒரு சிறு கிராமம். ஒரு ஊராட்சியாக இருந்தாலும்கூட சின்ன ஊர் தான். அரியலூர் மாவட்டத்தில் இருப்பவர்களே பெரிதும் அறியாத ஊர். ஆனால் இன்று தமிழ்நாடு அறிந்த ஊர்.
அறிய வைத்தவர் பாரதிராஜா. பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில முதல் மதிப்பெண் 499 எடுத்து ஒரே நாளில் உலகறியச் செய்து விட்டார்.
பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த 41 பேரில் பாரதிராஜா ஒருவர்.
அதைத் தாண்டி அரசுப் பள்ளிகளில் படித்து, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரில் ஒருவர் பாரதிராஜா.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை +2 மற்றும் 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததில்லை. இப்போது இதை முறியடித்து வரலாற்று சாதனை செய்திருக்கிறார் பாரதிராஜா.
+2-ல் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கடைசி இடத்திற்கு சென்று விட்ட அரியலூர் மாவட்டத்திற்கு ஆறுதல் அளித்திருக்கிறார் பாரதிராஜா.
அவரை பாராட்டுவது கடமையல்லவா? இன்று அவர் இல்லம் சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் சால்வையை பாரதிராஜா கையில் கொடுத்தார் அவர் அம்மா கவிதா.
"நாங்க தான் பாராட்ட வந்தோம். நான் தான் அணிவிப்பேன்" என்று கூறி, நான் டவல் அணிவித்தேன். பரிசுத் தொகையை அளித்தேன். கொள்கைபரப்பு துணைசெயலாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், வி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
அப்பா சேகர், அம்மா கவிதா என வெள்ளந்தியான கிராமத்து பெற்றோர். பொறியியல் படிக்கும் அண்ணன், பள்ளியில் படிக்கும் தம்பி என எளிய விவசாயக் குடும்பம்.
வீட்டினுள் அழைத்து அமர்த்தி, குளிர்பானம் அளித்தார்கள். நிமிர்ந்து பார்த்தேன். வெள்ளை அடித்து பல வருடங்கள் ஆகியிருக்கும். நடுவிலே 20க்கு 15 அளவிலே மெத்தைக் கட்டிடம். அதை ஒட்டி மீதி ஓட்டுக் கட்டிடம்.
அந்த அறை தான் வரவேற்பறை, சாப்பாட்டு அறை, தங்கும் அறை, தூங்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை. அதைத் தாணடி வேறு அறை கிடையாது. உட்கார்ந்து படிப்பதற்கு கூட சரியான இடம் இல்லை.
குடும்ப சூழ்நிலையால் பின்தங்கி விடாமல், பொருளாதார சுழ்நிலைக்காக சுணங்கி விடாமல் படிப்பையே குறிக்கோளாக கொண்டு படித்திருக்கிறார் பாரதிராஜா. சாதித்தும் விட்டார்.
தன் சாதனைக்கு ஆசிரியர்களை காரணமாகக் கொண்டாடுகிறார் பாரதிராஜா. அவர் மட்டுமல்ல, அவரது பெற்றோர், கூடியிருந்த ஊர் பெரியவர்கள் எல்லோருமே ஆசிரியர்களை மெச்சினார்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வேலை நேரம் தாண்டி உழைத்திருக்கிறார்கள். சிறப்பு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்குரியவார்கள்.
மாமன்னன் ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தில் திருக்கோவிலை எடுப்பித்தப் போது, கோவிலின் உச்சியில் உள்ள கல்லை ஏற்றுவதற்கு, பரணம் கிராமத்தில் இருந்து பரண் அமைத்ததாக செவி வழி செய்தி உண்டு.
பாரதிராஜா கல்வி பரண் அமைத்து, பரணத்தின் புகழை உச்சியில் ஏற்றி விட்டார்.
# பாரதிராஜா, கல்வி வென்றான், புகழ் கொண்டான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக