பிரபலமான இடுகைகள்

தி.மு.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.மு.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அன்பான தளபதி

நேற்றிரவு மணி 10.45 அலைபேசி அழைத்தது. அய்யா துரைமுருகன் அவர்களது எண். "மாவட்ட ஷெயலாளரா?". " ஆமாங்கய்யா". "தளபதி பேசுறாங்கப்பா". அலைபேசி கைமாறியது.

"சங்கர், எங்க இருக்கீங்க?", தளபதி அவர்கள் தான். "அரியலூர்ல இருக்கன் அண்ணா". "அப்பா ஊர்ல இருக்காங்களா?". "இருக்காங்க அண்ணா". "கும்பகோணம் வர்றேன் காலையில. அப்பாவ பார்க்க வர்றேன்". "சரிங்க அண்ணா".

அய்யா கோ.சி.மணி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு கும்பகோணம் வந்துவிட்டு சென்னை செல்லும் போதும் அப்பாவை சந்திக்க முயற்சித்தார். அப்போது அப்பா ஹைதராபாத் செக்கப் சென்றிருந்தார்கள்.

அடுத்து செந்துறை அருகே, கொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு ஆறுதல் கூற வந்த போதும், கும்பகோணத்தில் சொன்னார், " சங்கர், ஆண்டிமடம் போய் அப்பாவ பார்த்திடலாம்". "அப்பா திருச்சி அப்போலோவுல இருக்காங்க அண்ணா".

திருச்சியிலும் அப்பாவை பார்க்க முயற்சித்தார். அண்ணன் நேரு இல்ல திருமண நேர நெருக்கடியில் சந்திக்க இயலவில்லை. இப்போது கும்பகோணம் பயணம் என்றவுடன் உடனே திட்டமிட்டு விட்டார், அப்பாவை சந்திக்க.

காலை உளுந்தூர்பேட்டை சென்றேன். ச.ம.உ அண்ணன் உதயசூரியன், மா.செ அங்கயற்கண்ணி ஆகியோரோடு வரவேற்பு கொடுத்தோம். தளபதி அவர்களது வாகனத்தில் அண்ணன் கு.க.செல்வம் அவர்களோடு, அண்ணன் உதயசூரியனும் நானும் பயணித்தோம்.

விருத்தாசலத்தில் வரவேற்பு கொடுத்த மா.செயலாளர் கணேசன், ச.ம.உ உடன் இணைந்தார். ஆண்டிமடம் பயணித்தோம். வழியெங்கும் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு நிகழ்ச்சிகள்.

ஆண்டிமடம். வீட்டு வாயிலில் கழகத் தோழர்கள் குவிந்திருந்து வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

கடந்த நான்கு மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்ததால் அப்பா மெலிந்து விட்டார்கள். களைப்பாகவும் இருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,"நீங்க உக்காருங்கண்ணா" என்றார்.

"எப்படி இருக்கீங்கண்ணே?". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள். "தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க", என்றார் என் அம்மா. "தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்", என்றேன்.

உடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே," சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.

அப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. "அம்மா, அப்பாவ பார்க்கும் போது", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம்.

படத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, " தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.

அப்பாவின் சிகிச்சை நிலை, உணவு ஆகியவற்றை குறித்து விசாரித்தார்கள் தளபதி அவர்கள். உடனே அப்பா ,"கிளம்பலாமா?" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. "எங்கப்பா?" என என் தம்பி சிவக்குமார் கேட்க, "கூட்டத்துக்கு தான்" என்றார்கள் அப்பா. 

"மாலையில் தான்ணா கூட்டம். வெயிலா இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு  மாலை
வாங்க. நான் முன்னாடி கும்பகோணம் கிளம்புறேன்" என்றார்கள் தளபதி.

அப்பா கண்ணீர்  பெருக்கோடு விடைகொடுக்க, "ஏன்ணா இதுக்கா நான் வந்தேன். நீங்க சந்தோஷமா, தெம்பா இருக்கணும் தானே பார்க்க வந்தேன். நல்லா இருப்பீங்க" என கையை பிடித்து சொல்ல, அப்பாவுக்கு ஆறுதல். இது மிகுந்த தெம்பை தரும்.

1989ல் அப்பா எஸ்.சிவசுப்ரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். பொது நிறுவனங்கள் குழுத் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர். குழுவின் உறுப்பினர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது, தளபதி அவர்களை அழைத்து வந்து, கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அப்பா. அப்படி நீண்ட கால உறவு இது.

கார் கிளம்பியது. முகநூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நினைவை காட்டியது. அப்பா ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை வந்த போது, தளபதி அவர்கள் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்த நாள் இன்றாம்.

"மணியண்ணன் வீடு மயிலாடுதுறை வழியில தானே சங்கர். கும்பகோணம் போனா அவர் தான் முன்னாடி நின்னு வரவேற்பார்", என்று மறைந்த அய்யா கோ.சி.மணி நினைவில் மூழ்கினார் தளபதி.

போகின்ற வழியெங்கும் இருக்கும் கழகத்திற்கு உழைத்த முன்னோடிகளை நினைவில் கொண்டு, அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கும் தளபதி அவர்களின் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. மறைந்த முன்னோடிகளையும் நன்றியோடு நினைவு கூறும் பண்பு இளைய தலைமுறைக்கு பாடம்.

# அன்பான, பண்பான, பாசத் தளபதி வழிகாட்டுகிறார் !

புதன், 1 ஏப்ரல், 2015

நெகிழ வைத்த தலைவர் !

தளபதி அவர்கள் காரில் இருந்து இறங்கும் போதே, “என்ன ஆச்சி?” என்று கேட்டார். கொறடா அண்ணன் சக்கரபாணி,”கேட்டிருக்கோம் அண்ணா. தயங்கறார். ஆனா சரியா வரும்னு நினைக்கிறேன்” என்றார்.

காலையிலேயே சட்டமன்ற திமுக அலுவலகத்திற்கும் சபாநாயகர் அறைக்குமாக பரபரப்பாக சென்று வந்துக் கொண்டிருந்தார் அண்ணன் கொறடா. இது நேற்று (31.03.2015) நடந்த நிகழ்வு.

தளபதி அவர்கள் உடன் வந்த முன்னாள் அமைச்சர் அண்ணன் ஏ.வ.வேலு இப்போது சபாநாயகர் அறை நோக்கி சென்றார். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம் சிலர்.

அரசின் நிதிநிலை அறிக்கை மீது தளபதி அவர்களது உரை அன்று.

புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த எங்களை தளபதி நோக்கினார். “நான் இன்று உரையாற்றும் நேரத்தை, சற்று முன்னரே வழங்கக் சபாநாயகரிடம் கேட்க சொல்லியிருக்கிறேன்.”

“நேற்று நம்முடைய வாணியம்பாடி நகர் செயலாளர் சிவாஜிகணேசன் விபத்தில் இறந்து விட்டார் அல்லவா. அவரது இறுதி ஊர்வலம் மாலை 04.00 மணிக்கு. சட்டமன்றத்தில் உரையாற்றி விட்டு அதற்குள் சென்று விட வேண்டும். அதற்காகத் தான் சபாநாயகரிடம் கேட்கச் சொன்னேன்”.

“சிவாஜிகணேசன் மூன்று, நான்கு முறை நகர செயலாளர். ஒரு முறை நகர் மன்றத் தலைவர். கடுமையான உழைப்பாளி. தனக்கு என்று ஒரு மரியாதை பெற்றவர்” என்று அவர் குறித்த நினைவுகளில் மூழ்கினார் தளபதி.

“கொள்கை முரசு நாகூர் அனிபா, வாணியம்பாடி இடைத்தேர்தலில் ஒரு முறை கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. உடனே அவரை லாரி மீது உட்கார வைத்து, அவர் பாடிய பாடல்களை ஒலிபரப்பி சமாளித்தவர் சிவாஜிகணேசன்”

“தற்போது நடைபெற்ற கழகத் தேர்தலின் போது, சிவாஜிகணேசனை அழைத்து சில ஆலோசனைகளை சொன்னேன். முதலில் வருத்தப்பட்டு பேசி விட்டார். பிறகு அவரே அழைத்து, நீங்கள் சொன்னது தான் கழக வளர்ச்சிக்கு சரி என்று ஒப்புக் கொண்டார்” என அவரது புகழ்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

தொண்டன் புகழ் பாடும் தலைவர்.

இதற்குள் அண்ணன் ஏ.வ.வேலு திரும்பினார். “கொடுக்கலாம்னு நினைக்கிறார். ஆனா மற்ற கட்சிக்காரங்க ஒத்துக்குவாங்களான்னு யோசிக்கிறார்” என்றார். டி.ஆர்.பி ராஜாவோ, ”வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை” என்றார்.

“நாளை சென்று விசாரித்துக் கொள்ளலாம்” என ஒருவர் கருத்து தெரிவிக்க, மறுத்தார் தளபதி. “எவ்வளவு நேரமானாலும், இறுதிச் சடங்கு முடிந்தாலும் அவர்கள் வீட்டுக்கு சென்று வந்து விட வேண்டும். அது தான் நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை” என்றார்.

நிலைமையை வாணியம்பாடியில் இருந்த அண்ணன் துரைமுருகனிடம் எடுத்து சொன்னார் ஏ.வ.வேலு. சிவாஜிகணேசனது இரண்டு மகன்களும், எத்தனை மணிக்கு தளபதி வந்தாலும், பிறகு தான் இறுதி ஊர்வலம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அவை கூடியது. தே.மு.தி.க உறுப்பினர்கள் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என தளபதி கோரினார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தார்கள். அரசு ஏற்கவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

கழக அலுவலகத்தில் அமர்ந்து தேநீர் அருந்தினோம். “நீங்க சாப்பிட்டு விட்டு வாங்க. நான் முன்னே செல்கிறேன். எப்படியாவது பேசிவிட்டு, வாணியம்பாடி செல்ல வேண்டும்” என கிளம்பி அவைக்கு சென்றார் தளபதி.

நிதிநிலை மீது உரையாற்றுவது மிக முக்கியமானது. அது மக்களுக்கானப் பணி. சிவாஜிகணேசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது அவசியமானது. இது கழகத் தோழர்களுக்கு கொடுக்கும் மரியாதை. இரண்டையும் செய்துவிட வேண்டும் என்ற அவரது தவிப்பு புரிந்தது.

முதலில் செ.கு.தமிழரசன் பேசினார். பிறகு ஒரு அதிமுக உறுப்பினர் பேசினார். அடுத்து மற்ற எதிர்கட்சியினர் பேசி, தளபதி அவர்கள் பேச வேண்டும். ஒரு வழியாக சபாநாயகர் பேச அனுமதித்தார். முன்னதாக பேச அனுமதித்த சபாநாயகருக்கு நன்றி தெரிவித்து, தனது உரையை துவங்கினார் தளபதி.

ஆணித் தரமான வாதங்கள். ஒவ்வொரு வரிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும் எழுந்து, இடைமறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் தளபதியின் கேள்வியில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தடுமாறிப் போனார். அருமையான வாதம். மக்கள் பணி முடித்தார்.

கிளம்பினார் வாணியம்பாடிக்கு, தொண்டன் சிவாஜிக்கு மரியாதை செலுத்த. தலைவன் வருகைக்காக அங்கே எல்லோரும் காத்திருந்தார்கள், சிவாஜியும்.

# தொண்டனுக்கானத் தலைவர் !

புதன், 12 நவம்பர், 2014

தளபதி ஆய்வு மற்றும் கலந்துரையாடல் - 3

(தொடர்ச்சி-2)

            

அடுத்த சுற்று ஒன்றியக்கழக செயலாளர்கள் மற்றும் நகரக் கழகச் செயலாளர்களுக்கானது. இந்த சுற்றில் கலந்து கொண்டவர்கள் பேசவில்லை. தளபதி மட்டுமே பேசினார்கள். அதே போல மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட சுற்றிலும் தளபதி அவர்கள் மட்டுமே பேசினார்கள்.

காரணம் இவர்கள் எல்லோரும் தளபதி அவர்களுடன் மற்ற நேரங்களில் சந்திக்க அதிகம் வாய்ப்புள்ளவர்கள். அதனால் தான், அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாத கிளைக்கழக நிர்வாகிகளுக்கு கலந்துரையாட அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற சுற்றில் கிடைத்த தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள் தளபதி அவர்கள். அடித்தளமாக விளங்கும் அவர்களது எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் ஈடேற்றுகிற அளவிற்கு நிர்வாகிகள் செயல்படக் கேட்டுக் கொண்டார்கள்.

கழகத்தவர் மற்றும் பொதுமக்கள் இல்ல நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்தவர்களை அன்போடு நலம் விசாரித்தார் தளபதி அவர்கள். அவர்களும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள் தளபதியிடம்.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட எங்கள் மாவட்டத்தின் மூத்தவர் மு.கந்தசாமி அவர்களுக்கு தளபதி அவர்கள் வேட்டி அணிவித்து மரியாதை செய்தார்கள் . இவர் வயது 102. செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய செயலாளர். மூன்று முறை ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர்.

              

பெரம்பலூருக்கு தளபதி அவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததில் இருந்தே ஆர்வத்தோடு தயாராகி விட்டார் அய்யா கந்தசாமி. ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க சிரமப்பட்டாலும் தளபதி அவர்கள் நிகழ்ச்சி என்றவுடன் ஒரு இளைஞரைப் போன்று துடிப்போடு வந்து விட்டார்.

அவர் தளபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து பரவசப்பட்டக் காட்சி மறக்க இயலாதது. கழகத் தொண்டர் என்ற உணர்வோடு அய்யா கந்தசாமி அவர்கள் தளபதியை சந்தித்தது குறித்து மகிழ, மூத்த கழகத் தோழரை மரியாதை செய்வித்து தளபதி மகிழ கூடியிருந்த எல்லோரும் நெகிழ்ந்து போனோம்.

அடுத்த சுற்றில் கட்சி சார்பற்ற நான்கு தொழிலதிபர்கள், இரண்டு டாக்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இயங்கக்கூடிய நான்கு பேரை சந்தித்தார் தளபதி. பொது நிலையில் இயங்கக்கூடிய அவர்களது கருத்துகளை கேட்டு அறிந்தார்.

கடைசியாகப் பொது உறுப்பினர்கள் கூட்டம. கலந்துரையாடலின் போது கழகத் தோழர்களின் உரையின் போது, தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை, யார் சொன்னார்கள் என்று பெயர் குறிப்பிட்டு, தளபதி அவர்கள் தன் உரையில் பேசினார்கள்.

               

அந்த தோழர்களுக்கு எல்லாம் எல்லை இல்லா மகிழ்ச்சி. அடிமட்டத் தொண்டன் சொன்ன கருத்தை தளபதி கூட்டத்தில் எடுத்துரைத்து பாராட்டுகிறார் என்றால் அதற்கு மேல் என்ன வேண்டும்?

தொண்டர்கள் கருத்தைக் கேட்ட நிறைவோடு தளபதி அவர்களும், தங்கள் கருத்தைக் காது கொடுத்து கேட்கும் தலைவனை பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடு கழகத் தோழர்களும் அடுத்த இலக்கை நோக்கியப் பயணத்தை துவக்கினார்கள்.

# இதன் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் !

திங்கள், 10 நவம்பர், 2014

தளபதி ஆய்வு மற்றும் கலந்துரையாடல் - 2

“ஒவ்வொருவராக கருத்து சொன்னோம். இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டார். முடிக்கும் போது ‘இன்னும் ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் பேசியதை ஓரமாக உட்கார்ந்திருந்தவர் குறிப்பு எடுத்துக் கொண்டார்”

       

“நாங்கள் கூட போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் இவ்வளவு நேரம் எங்களோடு செலவிடுவார் என நினைக்கவில்லை” என்றனர் ஆய்வில் கலந்து கொண்ட மாணவர்கள்.

அடுத்து கழக இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி தோழர்கள் கலந்து கொண்ட ஆய்வு. எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். எல்லோருடையக் கருத்துகளும் குறிப்பெடுக்கப்பட்டிருக்கிறது, சகோதரர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால்.

அடுத்து மகளிரணியை சேர்ந்தோர் மட்டும். இவர்களில் யார் கலந்து கொள்வது என்பதை, நிர்வாகிகள் பட்டியலை கொண்டு ரேண்டம் முறையில் தேர்ந்தெடுத்து, தலைமைக் கழகத்தில் இருந்தே நேரடியாக அழைப்பு அனுப்பப் பட்டது. அப்போது சிலருக்கு வெளி உலகமே தெரியாதே, இவர்கள் தளபதி முன்னால் எப்படி பேசப் போகிறார்களோ என்ற கமெண்ட்டும் எழுந்தது. ஆனால் இந்தப் பெண்கள் தான், பொதுமக்கள் கருத்தை அப்படியே பிரதிபலித்திருகிறார்கள், “எது தேவையோ அதை”.

இன்னும் தளபதி அவர்கள் வார்த்தையில் சொன்னால், “நான் இப்போ தான் முதன்முதலா மைக்ல பேசறேன். தப்பிருந்தா மன்னிச்சுக்குங்க என்று ஆரம்பித்த பெண் சிறப்பாக பேசினார். முதலில் பேசவே தயங்கிய பெண்கள், மற்றவர்கள் பேசியதை பார்த்துவிட்டு பிறகு மைக் வாங்கி நல்ல கருத்துகளை வழங்கினார்கள்”

அடுத்த சுற்று கிளைக்கழக நிர்வாகிகள். இவர்கள் தான் கழகத்தின் அடித்தளம். இவர்கள் தலைமையை சந்திக்க வாய்ப்பே இல்லாதவர்கள். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றி வலு சேர்க்கிறவர்கள். இவர்களோடு அதிக நேரம் செலவிட்டார் தளபதி.

மேலமைப்பு நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும், கழகம் எப்படி தேர்தலை எதிர் கொள்ள வேண்டும், மக்களை எப்படி அணுக வேண்டும் என்று கள நிலவரத்தோடு அவர்கள் சொன்னதை உன்னிப்பாக உள் வாங்கிக் கொண்டார், என்பதில் அவர்களுக்கு ஆனந்தம்.

அதைவிட ஆனந்தம் ஒன்று அவர்களுக்கு. தங்கள் வாழ்நாளில் தலைவர், தளபதியோடு புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, தளபதியே அழைத்து ஒவ்வொருவருடனும் தனியாக நின்று, அவர்கள் தோளில் கைப்போட்டுக் கொண்டு ஃபோட்டோ எடுத்து, அதை அங்கேயே பிரிண்ட் போட்டு கையில் கொடுக்க, வாழ்நாள் மகிழ்ச்சி அவர்களுக்கு.

       

அடுத்து ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டார்கள். அவர்களோடும் அதிக நேரம் செலவிட்டார்கள் தளபதி அவர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் சில கருத்துகள் திரும்ப, திரும்ப சொல்லப்படும். ஒருவர் பேசியதையே இன்னொருவர் வேறு வடிவத்தில் சொல்வார், பொருள் ஒன்றாக இருக்கும்.

அது போன்ற நேரங்களில் நாமாக இருந்தால், “புரியுது. அடுத்த விஷயத்திற்கு போங்க” என்று சொல்லி விடுவோம். ஆனால் தளபதி அவர்கள் பொறுமையாக, உன்னிப்பாக, முகம் சுளிக்காமல் அனைவர் கருத்தையும் கேட்டுக் கொள்வது தான் இந்த ஆய்வின் வெற்றியே.

அடுத்த சுற்று....
(தொடரும்)

புதன், 22 அக்டோபர், 2014

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....

மகராஷ்டிர தேர்தல் முடிவுகளை ஒட்டி  தமிழ் நாளிதழ்கள் ஒரு “பெரிய சாதனையை” பாராட்டி எழுதியுள்ளார்கள். சாதனை தான். மகிழ்ச்சி தான்.

19.10.2014 அன்று மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் தான் அந்த சாதனை. இதில் சங்கோலா என்ற தொகுதியில் இருந்து கண்பத் ராவ் தேஷ்முக் 11 முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். சாதனை தான்.

      

ஆனால் இன்னொருவர் சாதனையை மறந்து விட்டார்கள், வசதியாக. காரணம் அவர் தமிழர். அதிலும் திமுக-வின் தலைவர். கலைஞர் என்றால் சாதனை கூட மறந்து போகிறதே. மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தது கூட கண்ணுக்கு படாமல் போகிறது.

1957-ல் அந்த வெற்றி சரித்திரம் துவங்கியது. முதல்முறையாக குளித்தலையில் 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்து 1962-ல் தஞ்சாவூரில் பெரும் பணக்காரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி திமுகவின் முதல் அமைச்சரவையில், அண்ணா தலைமையில் அமைச்சரானார். மீண்டும் 1971-ல் மீண்டும் சைதாப்பேட்டையில் போட்டியிட்டு வென்று முதலமைச்சரானார்.

1977, 1980 தேர்தல்களில் சென்னை-அண்ணாநகர் தொகுதியை கைப்பற்றினார். எம்.ஜி.ஆர் முதலமைச்சர், தலைவர் கலைஞர் எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். சட்டசபை பயிற்சி வகுப்பாக ஆனது.

1989 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதலமைச்சரானார். 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ராஜீவ்காந்தி கொலையால், திமுக பெரும் தோல்வியடைந்தது. அப்போது வெற்றி பெற்ற ஒரே திமுக வேட்பாளர் கலைஞர்.

1996-ல் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதலமைச்சரானார். 2001 தேர்தலில் மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றி. 2006-ல் மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்று அய்ந்தாம் முறையாக முதல்வர் ஆனார்.

2011-ல் தன் மனம் கவர்ந்த சொந்த மண்ணான, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது 12-வது முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று சாதனை. தேஷ்முக் 11 முறை தான்.

தேஷ்முக் போட்டியிட்ட இரு தேர்தல்களில் தோல்வி கண்டவர். ஆனால் தலைவர் கலைஞர் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே கண்டவர்.

தமிழகத்தின் மற்ற தலைவர்களின் தோல்விகளை சொல்லி சிறுமைப் படுத்தக்கூடாது என்பதால் பட்டியலிடவில்லை, இவரின் வெற்றிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

அவரின் இந்த சாதனையை சொல்லக் கூட பயந்து கொண்டு பத்திரிக்கை நடத்தினால் அது பத்திரிக்கைத் துறைக்கே அவமானம்.

# கலைஞரை வென்றவருமில்லை, வரலாற்றை மறைத்து வாழ்ந்தவருமில்லை !

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பொதுக் கூட்டத்தில் எனது உரை

அரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது.


 Displaying MURASOLI - 09.08.2014.jpg


வியாழன், 17 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 5

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார்.

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. 


                         

வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 


                                  Photo: (தொடர்ச்சி)...

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார். 

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார். 

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.



                               

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். 


                               

இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார்.

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 4

உடையார்பாளையம் நுழைந்த தளபதியின் வாகனம் அண்ணா சிலை அருகில் நின்றது. தாமதத்தில் 5 நிமிடம் குறைக்கப்பட்டிருந்தது. அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது. பத்து மணிக்காவது குன்னத்தை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

                   

கிரிக்கெட் மேட்சில், சேஸிங்கில் ரன்னையும், மிச்சமிருக்கும் பந்து எண்ணிக்கையையும் மாறி மாறி கணக்கு பார்ப்பது போல, போக வேண்டிய தூரத்தையும், மிச்சமிருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு கொண்டிருந்தேன். அதற்குள் தளபதி ஒரு நிமிட உரையை முடித்திருந்தார்.

விளாங்குடி கைக்காட்டி நோக்கி கான்வாய் பறந்தது. தளபதி அவர்கள் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்து வந்தார்கள். மற்றக் கட்சிகளின் பணி, வேட்பாளர் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். கைக்காட்டியில், அரியலூர் ஒ.செ ஜோதிவேல் காத்திருக்க, அதற்கு அடுத்த பாயிண்டில் இருவர் பரபரத்திருந்தனர்.

அடுத்த பாயிண்ட்டான கீழப்பழூரில் திருமானூர் ஒ.செ கென்னடியும், மா.து.செ தனபாலும் தான் பரபரத்திருந்தனர். காரணம், கீழப்பழூரை கட் செய்து, நேராக அரியலூர் போகப் போவதாக அவர்களுக்கு செய்தி. யார் சொன்னார்கள் என்று தெரியாமலே வதந்தி பரவி விட்டது.

பல வருடங்களாக, திருமானூர் ஒன்றியப் பகுதிக்கு தளபதி அவர்களின் சுற்றுப்பயணம் அமையாத காரணத்தால், இந்த வாய்ப்பை சிறப்பாக ஏற்பாடு செய்து, கூட்டமும் பெருமளவில் திரண்டிருந்தது. கேட்பவர்களிடம் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

9.15 (6.45). கைகாட்டியை அடைந்த போது இந்த செய்தி கிடைத்தது. அவர்களை அழைத்து கீழப்பழூர் வருவதை உறுதி செய்தோம். கைக்காட்டியிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வருவதால், அந்தப் பாதையில் சென்றாலும் தாமதமாகும். அதற்கு கீழப்பழூர் சென்று அரியலூர் செல்வதே சரி.

கைக்காட்டியில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்ததும் தளபதி அவர்களுக்கு மனம் கொள்ளவில்லை, “இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள், அதிக நேரம் பேச முடியவில்லையே” என. ஒரு நிமிட உரை, கிளம்பினோம்.

இதற்குள் காரில் சார்ஜ் செய்யப்பட்டு எனது மொபைல் உயிர் பெற்றது. அரியலூர் நகர செயலாளர் முருகேசனை அழைத்து, அரியலூர் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக பேருந்து நிலையம் வழியாக பாதையை மாற்றச் சொன்னேன், பத்து நிமிடம் மிச்சமாகும் என்பதால்.

9.30 (7.00). கீழப்பழுரை அடைந்தோம். ஒரே நிமிட உரை. கூடியிருந்தவர்களுக்கு வருத்தம், தளபதி அதிக நேரம் பேசவில்லையே என, தளபதி அவர்களுக்கு வருத்தம், அதிக நேரம் பேச முடியவில்லையே என. அந்த இருவருக்கும் மகிழ்ச்சி, தளபதி வந்தாரே என. எனக்கும் மகிழ்ச்சி, இவர்களையும் ஏமாற்றவில்லை, குன்னமும் அடைந்து விடலாம் என்று.
( தொடரும்)....

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 3

சோழத்தரத்தில் உரையாற்றி விட்டு, காட்டுமன்னார்கோவில் சென்ற போது 7.45. பெரும் ஆரவாரத்திற்கு இடையே தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார். 

                     


இப்போது 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதம். இத்தோடு கடலூர் மாவட்டம் முடிவடைகிறது. அடுத்து அரியலூர் மாவட்டம்.

மின்னல் வேகத்தில் சென்றால் தான் குன்னம் செல்ல முடியும். தளபதி ஓட்டுனர் பாலுவிடம் நிலைமையை சொன்னேன். “கவலைப்படாதீங்கண்ணே, புடிச்சி போயிரலாம்” என்றார். நிர்வாகிகளை மொபைலில் பிடித்து, முன்னால் எந்த வாகனமும் செல்லாமல் பார்த்துக் கொள்ள சொன்னேன்.

5.40-க்கு மீன்சுருட்டியில் இருந்திருக்க வேண்டும். 8.15-க்கு நுழைந்தோம். மூன்று ரோடு சந்திக்கும் இடம். மக்கள் வெள்ளம். மகிழ்ச்சிக் கூக்குரல். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், க.சொ.க.கண்ணன், தருமதுரை ஆகியோர் நின்று வரவேற்றனர்.

தளபதி மேடை ஏற எழுந்தார்கள். இடையில் நின்ற என்னைப் பார்த்தார். “அண்ணா, சுருக்கமாக பேசினா போதும். அப்போ தான் கூட்டத்திற்கு சென்றடைய முடியும்”. சிரித்துக் கொண்டே மேடை ஏறினார்கள் தளபதி. இரண்டே நிமிடம், ரத்தினச் சுருக்கமாய் பேசி, அண்ணன் திருமாவிற்கு வாக்கு கேட்டு முடித்தார். இறங்கும் போது சிரித்தார்,”என்ன சரியா ?”. “ரொம்ப நன்றிங்க அண்ணா”

வேன் வேகமெடுத்து, சிட்டாய் பறந்தது. குறுக்கு ரோட்டில் ஒரு பெரும் கூட்டம் நின்று மறித்தது. ஹாரனை அழுத்தியபடியே, லாகவமாய் ஒதுக்கி ஓட்டினார் பாலு. தளபதி அவர்கள் கூடியிருந்தோருக்கு வணக்கம் வைத்தபடியே வந்தார்கள், சமாதானப்படுத்தும் விதமாக.

மாலை 6.00 மணிக்கு சென்றிருக்க வேண்டிய ஜெயங்கொண்டத்தை அடைந்த போது இரவு 8.35. சிதம்பரம் சாலையில் பேசும் இடம். இரண்டு பர்லாங் தூரத்திற்கு மனிதத் தலையாகக் காட்சியளித்தது. தளபதி அவர்களுக்கு மனமில்லாமல் மூன்று நிமிடத்தில் பேச்சை முடித்தார்கள். “இவ்வளவு நேரம் தானா ?”என நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தவித்தார்.

ஜெயங்கொண்டம் பகுதிக்கு, கழக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்த குறிப்புகளை என்னிடத்தில் காட்டி சிரித்தார் ஜின்னா. தளபதி பேச்சில் குறிப்பிடுவதற்காக தயார் செய்யப்பட்டது. நேர நெருக்கடியால், பேச முடியவில்லை.

கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, தளபதி அவர்களுக்கு இறங்க மனமில்லை. நான்கு ரோடு சந்திப்பு வரை மேடை மேலே நின்றவாறு, மக்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தியவாரே வந்தார். சால்வைகள் கொடுத்தனர். தூரத்தில் நின்ற ஒரு தோழர், தான் கொண்டு வந்த எலுமிச்சைப் பழத்தை கொடுக்க இயலாமல் தூக்கி வீச, அதை தளபதி அனாயசமாகக் கேட்ச் பிடிக்க, உற்சாகக் கூச்சல்.

மேடையிலிருந்து கீழே இறங்கிய அண்ணன் திருமா, படிக்கட்டிலேயே அமர்ந்துக் கொண்டு தளபதி அவர்களோடு உரையாடிக் கொண்டு வந்தார். தளபதி அவர்களும் தன் இருக்கையை திருப்பி உட்கார்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியை அண்ணன் சுபா.சந்திரசேகர் தன் மொபைலில் படம் பிடித்தார். “எவ்வளவு இணக்கமான கூட்டணி என்பதற்கு எளிதான விளக்கம் இந்தக் காட்சி. எவ்வளவு எளிமையான தலைவர்கள். வேறு எந்தக் கூட்டணியிலும் இது போல் காட்சியை காண இயலாது” என்றார்கள் ஜின்னாவும், சுபாவும்.


                      

நேரம் ஆகிறது என, குன்னத்தில் இருந்தோர் அடித்து, அடித்து என் மொபைல் சார்ஜ் காலி.

(தொடரும்...)

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 2

தளபதி கான்வாய் சிதம்பரத்தில் நுழைந்தது. தெற்குரத வீதியிலிருந்து, மேலரத வீதிக்கு திரும்பும் போதே, வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. போலீஸ் ஸ்டேஷன் கடக்கும் போதே, வேனின் இருபுறமும் அலையடித்து ஒதுங்குவது போல் மக்கள் வெள்ளம். 


                   

பஸ் நிறுத்தம் அருகில், பேசும் இடம். தளபதி அவர்களும் திருமாவும் வேனின் மேற்புறம் செல்லும் போது எழுந்த உற்சாகம் சில நிமிடங்கள் நீடித்தது. நாங்கள் எழுந்து வேனின் நான்குபுறமும் சுற்றிப் பார்த்தோம், ஆனந்தம். மனிதக் கடலுக்கு நடுவே தீவு போல மிதந்தது, தளபதி அவர்களின் வாகனம்.

பேச ஆரம்பித்த தளபதி அவர்கள், கூடியிருந்தவர்களின் உணர்வை பிரதிபலித்து, உற்சாக மிகுதியில் இருந்தார். பேசும் நேரம் கூடிக் கொண்டே போனது. 


                           


ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அள்ளியது. “நான் சாலை வழியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். பிரச்சாரத்திற்கு ஜெ எப்படி வருவார் ?” எனக் கேட்டு தளபதி தன் கையை “ஹெலிகாப்டர் காற்றாடி” போல் சுழற்றி காட்ட, “ஹோ” என்று எழுந்த ஓசை உச்சம் தொட்டது.

வேனின் கடைசி சீட்டில் இருந்த மகேஷ் தீவிரமாக செல்போனில் ஷூட் செய்து கொண்டிருந்தார். ஒரு டாஸ்மாக் நபர் தளபதியின் பேச்சுக்கு, தீவிரமாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். உண்மையில் ரசிக்கத்தக்க அளவில் இருந்தது. மகேஷ் அனேகமாக இதை குறும்படமாக வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது.

வேனின் முன் சீட்டை ஒட்டி, நின்று பேசும் மேடை. அதை அடுத்து இரண்டு இருக்கைகள். ஒன்றில் அண்ணன் எம்.ஆர்.கே.பி, இன்னொன்றில் அண்ணன் திருமா. அதற்கு அடுத்த வரிசையில் ஒரு இருக்கை, அதில் மகேஷ். இன்னொரு இரண்டு இருக்கை, அதில் அண்ணன்கள் துரைசாமி, சுபா.

இடையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டு என்னை இருத்தினார் மகேஷ். ஜின்னா நட்த்துனராக உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார், ஏதாவது எழுதும் பணி என்றால் நிற்கும் மேடையின் படிக்கட்டில் அமர்ந்து எழுதுவார். கலகலப்பாக கல்லூரி டூர் போல இருந்தது.

3.40-க்கு செல்ல வேண்டிய கீரப்பாளையத்திற்கு செல்லும் போது மணி 5.50. சரியாக இரண்டு மணி நேரம், பத்து நிமிடங்கள் தாமதம். அங்கேயும் நல்லக் கூட்டம். அடுத்தப் பாயிண்டான ஒரத்தூர் செல்வதற்குள், வழியில் மூன்று ஊர்களிலும் மக்கள் திரண்டு நின்று வேனை மறிக்க முயன்றனர். தளபதி கையசைத்து சமாளித்து வந்தார்.


                           

சேத்தியாத்தோப்பை அடையும் போதும் அதே தாமதம்(4.20-6.30). நல்லக் கூட்டம், எழுச்சியான வரவேற்பு. குமாரக்குடி செல்லும் போது மணி 6.50, தாமதம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆனது. இது போன்ற டூர்களில் நேரத்தை குறித்துக் கொண்டு, அட்ஜஸ்ட் செய்வது என் வழக்கம். அதனால் இந்தப் புள்ளி விபரம். அது தான் காப்பாற்றியது என்னை.

பயணத் திட்டத்தில், கடைசியாக குன்னம் கூட்டத்திற்கு 7.40க்கு செல்வதாக திட்டம். 9.30-க்கு சென்றால் கூட போதும். 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதம் என்றால் சரி செய்யலாம். ஆனால் சோழத்தரத்தில் பேசும் போது 2 மணி நேரம் 25 நிமிட லேட். இதே நிலையில் போனால் குன்னம் போகும் போது இரவு பத்தாகிவிடும். அதற்கு மேல் பேச அனுமதி கிடையாது.

லேசாக எனக்கு ஜுரம் வரும் போல இருந்தது....

(தொடரும்...)

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

1990-ல், திருச்சியில், ஆறாவது திமுக மாநில மாநாடு

ஆறாவது திமுக மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கோவையில் அய்ந்தாவது மாநில மாநாடு 1975-ல் நடைபெற்று நீண்ட வருடங்களுக்கு பிறகு 1990-ல் ஆறாவது மாநாடு. நீண்ட இடைவெளி என்பதால், கழகத் தோழர்களும் உற்சாக உச்சியில்.

1977-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியிருந்த கழகம், 1989-ல் மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தது. அந்த உற்சாகமும் கூடுதலாக. நான் கல்லூரியில் இருந்து நேராக மாநாட்டிற்கு சென்றிருந்தேன். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தயாராகியிருந்தது திருச்சி.

கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த பந்தல். முன் முகப்பு அரண்மனை போலவும், உள் முகப்பு பனையோலையால் ஆன அலங்கார வளைவு. உள்ளே திமுக இளைஞரணி நடத்திய “திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி” இடம்பெற்றது.

கண்காட்சியில் திராவிட இயக்க தலைவர்களின் படங்கள், வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. கல்லூரி மாணவனான எனக்கு அது புது அனுபவம். ஆண்டிமடம் ஒன்றியத்தில் இருந்து வந்திருந்த கழகத் தோழர்களுடன் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

ஊர்வலம் நடைபெற்ற சாலையில் அலங்கார வளைவுகள் ஒவ்வொரு ஒன்றியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. அப்போது கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் இணைந்திருந்த, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்கள் மாவட்ட செயலாளர். அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்.

கழகத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டிருந்தனர். மணல் தரையில் பெட்ஷீட் விரித்து போட்டு அமர்ந்து மாநாடு பார்த்த நினைவுகள் மறக்காது. நொறுக்குகள் கொரிக்கும் போது, பக்கத்தில் உள்ளோருக்கும் கொடுக்கும் அன்னியோன்யம். மாநாட்டிலேயே புது நட்புகள் மாநில அளவில் துளிர்க்கும்.

இரண்டு நாள் மாநாடும், சிறந்த சொற்பொழிவாளர்களால் கருத்து மழை தான். ஒவ்வொரு சொற்பொழிவாளரும் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசுவது, ஒரு புத்தகத்தை படிப்பதற்கு இணையானது. கழகத் தோழர்களால், பேச்சாளர்கள் பேச்சுக்கு உடனடியாக மதிப்பெண் போடப்படும். சிறப்புகள், தவறுகள் விவாதிக்கப்படும். அதுவே ஒரு தனி அனுபவம் தான்.

எனது தந்தை சிவசுப்ரமணியன் அவர்கள் அன்று திருச்சி மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். மறைந்த அண்ணன் க.சொ.கணேசன் அவர்கள் ஜெயங்கொண்டம் ச.ம.உறுப்பினர். அண்ணன் அரியலூர் ஆறுமுகம் அவர்கள் அரியலூர் ச.ம.உ. இவர்கள் பதினைந்து நாட்கள் திருச்சியில் தங்கி மாநாட்டு பணியாற்றினர்.

அய்யா புரவலர் அன்பிலார், மந்திரக் கோல் மைனர் நாஞ்சிலார், முரசொலி மாறன் ஆகியோர் உயிரோடிருந்து, மேடையை அலங்கரித்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் மிகச் சிறப்பான நிறைவுரை ஆற்றினார்.

( மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நான், மறைந்த மாவட்ட பிரதிநிதி அண்ணன் பூவாணிப்பட்டு கலியபெருமாள், என் தம்பி சிவக்குமார் )


                         

சனி, 26 அக்டோபர், 2013

இரண்டு அரசு ஐ.டி.ஐக்கும் அனுமதி, ஒரு கார் பயணம் தான்.

தலைவர் கலைஞர் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார், தலைமைச் செயலகம் நோக்கி. அப்போது தலைவர் கலைஞர் முதல்வர். உடன் சில அமைச்சர்கள். அண்ணன் ஆ.ராசா அவர்களும் உடன்.

"ப.சிதம்பரமும், பெரிய.கருப்பனும் சிவகங்கைக்கு ஒரு ஐ.டி.ஐ கேட்டிருக்காங்க. அலுவலகத்தில நினைவு படுத்துங்க" என தன் செயலாளரிடம் சொல்கிறார் தலைவர். உடனே அண்ணன் ராசா, "அய்யா எங்களுடையதும் பின் தங்கிய மாவட்டம், எங்களுக்கும் ஐ.டி.ஐ வேண்டும்" என்கிறார்.

"ஏற்கனவே அரியலூர்ல ஒரு அரசு ஐ.டி.ஐ இருக்கேய்யா" என்கிறார் தலைவர் கலைஞர். "அய்யா, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் வருவதற்குள் அந்த பகுதி மாணவர்களை தொழிற்கல்விக்கு தயார் செய்தா தான் சரியா இருக்கும். அதே போல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்குள் அங்கே இருக்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்"

"சரி. நீ சொல்ற காரணம் சரியா தான் இருக்குய்யா. ரெண்டும் கொடுத்திடலாம்." இது தலைவர் கலைஞர். தலைமை செயலகம் அடைவதற்குள் இரண்டு ஐ.டி.ஐக்கும் அனுமதி. ஒரு கார் பயணம் தான். இரண்டு ஐ.டி.ஐ-களும் அமைவதற்கு அரசு இடம் இல்லை. தன் தாய்-தந்தையர் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் தலா அய்ந்து ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்த ஒரு சந்தர்ப்பம். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நேரம். அண்ணன் ராசா அரியலூருக்கு ஒரு பொறியியல் கல்லூரி கேட்டார். மற்ற அமைச்சர்கள் "ஏற்கனவே இரண்டு ஐ.டி.ஐ, ஒரு கலைக்கல்லூரி(பெரம்பலூர்), இது வேறயா ?" எனக் கிண்டலடித்தனர்.

"நீங்க சும்மா தர வேண்டாம். 20 ஏக்கர் இடமும், 5 கோடி ரூபாய் பணமும் நிதியாகப் பெற்று தருகிறேன்" என சொல்ல, பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. 20 ஏக்கர் இடமும், நிதியும் வழங்கினார். அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

அண்ணன் ராசா அவர்கள் ஒரு முறை துறையூர் அருகே மிகப் பெரிய விபத்தை சந்தித்தார். திருச்சியில் முதல் உதவி முடித்து, தனி ஹெலிக்காப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

இது குறித்து ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, "என்னை நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டதால் பிழைத்து வந்தேன். ஆனால் எங்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால், தஞ்சையோ, திருச்சியோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது."

"ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து கொடுத்தால், அரியலூர்-பெரம்பலூர் இடையே அமைத்துக் கொள்வோம். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும். எங்கள் மாவட்டத்து கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்" என சொல்ல மருத்துவக் கல்லூரி sanctioned. 

இப்படி இடம், பொருள் அறிந்து அண்ணன் ஆ.ராசா அவர்கள் முயற்சி எடுத்ததனால் தான் எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியே. இன்று அண்ணனின் பிறந்தநாள்.

# வாழ்க அண்ணன், எங்கள் மாவட்டங்களை இன்னும் முன்னேற்ற !




வெள்ளி, 11 அக்டோபர், 2013

பொதுக் கூட்டம் போட்டுப் பார்....

மிகுந்த மகிழ்ச்சி.

வீட்டக் கட்டிப் பார், கல்யாணத்தப் பண்ணிப் பார். இது தெரிஞ்ச சேதி தான். அதிலும் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் மேற்கொள்வது எவ்வளவு டென்ஷன்னு அனுபவிச்சா தான் தெரியும்.

அது போல ஒரே நேரத்தில் தளபதி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், இளைஞர் அணி பயிற்சிப் பாசறை. பொதுக் கூட்டம் அரியலூரில், பாசறை பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில்.

                                                                                                                                                                                                        இடைப்பட்ட தூரம் 70 கி.மீ. ஒரு பயணம் போய் வந்தாலே 140 கி.மீ. அரைநாள் போய் விடும். 16-ந் தேதி முதல் விசிட் துவங்கியது. இது வரை ஏழு முறை பயணம். மற்ற நாட்களில் நிதி திரட்டும் பயணம்.

ஒரு நாள் அரியலூர் மாவட்டக் கழக கூட்டம், ஒரு நாள் இளைஞர் அணி கூட்டம், மாணவர் அணி கூட்டம். அடுத்து இதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டங்கள்.


                                                                                                                                                                                                                                      20 நாட்களுக்கு முன்பு தளபதி அவர்கள் தேதி உறுதி செய்யப்பட்டது. அன்று ரன்னிங் ரேஸ் ஆரம்பித்தது, ரிலே ரேஸும் கூட. இன்று தான் வெற்றிகரமாக முடிந்தது. அது தான் மிகுந்த மகிழ்ச்சி.

16-ந் தேதி சென்ற போது, மலையாளப்பட்டியில் 3 இடங்களை பார்வையிட்டோம். அதில் ஒரு இடம் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்தது. அது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிளைக் கழக செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் இடம்.

பச்சை மலையின் அடிவாரம். மூன்று புறம் மலைகள் சூழ வயல் வெளி. அந்த இடத்தை தேர்வு செய்தவுடன் அவர் வயல்வெளியை சுத்தம் செய்து ரோலர் ஓட்டி சமன் செய்தார்.

பந்தல் போடும் பணி துவங்கியது. அன்பகம் கலை அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றார். அண்ணன் ஆ.ராசா அவர்கள் மூன்று நாள் தங்கி பணியை செம்மைப் படுத்தினார்.

அவர் மூன்று நாள் பெரம்பலூரில் தங்கிப் பணியாற்றியது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது. அதே போல நிகழ்ச்சியும் மெருகேறியது. 

 பயிற்சி பாசறைக் கூட்டம் கட்டுக்கோப்புடனும், எழுச்சியோடும் நடைபெற்றது. அரியலூரில் நிதியளிப்பு பொதுக் கூட்டம் பெருத்த வெற்றியாக அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ் நாளில் மறவாது. தளபதி அவர்களுக்கும்.

 

# மிகுந்த மகிழ்ச்சி....