பிரபலமான இடுகைகள்

புதன், 2 ஆகஸ்ட், 2017

அதிகாரம் படுத்தும் பாடு !

அதிகாரம் படுத்தும் பாடு...

குஜராத் என்பது பாரதிய ஜனதாவின் கோட்டை என்பது அறிந்த உண்மையாகி விட்டது. ஐந்தாவது முறையாக அங்கே பா.ஜ.க ஆட்சி தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது.

அதில் தற்போதைய இந்தியப் பிரதம மந்திரி மோடி மூன்று முறை முதல்வராக இருந்தவர். அப்போது தான் குஜராத் பா.ஜ.கவின் கோட்டையாக்கப் பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித் ஷா.

மோடி - அமித்ஷா ஜோடி அங்கே காட்டிய வேகத்தை தேசிய அரசியலிலும் காட்ட விரும்பினார்கள். மெல்ல மோடி டெல்லியை நோக்கி நகர்ந்தார். அங்கே தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டவுடன், அமித்ஷாவையும் தேசிய அரசியலுக்கு இழுத்துக் கொண்டார்.

தங்கள் மேஜிக்கை தேசிய அரசியலிலும் வெற்றிப் பெற வைத்தார்கள். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றியை தக்க வைத்தது. இப்போது இந்த ஜோடி தான் இந்திய அரசியலின் அதிக அதிகாரம் பொருந்திய நபர்கள்.

அந்த அதிகாரத்தின் மூலமாக இன்னும் பல வெற்றிகளை மறைமுகமாகவும் குவித்தார்கள். கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. ஆனால், 13 இடங்கள் பிடித்த பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது, மத்திய அரசின் அதிகார பலத்தால்.

மணிப்பூரிலும் காங்கிரஸ் 28 இடங்களோடு முன்னால் இருந்தது. 21 எம்.எல்.ஏக்களோடு இருந்த பா.ஜ.க மோடியின் அதிகார பலத்தால், அமித்ஷாவின் இயக்கத்தில் ஆட்சியை பிடித்தது.

போன வாரத்தில் பிகாரில் நடந்தது நினைவுப்படுத்த வேண்டியதில்லை. ஓர் இரவில் ஆட்சி மாற்றம், பி.ஜே.பி கையில் லகான். அதிக இடங்கள் கொண்ட லாலு, குறைவான எம்.எல்.ஏக்களோடு இருந்த நிதிஷ்குமாரை முதல்வராக்கினார். அந்த நிதிஷை இழுத்து, பா.ஜ.க ஆதரவு கொடுத்து, முதல்வராக்கியது. பா.ஜ.கவிற்கு துணை முதல்வர். இனி அதிகாரம் பா.ஜ.கவிடம் தான், நிதிஷ்குமரால் அசைய முடியாது.

இந்த தொடர் கைப்பற்றல்கள், அதிகாரப் பசி கொண்ட மிருகமாக மாற்றி விட்டது பாரதிய ஜனதா கட்சியை,  அந்த ஜோடியை. இன்னும், இன்னும் வேட்டையாட வேண்டுமென ரத்தவெறி வந்து விட்டது. இந்த நேரத்தில் தான் அடுத்த தேர்தல் அறிவிப்பு.

பாராளுமன்றத்தின் ஓர் அவையான ராஜ்யசபாவுக்கான தேர்தல் குஜராத் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடமும் வெற்றி பெற வாய்ப்பு.

ஆனால் பா.ஜ.க மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாவது வேட்பாளர் வெற்றிக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதற்கான ஆட்டம் ஆரம்பித்தது.

முதலில் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைத்த இடைவெளியில் காங்கிரஸை பலவீனப்படுத்தும் வேலைகள் நடந்தன. காங்கிரஸ் ஏற்கனவே எழ முடியாத நிலை தான் குஜராத்தில் .

மோடியால் பா.ஜ.கவிலிருந்து விரட்டப்பட்ட தலைவர் சங்கர் சிங் வகேலா. தனி செல்வாக்கு மிகுந்த நபர். வெளியில் வந்தவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.

அவரை இப்போது காங்கிரஸிலிருந்து வெளியே இழுத்தார்கள். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்பட்டனர். ஆறு பேர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமித்ஷா வலையை வீச ஆரம்பித்தார். இருக்கும் எம்.எல்.ஏக்களை காப்பாற்றிக் கொள்ள, எல்லோரையும் கர்நாடகாவிற்கு விமானம் ஏற்றினார்கள். ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டார்கள்.

அடுத்த அதிகார அம்பு வீசப்பட்டது. "இந்த ராஜ்யசபா தேர்தலில் 'நோட்டா'வுக்கு ஓட்டு போடலாம்", என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போடும் தேர்தலில் 'நோட்டா' தேவை இல்லை. ஆனால் அதிகாரம் திணித்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்று மிருகம் பார்த்தது. கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் எம்.எல்.ஏக்கள், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் பாதுகாப்பில் உள்ளனர். சிவகுமார் கழுத்தை குறி வைத்துள்ளது மிருகம்.

எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் பணம் நடமாடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததாம். உடனே ரெய்டு நடந்தது. 10 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிடப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது, அதே எம்.எல்.ஏக்கள் " எங்களுக்கு பா.ஜ.க தரப்பில் கோடி கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசினார்கள்" என வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். அது வருமான வரித்துறை கண்ணில் படவில்லை.

கூவத்தூரில் தமிழக சட்டசபையை ஏலம் விட்டதை நாடே பார்த்தது. பத்திரிக்கைகள் எழுதின. ஊடகங்கள் 'லைவ்' காட்டின. ஒரு ச.ம.உறுப்பினரே பணம் கொடுக்கப்பட்டதை சொல்லி, அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியது. இதுவும் வருமான வரித்துறை கண்ணில் படவில்லை. இதை இன்று சுட்டிக்காட்டி தமிழக எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் கண்டித்தும் உரைக்கவில்லை மத்திய அரசுக்கு.

அந்த ஒற்றை ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற தேர்தல் தேதி மாற்றம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு வலைவீச்சு, நோட்டா ஓட்டு, வருமான வரித்துறை ரெய்டு என  அத்தனை அதிகாரத்தையும் பிரயோகித்துப் பார்க்கிறார்கள்.

அந்த இடத்தில் போட்டியிடுகிறவர் சோனியா அவர்களின் செயலாளர் அகமது பட்டேல். அவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் தான். புதிதாக பதவிக்கு வந்து தலைவலி கொடுக்கப் போகிறவர் அல்ல.

ஆனாலும் அந்த இடத்தை கைப்பற்ற இவ்வளவு பிராயத்தனங்கள்.

காரணம், அதிகார வெறி.

இதுவும் நல்லது தான். வெறி முற்றினால் எல்லோரையும் தாக்கும், உடன் இருப்பவர்களையும். அப்போது ஓர் முடிவு வரும். இது  இயற்கை நியதி.

இந்தத் தேர்தலில் குறி தப்பாமால் வெற்றி பெறலாம். எதிர்கட்சிகள் வீழ்த்தப்படலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத எதிரி உருவாவான். தொடர் வெற்றியில் ஓர் சின்ன சறுக்கல் கூட , அதலபாதாளத்தில் தள்ளும்.

# சின்ன அம்பு கூட வேட்டை வெறி  மிருகத்தை வீழ்த்தும் !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக