பல்கலைக்கழகம் போன புதிதில் ஒரு கூட்டம் "இங்கிலீஷ் பில்ம்ஸ்" குறித்தே பேசி 'பீட்டர்' விடுவார்கள். பட்டிக்காட்டில் இருந்து போன நமக்கு இங்கிலீஷ் படம் பார்த்த அனுபவம் கிடையாது. அப்போது வெளிநாட்டு படங்கள் எல்லாமே நமக்கு இங்கிலீஷ் படம் தான். ஒரு நாள் (சிதம்பரம்) புளுடைமண்ட் தியேட்டரில் இங்கிலீஷ் படம் என்றார்கள். பீட்டர் விடாத நண்பர்கள் கிளம்பினோம்.
இங்கிலீஷ் படம் நாமும் பார்ப்போம் என தியேட்டர் உள்ளே நுழைந்து, அவரது ரசிகராக வெளியே வந்து சேர்ந்தோம். போஸ்டரில் பார்க்கும் போது, ஹீரோவுக்கான கட்டுமஸ்தான உடல் இல்லை, உயரம் இல்லை, லுக் இல்லை அவருக்கு. அப்போது ஆங்கில பட ஹீரோக்கள் என ஆர்னால்ட் ஷிவார்ஸ்னெகர், சில்வஸ்டர் ஸ்டாலோன் ஆகியோரை 'வெல் பில்ட்டாக' பார்த்து பழகிய கண்களுக்கு, இவர் சிறுபிள்ளையாக தோன்றினார்.
தியேட்டருள் நுழைந்தோம். படம் துவங்கியது. ஒரு காட்டுப் பிரதேசம். பழங்குடி மக்கள் குழுமியிருக்கின்றனர், ஒரு பெரிய கடவுள் சிலை முன். காட்டுவாசி நடனம். அப்போது ஒரு சிறு குகை போன்ற இடத்தில் ஒரு கல்லை உடைத்துக் கொண்டு இரண்டு கால்கள் நுழைகின்றன. தியேட்டரில் விசில் பறக்கிறது. தமிழ் ஹீரோ அல்லாத ஒருவருக்கு அப்படி ஒரு வரவேற்பை அப்போது தான் நான் பார்க்கிறேன்.
காடுவாசி நடனத்தை அங்கிருந்து எட்டிப் பார்க்கிறார். அப்பாவியான முகத் தோற்றத்தோடு பாறையில் சாய்ந்து அமர்கிறார். ஒரு நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து கவலை கொள்ளாமல் ஹீரோ ஒரு அம்பை அந்த கடவுள் சிலையின் தலை மீது எய்து, அதனுடன் செலுத்திய கயிற்றை பிடித்து தொங்கி செல்கிறார். அந்த பழங்குடி கடவுளின் தலை ஹீரோ கால் பட்டு உடைந்து விழுகிறது. கடமையே கண்ணாக அங்கிருக்கும் வாளை எடுத்துக் கொள்கிறார்.
குனிந்து கும்பிட்டுக் கொண்டிருக்கும் பழங்குடிக் கூட்டம் அண்ணாந்து பார்க்க, ஹீரோவின் தலை கடவுளின் தலை இல்லா முண்டத்தின் தலையாக தோன்ற, அனைவரும் விழுந்து வணங்குகின்றனர், புதிய கடவுள் தோன்றியதாக. இயக்குநர் தெரிந்து தான் வைத்தாரோ அல்லது தெரியாமல் வைத்தாரோ தெரியவில்லை. அந்த ஹீரோ "ஆசிய சினிமா மார்க்கெட்டின் புதிய கடவுளாக" அவதாரமெடுத்தார்.
அது வரை ஆசிய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புரூஸ் லீ. ஒரு கட்டத்தில் உலகளாவிய மார்க்கெட்டாக விரிவடைந்தது. 1986ல் ஜாக்கிசான் ஆசிய சினிமாவின் புதிய சூப்பர் ஸ்டாராக உதயமானார். கிட்டத்தட்ட அப்போதே உலகளவிலும் பிரபலமானார், வசூலில் "புதிய கடவுளானார்". இதில் இன்னொரு சினிமாட்டிக் டச்'சும் உண்டு. புரூஸ் லீயை ஹீரோவாகக் கொண்ட திரைப்படத்தில், ஸ்டண்ட்மேன் ஆக தோன்றிய ஜாக்கிசான் பின்னர் அவர் இடத்தையே நிரப்பி விட்டார்.
நாங்கள் அன்று பார்த்த படம் "ஆர்மர் ஆப் காட்". படம் பார்த்த நாங்கள் வெளியே வரும் போது ஜாக்கிசானாகவே மாறிப் போனோம். திறந்திருந்த தியேட்டர் கதவை விடுத்து, பூட்டியிருந்த கதவை தாண்டிக் குதித்தோம். சைக்கிளை ஸ்டண்ட் போல வேகமாக மிதித்து ஹாஸ்டலை அடைந்தோம். அடுத்த ஒரு வாரம் எங்கு சென்றாலும் நடப்பது கிடையாது, ஓட்டம் தான், தாவிக் குதித்தல் தான். அந்த அளவுக்கு எங்களை பாதித்து விட்டார் ஜாக்கி.
காலம் மாறி எத்தனையோ ஹீரோக்கள் வந்து போய் விட்டார்கள். ஆனால் ஜாக்கி அதே வேகம் குறையாமல் சுவற்றை தாண்டி கொண்டிருக்கிறார், அந்தரத்தில் பறக்கிறார், விழுந்து எழுகிறார், மகிழ்வாய் சிரிக்கிறார். மற்றோரையும் சிரிக்க வைக்கிறார். இதற்காக அவர் தன் உடலை வருத்திக் கொண்டதற்கு அளவு கிடையாது, அவர் உடலில் எலும்புகள் முறிந்ததற்கு கணக்கு கிடையாது. அவரது ஒரே நோக்கம், தன் ரசிகர்களை மகிழ்விப்பது. என் மகனும் இன்று ஜாக்கியின் ரசிகர்.
தமிழகம், இந்தியா மாத்திரமல்ல, உலக அளவில் மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து மக்கள் மனம் கவந்தவர் நம் ஜாக்கிசான். அறுபத்து இரண்டு வயதானாலும் இன்றும் இளைஞர், இளைஞர்களின் நாயகன். 1962ல் நடிக்க ஆரம்பித்தாலும், 1980க்கு மேல் தான் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார். அதற்கு பிறகு உலக சூப்பர் ஸ்டார் தான்.
திரையுலகில் நீண்ட நெடிய பயணத்திற்காக கடந்தவாரம் ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறார்.
விருதை பெற்றவர்," திரை உலகில் 56 ஆண்டுகளுக்கு பிறகு, 200 படங்களை கடந்த பிறகு, எண்ணற்ற எலும்புகளை உடைத்துக் கொண்ட பிறகு, கடைசியாக இது என்னுடையதாகி இருக்கிறது", என்றார். அதிலும் காமெடி பன்ச்.
# அது தான் ஜாக்கிசான், அதனால் தான் அவர் ஜாக்கிசான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக