43 வயதில் பெரும் முத்திரையை பதித்துவிட்டு கிளம்பிவிட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டு நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கிருந்தே பிரிந்து விட்டார்.
அரசுப் பணியில் இருந்தாலும் பெரியார் திடல் பணி தான் முழுமையானது, முதலானது அவருக்கு. முகநூலில் பெயரை பார்த்திருந்தாலும், அவரது முகப்புப்படமாக அய்யா பெரியார் படமே இடம் பெற்றிருந்ததால் அவரை அறியாமல் இருந்தேன்.
சிவந்த தேகம், சிரித்த முகமாக பெரியார் திடலில் என்னை அணுகிய போது யாரோ என்று நினைத்து பேசினேன். கொள்கையாளர் என்பதால் என்னைக் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசினார்.
முதல் சந்திப்பிலேயே அவரது பாசம், பல வருடம் பழகிய உணர்வை ஏற்படுத்தி விட்டது. பல தகவல்களை அள்ளிக் கொட்டினார், அவர் ஒரு தகவல் களஞ்சியம். அந்தப் புன்னகை மாறாமல் இனியப் பேச்சு, மறக்க முடியவில்லை.
இவரது தாத்தா சாமி தந்தைப் பெரியாரின் தளபதிகளில் ஒருவராக இருந்தார் என்றால், இவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் தளபதியாக திகழ்ந்தார். தாத்தா காலத்து உணர்வு கொஞ்சமும் குன்றாமல் இயக்கப் பணி ஆற்றியவர்.
அரசுப் பத்திரிக்கையான "தமிழரசு"வின் ஆசிரியர் குழுவில் இருந்தாலும், திராவிடர் கழகப் பத்திரிக்கையான "உண்மை" மற்றும் "பெரியார் பிஞ்சு" பத்திரிக்கைகளில் இவரது பங்களிப்பு தொடர்ந்தது, பொறுப்பாசிரியரும் கூட.
கடைசியாக திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்கள் மறைந்த அன்று பார்த்தோம். பெரியார் திடலுக்கு நான் போனதிலிருந்து உடன் இருந்து, அய்யா உடல் கள்ளக்குறிச்சி கிளம்பு வரை பேசிக் கொண்டிருந்து என்னை அனுப்பி வைத்தார்.
இன்னும் எழுத என்னை உற்சாகப்படுத்தினார். எந்தத் தகவலாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னவர், தொடர்பு கொள்ளாமலே மறைந்து விட்டார். பணி நெருக்கடியில் கடைசியில் முகம் பார்க்கவும் இல்லை.
# அந்த முகமும், இனிய சிரிப்பும் என்றும் நினைவில் இருக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக