பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 ஜூன், 2014

கலைஞர் பிறந்தநாள் 2014 - அந்த புன்முறுவல் போதும் !

என்ன தான் தலைவர் கலைஞரை அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் பிறந்தநாளில் பார்ப்பது தனி மகிழ்வல்லவா...

காலை 9 மணிக்கே அறிவாலயம் சென்று வரிசையில் நின்றோம் பெரம்பலூர் மா.செ அண்ணன் துரைசாமியும் நானும். உடன் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகள்.

நேரம் ஆக ஆக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகளும் வந்து இணைந்தனர். வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகளை பார்த்து வணக்கம் பரிமாற்றம் நடந்தது.

தலைவர், தளபதி பிறந்தநாட்கள், மாநாடுகள் போன்றவை திருமண நிகழ்ச்சிகளை போன்று குதுகலமானவை. நீண்ட நாட்கள் கழித்து உறவினர்களை ஒரு சேர சந்திப்பது போல தமிழகமெங்கும் இருந்து வருகிற கழக நண்பர்களை சந்திக்கிற வாய்ப்பு.


                           

மாவட்ட செயலாளர்கள் போன்ற நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வரிசை இருந்தாலும், அதில் செல்லாமல் எல்லோருடனும் செல்வதற்கு இதுவும் ஒரு காரணம். தஞ்சை, நாகை, திருவண்ணாமலை நண்பர்களை சந்திதோம்.

அதே போன்று முகநூல் நண்பர்களையும் சந்திக்கின்ற வாய்ப்பு. தலைவர் அண்ணா நினைவிடம், பெரியார் திடல் என்று சென்று வர சற்று தாமதமானதால் நிறைய உரையாடல்கள்.

நடந்து முடிந்த தேர்தல் குறித்த அலசல்கள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்று களைகட்டியது. எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தோம். எல்லோரும் விமர்சனத்திற்கு உள்ளானாகள், ஜனநாயக இயக்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்து தோழர்கள் சீர்வரிசை மற்றும் மேளதாளங்களோடு வந்தார்கள். கலைஞர் அரங்கம் அதிர ஆரம்பித்தது. 


                     

செண்டை மேளம் அடிக்கும் போது, அதற்கு நடனம் ஆடிய மூன்று வயது சிறுவனின் ஆட்டம் எல்லோரையும் கவர்ந்தது.

             

திடீரென அரங்கம் சுறுசுறுப்பானது. “முத்தமிழே நீ வாழ்க” பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. தலைவர் கலைஞர் அரங்கத்திற்குள் வந்தார். அடிவயிற்றிலிருந்து குரல் வந்தது, “தலைவர் கலைஞர்”. “வாழ்க” எதிரொலித்தது.

திரும்பி பார்த்தேன், அதுவரை தலைவரை விமர்சித்தவர் குரல் தான் அது. அது தான் தலைவர். அவன் தான் தொண்டன். மெல்ல வரிசை ஊர்ந்தது. மணி 12-ஐ தாண்டியது. சில தோழர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து முன்னேறினார்கள். ஆனால் பெரும்பாலானோர் வரிசையில் தான்.

மேடையை நெருங்கும் போது கூட்ட வரிசை பிதுங்க ஆரம்பித்தது. சட்டை எல்லாம் கசங்கி தலைவரை நெருங்கினோம். தலைவர் அமர்ந்திருந்த மேடைக்கு கீழே மூன்றடி தூரத்தில் நின்று வணங்கினோம். ஒரு புன்முறுவல் பூத்தார். அந்த தருணம் தான் நிகரற்ற தருணம்.


                 

தனியார் நிறுவனப் பணியில் இருக்கிற நண்பர்களும், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வரிசையில் நின்று வாழ்த்தி, வாழ்த்து பெற்றது தான் குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் எதிர்பார்ப்புமின்றி வந்த அவர்களுடைய வாழ்த்து தலைவரை நூறாண்டு தாண்டி வாழ வைக்கும்.

# வாழ்க தலைவர் கலைஞர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக