கன்ஹையா குமார்.
ஒரு வித்தியாசமானப் பெயராக இருக்கிறதே என சிந்திக்க வைத்தது. வித்தியாசமான பெயர் மட்டுமல்ல, வித்தியாசமான நபர் என அவரது நடவடிக்கை நிரூபித்து விட்டது.
தேசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்கள். தேசத் துரோகி என்றார்கள். ஊடகங்கள் இவரை குறி வைத்துத் தாக்கினார்கள். இவரது வாதத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தடுத்துப் பார்த்தார்கள். உண்மையின் குரலாக ஒலித்தார் கன்ஹையா குமார். இது கருத்து சுதந்திரத்திற்கானக் குரல்.
சமீபத்தில் டெல்லி "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ)" ஏற்படுத்திய பரபரப்பின் மையப்புள்ளி இவர் தான். பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பினார் என்று பிரிவினைவாத குற்றத்தை வீடியோ ஆதாரத்தோடு சுமத்தி கைது செய்தார்கள். ஆனால் அது "தயாரிக்கப்பட்ட வீடியோ" என பல்லிளித்தது.
ஏன் இந்தப் பதற்றம். இது கைது செய்த காவல்துறையின் பதற்றம் மட்டும் அல்ல. அரசின் பதற்றம். அரசு என்றால் மத்திய அரசு. மத்திய அரசு என்றால் அதன் தலைவர் மாத்திரமல்ல. அவரை வழி நடத்துவோருக்கானப் பதற்றம். இது தான் நாட்டுக்குத் தேவையான பதற்றம்.
மத்திய அரசின் தலைவர் மோடி, உலகை வழி நடத்துகிற தலைவராக கட்டமைத்துப் பார்த்தார்கள். ஆனால் அவர் இந்த சாதாரண மாணவனைப் பார்த்து பயந்துப் போனது தான் வரலாறு. சாதாரண மாணவன் என்று தான் அந்தத் தலைவர் மோடியும், அவரை வழி நடத்துகிற அந்த மோசடிக் கூட்டமும் நினைத்தது.
அவர் சாதாரண மாணவர் தான். அதுவும் மிகப் பின்தங்கிய மாநிலமான பிகாரில் இருந்து வந்த மாணவர். இவரது அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போனார். அம்மா ஒரு அங்கன்வாடிப் பணியாளர். மிக ஏழ்மையானக் குடும்பம். தன் முயற்சியில் படித்து முன்னுக்கு வந்தவர் தான் இந்த கன்ஹையா குமார்.
இவர் தேர்வெழுதி தேறி, ஜே.என்.யூவில் சேர்ந்தவர். ஜே.என்.யூவிற்கு தனி வரலாறு உண்டு. மத்திய அரசியல் பல நேரங்களில் தறிக் கெட்டு ஓடிய நேரத்தில், அதற்கு மூக்கணாங்கயிறு போட்ட பெருமை இந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கே உண்டு. அந்த அளவிற்கு சுயசிந்தனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் இடம். அது தானேப் பிரச்சினை.
குமாரோ வளரும் போதே, குடும்பத்தாரைப் போலவே கம்யூனிஸ்டாக வளர்ந்தவர். அதனால் தான் டெல்லி வந்தப் போது இன்னும் கூர்மையானார். அகில இந்திய மாணவக் கூட்டமைப்பின் தலைவர் ஆனார். இது இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு. பொறுப்பிற்கேற்றார் போல் இந்துத்துவாவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார். அடக்கிப் போட மத்திய அரசு முனைந்தது.
ஆனால் நிலைமை மாறிப் போனது. இப்போது கன்ஹையா குமார் வளரும் தலைவர். அவரது பேச்சு நிதானமாக, பொருள் பொதிந்ததாக இருக்கிறது. குற்றம் சாட்ட முயற்சித்த மத்திய மோடி அரசு ஆப்பசைத்தக் குரங்காக முழிக்கிறது. தான் வைத்த ஆப்பிலேயே, தன் வால் மாட்டிக் கொண்டிருப்பதை உணர்கிறது.
அடிக்க, அடிக்கத் தான் பந்து எழும். குமாரை ஓங்கி, ஓங்கி அடிக்கட்டும் மோடி அரசு, குமார் தயாராகட்டும். ஒரு எதிர்காலத் தலைவன் உருவாகட்டும்.
# புரட்சிக் குரல் ஒலிக்கட்டும், கருத்துச் சுதந்திரம் நிலைக்கட்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக