பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அரசாங்கம் லேவாதேவி தொழில் அல்ல


"இலவச தொகுப்பு வீடுகள் கூடாது. மான்யத்துடனான கடன் வழங்கக் கூடாது. இலவசத் திட்டங்களும், மானியங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு செலவு செய்யும் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளுக்கு இணையாக வசதிகளை செய்து முன்னேற்ற வேண்டும்", என முழங்கினேன்.

1996ல் உள்ளாட்சிப் பொறுப்பில் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வு பெற்றேன். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு பெற்றேன்.

முதல் கூட்டம். அரசுத் திட்டங்கள் குறித்து, கருத்து கேட்கப்பட்டது. அப்போது தான் எனது புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினேன்.

அப்போது என் வயது 26. கூட்டத்தில் இருந்த வயதில் மூத்தவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் புரட்சி வீரனாக நினைத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

அடுத்த மூன்று மாதத்தில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம், திருமணம், துக்கம் என கிராமங்களை சுற்றி வரும் சூழல். அதுவரை நான் மக்களை பார்த்த பார்வைக்கும், மக்கள் பிரதிநிதியாக அவர்களிடம் நெருங்கிப் பழகிய பிறகான பார்வைக்கும் வித்தியாசம் ஏற்பட்டது.

மக்கள் வாழ்சூழல், வறுமை, குடும்பப் பிரச்சினைகள், அதனாலான பொருளாதார தாக்கங்கள் என நேரடிப் பாடம் கற்றேன். நான் முதல் கூட்டத்தில் பேசியதை நினைத்து வெட்கிப் போனேன்.

வறுமையை ஒழிப்பதும், எல்லோருக்கும் கல்வியை அளிப்பதும், வேலையை உறுதிப்படுத்துவதும் ஒரு நீண்டப் பயணம். அதுவரை சமூக நலத்திட்டங்கள் தொடரத்தான் வேண்டும் என்பதை மெல்ல உணர ஆரம்பித்தேன்.

வறுமை ஒழிப்பு திட்டங்கள், மானியம் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை நிறுத்தும் போது, சிலர் அதை வழிமொழிவது பரவாயில்லை. ஆனால் அதை பெறுபவர்களை பிச்சைக்காரர்கள் கண்ணோட்டத்தில் பார்த்து எள்ளி நகையாடுவது மிருகத்தனம்.

இப்போது, ரேசன் அட்டை கிடையாது என்பதற்கு அரசு சொல்லியிருக்கிற கட்டுப்பாடுகள் தவிர்த்து இன்னும் 10 சதவீதம் பேரே எஞ்சியிருப்பார்கள். மீதம் உள்ளோர் 90 சதவீதம் பேரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்களா ?

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாதாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் என்றால், மாதம்  எட்டாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று ரூபாய்.

வெளி மார்க்கெட்டில் அரிசி, ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூபாய் முப்பது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் அரிசிக்கே போய் விடும். மளிகை செலவு, பிள்ளைகள் செலவு, மின்சாரம், மருத்துவ செலவு, உறவுகளில் திருமணம், சாவு  நிகழ்ச்சிகள் இப்படின்னு பட்டியல் போட்டுகிட்டு போனா இந்த எட்டாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று ரூபாயில் என்ன செய்ய முடியும்.

கிராமத்தில் இந்த நிலை என்றால், சென்னை போன்ற நகரங்களில் ஒண்டுக் குடித்தனத்தில் இருப்பவர்கள் இருபதாயிரம் மாத வருமானம் இருந்தாலும், ரேசன் கடை பொருட்கள் இல்லை என்றால் அபாயகர நிலை தான். இங்கு வாடகை, போக்குவரத்து செலவு வேறு கூடுதலாக சேரும்.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாதாம். விவசாயம் வருடா வருடம் அள்ளிக் கொடுக்கிறதா?. சில ஊர்களில் நிலங்கள் கருவேலமரம் முளைப்பதற்கே லாயக்காக இருக்காது. அவர்களும் வசதியானவர்களா?

ரேசன் கடை என்பது ஏதோ மானிய விலையில் பொருட்களை விற்கவும், இலவசமாக அரிசியை கொடுக்கவும் மாத்திரம் இருக்கும் கடை அல்ல.

வெளி மார்க்கெட்டில் அத்தியாவசியப் பொருட்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படும் போதும், பொருட்களைப் பதுக்கி விலையேற்றி விற்க பெரு முதலாளிகள் முனையும் போதும், நாட்டின் குடிமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு ரேசன் கடைக்கு தான் உண்டு. எனவே ரேசன் கடை நடத்துவது அரசின் கடமை.

அரசு என்பது வரி வசூலித்து, முதலீடுகள் செய்து, லாபம் பார்க்கும் லேவா தேவித் தொழில் அல்ல. நாட்டின் குடிமக்களுக்கு இருப்பிடம், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க பாடுபட வேண்டிய சேவை அமைப்பே அரசு. இஃதன்னியில் அடிப்படை வசதிகள் மேம்பாடு, போக்குவரத்து வசதி என சேர்த்துக் கொண்டே போகலாம், தேவைக்கேற்ப.

ஆனால் எல்லா அரசு சேவைத் துறைகளையும் ஊற்றி மூடி,  கார்ப்பரேட்களிடம் ஒப்படைத்து, அவர்களிடம் கையேந்த வைத்து விடுவார்கள் போல.

இந்த சட்ட திட்டங்களை போடும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஓரறை கொண்ட கிராமத்து குடிசையில், மாதம் எட்டாயிரம் செலவுக்கு கொடுத்து குடும்பத்தோடு தங்க வைக்க வேண்டும், ரேசன் கடை இல்லாமல்.

அரசு என்பது மக்களுக்காக, மக்களுக்காக மட்டுமே

# புரிந்தவன் தான் மனிதன் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக