பிரபலமான இடுகைகள்

புதன், 7 ஆகஸ்ட், 2013

ஒரே இரவில் இடது கையால் கையெழுத்திட ....

பொதுக்கூட்ட மேடை. கூட்டப் பதிவேட்டை கையொப்பத்திற்காக கொடுத்தார்கள். பேச்சாளர் அண்ணன் இறைவனிடம் கொடுத்தேன் கையொப்பமிட. வாங்கியவர் வித்தியாசமான கோணத்தில் திருப்பினார். இடது கையால் கையொப்பமிட்டார்.

இடது கையால் கையொப்பமிட்டது சரி, ஆனால் நோட்டை திருப்பிப் பிடித்த விதம் வித்தியாசமாக இருந்தது. “ அண்ணா, நீங்க இடது கையாலவா முன்னாடி கையெழுத்து போட்டீங்க ?”. இல்லை. இப்போ தான் மாறினேன். “ எவ்வளவு நாள்ல மாத்துனீங்க ?.ஒரே இரவில்...



***************************

பெயர் தான் இறைவன். ஆனால் ஊர் ஈரோடு, பகுத்தறிவாளர். தி.மு.க பேச்சாளர் என்பதை தாண்டி கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை என 13 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவர் தந்தை பெயர் கைவல்யம். பெரியாரிஸ்ட். ராமசாமி நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றியவர். தான் மறைவுற்றால் எந்த சடங்கு, சம்பிரதாயமுமின்றி தனது இறுதி நிகழ்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என உறுதிபட கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பெரியவர் கைவல்யம் மறைந்த போது, நெற்றியில் காசு கூட வைக்கப்படாமல் எந்த சடங்குகளுமின்றி இறுதி மரியாதை செய்யப்பட்டது. அப்படிப்பட்டவர் எப்படி இறைவன்னு பெயர் வைத்தார் ?

திருக்குறள் பற்றாளர். அதில் தலைவனை குறிக்க பயன்படுத்தப்படும் இறைவனை தனது மகனுக்கு பெயர் சூட்டியவர், பெயரப் பிள்ளைகளுக்கு “குழலினிது, யாழினிது குறளை ஒட்டி யாழினியன், குழலினியன் என பெயர் சூட்டினார்.

***********************


“ ஒரே இரவிலா, ஏன் ?. “ 12 புத்தகங்கள் வரை வலது கையால் தான் எழுதி வெளியிட்டேன். திடீரென எழுத்துக்கள் கிறுக்கலாக ஆரம்பித்தது. கை கட்டுப்படவில்லை. டாக்டரிடம் காட்டினேன். கையிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு செயலிழந்ததால் என்று சொன்னார்கள்

வலது கையால் எழுதிக்காட்டினார். இ.சி.ஜி யில் வருவது போல பேனா மேலும் கீழுமாக அவர் கைக்கு கட்டுபடாமல் போனது. கோடு போட்ட தாளில் ஒரு வரிக்குள் எழுத வேண்டியதை நான்கு வரியில் எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி பெரிய எழுத்துக்களாக வந்தது.

“ இதற்கு மருத்துவம் இல்லையா ? “ ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்புள்ள ஊசி ஆறு மாதத்திற்கு ஒன்று போட வேண்டுமாம். அப்படிப்பட்ட மருந்தின் side effect-ஐ நினைத்து பார்த்து, வேண்டாம் என முடிவெடுத்தேன்.

“ ஒரே இரவில் இடது கையால் எழுத பயிற்சி எடுத்து, எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போ 9 புத்தகங்கள் எழுதி வெளியிட தயாராக உள்ளது. நான்கு திரைப்பாடல்களும் எழுதிவிட்டேன்

“ உங்க முயற்சியும்,மனதைரியமும் பாராட்டுக்குரியது அண்ணா” 
அப்பா கொடுத்த பகுத்தறிவு தான் அத்தனைக்கும் காரணம்.




# ஈரோட்டு இறைவனின் எழுத்துக்கள் தேர் ஏறட்டும், உலகை பவனி வர...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக