பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 நவம்பர், 2016

ஆனந்தம், விகடம் !

வீட்டிற்கு புத்தகம் வந்தால், யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் ஆரம்பித்து விடும். பத்தாவது பொதுத் தேர்வு காலத்திலும் இது தொடர்ந்தது. முடிந்தவரை முதலாவதாக அல்லது அடுத்ததாக அந்த வார இதழைக் கைப்பற்றி விடுவேன். அது அப்படி ஈர்க்கும், இப்போதும் 'சமயங்களில்' ஈர்க்கிறது. இதழை படித்தால் ஏற்படும் உணர்வும், நெகிழ்வும், மகிழ்வும் அப்படித் தூண்டும். அது தான் ஆனந்த விகடன்.

வடிவம் மாறியது போல், சில நேரங்களில் நிலைப்பாடும் மாறுவது உண்டு. அது போன்ற நேரத்தில் கண்டித்து கடிதம் எழுதியவன் தான் இந்த வாழ்த்தையும் எழுதுகிறேன். காரணம், என் ரசனையை மேம்படுத்தி, பரவலாக்கி, கூர்மையாக்கி, இன்றைய என் எழுத்துக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்ததில் இந்த "ஆனந்தவிகடனு"க்கும் பங்கு உண்டு.

சிறு வயதில் மாமா கே.ஆர்.பி.என். இராமசாமி அவர்களுடைய சிறு லைப்ரரி தஞ்சம் கொடுக்கும். அங்கு ஆனந்த விகடனில் வந்த தொடர்களை சேகரித்த பைண்டட் தொகுப்பு இருக்கும். அதில் இருக்கும் துணுக்குகளை படிக்கும் ரசனை தான் அப்போதும், இப்போதும்.  "ரெட்டை வால் ரெங்குடு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா" என்று எனக்கு சிரிப்புலகை திறந்து விட்டது இந்த 'ஆ.வி' தான்.

அடுத்தக் கட்டம் சுஜாதா காலம். அவரது எழுத்துக்களை வெகுசனத்திடம் கொண்டு சேர்த்ததில் 'ஆ.வி' பங்கு பெரும் பங்கு வகுத்தது. 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ' என வாத்தியார் சுஜாதாவின் அறிவியல் தொடர்களை படித்து அறிவியல் அறிவு மாத்திரமல்லாமல்,  எளிய தமிழையும் கற்றுக் கொண்டேன். இப்படியாக சுஜாதா விரல் பிடித்து நடை பழகிய பாதை 'ஆ.வி' தான்.

எல்லோரையும் கவர்வது சினிமா தான். அந்த சினிமாவிற்கு மார்க் கொடுத்து, ஆர்வத்தை தூண்டியது 'ஆ.வி' தான். ஒரு கட்டத்தில் ஆ.வி கொடுக்கும் மார்க்கே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பது போல ஆயிற்று. சில நேரங்களில் விமர்சனத்தில் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், ஆ.வி சினிமா விமர்சனம் அக்மார்க் முத்திரை ஆனது. மார்க் பார்த்து தான் படம் பார்ப்பது என்பது ஒரு தலைமுறையின் வழிமுறை.

'ஆ.வி' விழுதுகள் விட ஆரம்பித்தது.  முதல் விழுது ஜூனியர் விகடன் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. இடையில் வந்த 'ஜூனியர் போஸ்ட்' நின்றுப் போனது. ஆனால் அதற்கு பிறகு வந்த அத்தனை 'கிளை' இதழ்களும் தொடர்ந்து வந்து ஆனந்தவிகடனின் பெருமையை ஓங்க செய்து விட்டன. 'பசுமைவிகடனும்', நாணயம்விகடனும்' பலருக்கும் வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது. டைம்பாஸ் கூட ஆ.வியின் 'தழை தான்', கொஞ்சம் பச்சை.

பெரியவர் வாசன் காலத்தில், ஆனந்தவிகடன் இதழ் தாண்டி திரை உலகில் பிரவேசித்தார். " சந்திரலேகா" படம் எடுத்து பிரம்மாண்டத்திற்கு அளவுகோல் வகுத்தார். அதற்கு பிறகு இப்போது தொலைக்காட்சி தொடர்கள், சினிமா என்று விகடன் நிறுவனம் வளர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் "விகடன் தொலைக்காட்சி" உதயம் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அமைந்தது. ஆனால் இன்னும் தகையவில்லை. அப்படி ஒரு தொலைக்காட்சி வந்தால் சிறந்த "ஜனரஞ்சக தொலைக்காட்சி" யாக அமையும் என்பது பொதுக்கருத்து.

விகடனின் இலச்சினைக்கு தனி மகத்துவம் உண்டு. விகடன் தாத்தா முகம், பெயரில் இருக்கும் ஆனந்தத்தையும், விகடத்தையும் தாங்கியுள்ளது. தாத்தா தலையில் இருக்கும் கொம்பு யாருக்கும் அஞ்சோம் என்பதைக் காட்டுகிறது. சில சமயம் அது குடுமியாக செயல்படும் போது தான் வருத்தம் தருகிறது.

கலை, கவிதை, கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, அரசியல், சினிமா என பல்வேறு தலைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு ஜனரஞ்சக இதழாக வரும் ஆனந்தவிகடன் சில நேரங்களில் தடம் மாறும் போது, வாசிப்பாளர்கள் விடுவதில்லை. நேயர்களின் 'சுக்கான் அசைப்பிற்கு' ஏற்ப ஆனந்தவிகடன் பாதையை அமைத்துக் கொண்டால்,   90ம் ஆண்டை  தாண்டும் 'ஆ.வி' 200ஐ தாண்டும் என்பது உறுதி.  தாண்ட வேண்டும் என்பது எமது விருப்பமும் கூட.

பலரின் ரசனையை மேம்படுத்திய விகடன், இன்னும் பணியை தொடர வேண்டும். தரம் குறையாமல், மற்றவரின் மனத் தரம் உயர உழைக்க வேண்டும். தலைவர் கலைஞர் வாழ்த்துக்களோடு நம் வாழ்த்துகளையும் இணைக்கிறோம். மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் வாழ்த்தினார் கலைஞர், பத்திரிகை சுதந்திரம் வாழ்ந்திட. பத்திரிக்கை சுதந்திரம் வாழ்க, கலைஞர் மீதான விமர்சனம் தொடர்ந்திட. பத்திரிகை சுதந்திரம் வாழ்க, விகடன் வாழ்க !

# பல நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன் விகடனை, தமிழின் 'பல்சுவை' உணர்த்திட !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக