பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 20 மார்ச், 2016

போடுங்கம்மா ஓட்டு

சாலை ஓரத்தில் இலுப்பை மரத்தோப்பு. மரத்தடியில் ஆறு பேர் வட்டமாக அமர்ந்திருந்தனர். உடன் வந்தத் தோழர் "அவர்களையும் பார்த்து விடுவோம்" என்றார்.  கிட்டே நெருங்கும் போது தான் தெரிந்தது, அவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அசையவில்லை. உடன் வந்தத் தோழர்களில் ஒருவர் அவர்களைப் பார்த்து சொன்னார்,"இவர் மாவட்ட கவுன்சிலுக்கு திமுக சார்பா நிக்கிற வேட்பாளர் சிவசங்கர். ஓட்டுப் போடுங்க",என்றார். நான் அவர்களைப் பார்த்து வணங்கினேன். கையில் இருந்த சீட்டு கலைந்து விடாமல் பிடித்துக் கொண்டு தலையசைத்தனர்.

ஒருவர் தலையை கூட அசைக்கவில்லை. உற்றுப் பார்த்தேன். அவர் தலை மீது சிறு கல் இருந்தது. அது கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக, அவர் தலையசைக்கவில்லை போலும். அவர் முந்தைய ஆட்டத்தில் தோற்றிருந்ததால், தலை மீது கல் வைப்பது தண்டனையாம். ஓட்டை விட சீட்டாட்டம் தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. அந்த ஓட்டுக் கேட்கும் அனுபவம் சங்கடமாக இருந்தது.

அது 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல். 50,000 பேர் வாக்களிக்கக் கூடிய, மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டேன். அதற்கு முன்பு என் தந்தையாருக்காகவும், மற்ற சில வேட்பாளர்களுக்காவும் சில தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உண்டு தான். ஆனால் நாமே வேட்பாளராகப் போகும்போது தான் இது போன்ற நேரடி அனுபவங்கள்.   

அடுத்த அனுபவம் இன்னும் கொடுமை. அகரம் கிராமம். ஊர் கடைசியில் மாரியம்மன் கோவில். அதன் முன்புற திண்ணையில் சிலர் படுத்திருந்தனர். ஓட்டுக் கேட்க ஒரு கூட்டமாக வந்திருந்தவர்களை பார்த்த உடன் எழுந்து அமர்ந்து பதிலளித்தனர் சிலர். ஒருவர் படுத்திருந்தபடியே வணங்கினார். இன்னொருவர் "சரி, சரி. போ போ"என்று அலட்சியமாக பதிலளித்தார்.  பிச்சைக்காரன் போல் ட்ரீட்மென்ட். ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டருக்கு மேல் நடந்தே வீடு, வீடாக ஓட்டுக் கேட்கும் போது, உடல் வலி வேறு.

இரவு வீடு திரும்பி, கால் வலிக்கு வென்னீர் ஒத்தடம் கொடுக்கும் போது கண்ணில் நீர் கசிந்தது. உடல்வலியால் மட்டுமல்ல அது.

வரவேற்பு தான் அப்படி இருந்ததே ஒழிய, தேர்தல் முடிவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அளித்தனர். பிறகு காலப் போக்கில் தான், எளிய மக்களின் இயல்பு அது  என்பது புரிந்தது. உள்ளாட்சித் தேர்தலின் போது, ஒரு நாளைக்கு பத்து வேட்பாளர்களுக்கு மேல் வாக்குக் கேட்டு இம்சை செய்யும் போது, அவர்கள் தான் என்ன செய்வார்கள், பாவம்.

அப்போதெல்லாம் வாக்கு கேட்டு சென்றால், "ஆமாம், ஓட்டுக் கேட்டு வந்துட்டிங்க. எங்களுக்கு என்னா செஞ்சீங்க?" என்றக் கேள்வியுடன் தான் வரவேற்பர். வாக்கு கேட்டு வருபவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவரா, எதிர்கட்சியை சேர்ந்தவரா, பதவியில் இருந்தவரா, புதியவரா என்ற பாகுபாடே இருக்காது. யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு இந்தக் கேள்வி பாயும்.

இது போன்ற சங்கடங்கள் பலவற்றை தேர்தல் நேரத்தில் எதிர் கொள்ள நேரிடும். அண்ணா போன்ற மாமனிதர்களுக்கே தேர்தல் நேரத்தில் இதை விடக் கொடுமையான அனுபவங்கள் ஏற்பட்டதை படித்திருந்ததால், மெல்ல மெல்ல இவைகளை எதிர் கொள்ள தயாரானேன்.

பிறகு 2001 உள்ளாட்சித் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டதில் இது போன்று பல்வேறு அனுபவங்கள்.

இப்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைவாக இருப்பதால், வீடுவீடாக வாக்கு கேட்கும் சூழல் மாறிவிட்டது. திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு கேட்டால் தான் தொகுதி முழுதும் செல்லும் நிலை. இதனால் யாராவது வண்டியை நிறுத்தி கேள்வி கேட்டால் தான் வாய்ப்பு உண்டு.

2011 தேர்தல் போது, திறந்த ஜீப்பில் நின்று வணங்கி வாக்கு சேகரித்தவாறு சென்று கொண்டிருந்தேன். ஒரு ஊரில் பெண்கள் கூட்டமாக வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த ஓட்டுனர், ஜீப்பை மெதுவாக செலுத்தினார். மைக்கில் பிரச்சாரம் செய்தவர், ஓட்டுகளை மொத்தமாக வளைக்கும் நோக்கில் "தாய்மார்களே மறந்துவிடாதீர்கள்" என்று ஆரம்பித்தார்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கை நீட்டி ஜீப்பை மறித்தார். நான் அவரை நோக்கிக் குனிந்தேன். அவர் என்னைப் பார்த்து சொன்னார்," நீங்க மறந்துடாதீங்க. இன்னும் எங்க தெருவுக்கு பணம் வரல".


( "அந்திமழை" மார்ச் மாத இதழில் எனது கட்டுரை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக