பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பவளவிழா முரசொலிக்கு

18 வயதில், எதிர்கால திட்டமிடலில் கல்வியில் கவனம் பாயும். அல்லாதோருக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மிகும். சிலருக்கு விளையாட்டில்  கவனம் திரும்பும்.

அந்த சிறுவனுக்கு தமிழ் மீதும், அரசியல் மீதும், எழுத்தின் மீதும் ஆர்வம் திரும்பியது. அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் வகையில் பத்திரிகை துவங்க திட்டமிடுகிறார்.

அன்றைய அவருடைய பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு, கையெழுத்துப் பத்திரிக்கையை துவக்குகிறார். 18 வயதில் பத்திரிக்கை நிறுவனர் "கலைஞர்".

பத்திரிக்கைக்கு பெயர் சூட்ட வேண்டும்.  துவங்கும் போதே, போர் அறிவிப்பு ஒலியை நினைவில் நிறுத்தி பெயர் சூட்டுகிறார். அப்போது இந்திக்கு எதிரான போர் முரசு தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த நேரம்.

அதை ஒட்டிய பெயராக "முரசொலி" என சூட்டுகிறார். அன்றிலிருந்து சமூக அவலங்களுக்கு எதிராக அந்த முரசு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இன்றும்.

மெல்ல வளர்ந்து வரும் சூழலில் முரசொலியை துண்டறிக்கையாக அச்சிட்டு வெளியிடுகிறார், அதன் நிறுவனரான தலைவர் கலைஞர். பின்னர் மாத இதழாக மலர்ந்தது முரசொலி.

அடுத்து வார இதழானது முரசொலி. அடுத்தக் கட்ட வளர்ச்சியாக நாளிதழாக உருவெடுத்தது. அதன் ஒவ்வொரு படி வளர்ச்சியையும் திட்டமிட்டு செயல்படுத்தினார் நிறுவனர் கலைஞர்.

தலைவர் கலைஞரும் அரசியல், கலை உலகம் என பயணித்துக் கொண்டிருந்தார். அவரும் படிப்படியாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" மூலம் திரை உலகில் முத்திரை பதித்தார்.

படத்திற்கு கலைஞர் எழுதிய அனல் பறக்கும் வசனங்கள் திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்தன. அந்த திரைக்கதை வசனங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது. அதன் விற்பனை உச்சம் தொட்டது.

வசனப் புத்தகத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு, சென்னையில் முரசொலிக்கு அச்சகம் திறந்தார். நாளிதழாக கழகத்தின் கொள்கைகளை கழகத் தோழர்களிடம் கொண்டு சேர்த்தது முரசொலி.

அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள் பல இதழ்களை நடத்தி வந்தனர். அதில் இன்றும் வெற்றிகரமாக நடக்கும் ஒரே பத்திரிக்கை 'முரசொலி' மட்டும் தான்.

ஏன், தலைவர் கலைஞரே பல பத்திரிக்கைகளை துவக்கி நடத்தியவர், பல பத்திரிக்கைகளை துவக்க காரணமாக இருந்தவர். ஆனால் அவற்றிலும் 'முரசொலி' தான் தொடர்ந்து ஒலிக்கிறது.

ஒரு பத்திரிக்கை தொடங்கி நடத்துவது சாதாரண செயல் கிடையாது. பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம். நாளிதழுக்கு தினம் செய்திகளை தொகுத்து வெளியிடுவது சிரமம்.

வெகுஜனப் பத்திரிக்கை என்றால், அரசியல், பொழுதுபோக்கு, கலை, இலக்கியம், ஜோதிடம் என கலந்துக் கட்டி சமாளித்து விடலாம். ஒரு இயக்க செய்திகளை மாத்திரம் வெளியிட்டு, கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் நாளிதழை நடத்துவது மிகச் சிரமம்.

அதையும் 75 வருடம் நடத்துவது மிகப் பெரும் சாதனை. அந்த சாதனையை செய்தவர் தலைவர் கலைஞர். அதிலும் துவங்கிய நாளில் இருந்து, 75வது வருடம் வரை நிறுவியவரே நிர்வகிப்பது பெரும் சாதனை ஆகும்.

கையெழுத்து பத்திரிக்கையாக துவங்கிய போது எப்படி கண்ணும் கருத்துமாக முரசொலியை கவனித்தாரோ, முதலமைச்சராக இருந்த போதும் கவனித்தார், உடல் நலம் குன்றும் வரையிலும் தொடர்ந்து கவனித்தார்.

உடன்பிறப்பு கடிதம், கேள்வி பதில் என கலைஞரது நேரடி பங்களிப்பு இருக்கும். அதல்லாமல் கேலிச்சித்திரங்கள், எதிர்கட்சி நாளிதழ் மற்றும் தலைவர்களின் தாக்குதலுக்கான பதில் செய்தி என அவரது மறைமுக பங்களிப்பு இருக்கும்.

சாதாரண ஒரு தி.மு.க தொண்டர் கூட மாற்று அரசியல் கட்சித் தலைவரின் சவாலுக்கு பதில் சொல்லும் திறன் உள்ளவர்கள் என்று வியக்கப்படுவதுண்டு. அதற்கு முழு முதற் காரணம், முரசொலி தான். முரசொலி படித்தாலே தயாராகி விடலாம்.

காலை முரசொலி அலுவலகத்திற்கு சென்று கடிதம் எழுதி விட்டு, அன்றைய நாளிதழை வடிவமைத்து விட்டு வருபவர், மாலை முதல் இதழ் அச்சான உடன் அதைப் பார்த்தால் தான் மற்ற பணிகளுக்கு செல்வார். அவரது அந்த கடமை உணர்வு தான் முரசொலியின் வெற்றி.

முரசொலியின் வெற்றி  கலைஞரின் வெற்றி. அந்த அளவிற்கு கலைஞர் வேறு, முரசொலி வேறு என்று பிரிக்க முடியாது. கலைஞரின் வார்த்தையில் சொல்வதானால், "முரசொலி கலைஞரின் மூத்தப் பிள்ளை".

அந்த மூத்தப் பிள்ளை தான், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர், பள்ளிக் கூடம், பல்கலைக்கழகம். முரசொலியை மாணவனாக வணங்குகிறேன்.

# தொடர்ந்து முரசு ஒலிக்கும், காலமெல்லாம் !

_எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக