பிரபலமான இடுகைகள்

வியாழன், 19 ஜூன், 2014

சொல்லிபுட்டன், சொல்லிபுட்டன்; ஒப்பாரிய சொல்லிபுட்டன்

இன்னும் கிராமம் உயிர்ப்புடன் இருக்கும் கிராமம் அது. மகன்கள் பக்கத்து நகரத்தில் வசித்தாலும், நகரத்து வாடை பாதிக்காத பெண்மணி அவர். வயது 80 இருக்கும். அவரது கணவர் இறந்து விட்டார்.

ஊரில் இல்லாததால், அன்றே நான் துக்கத்திற்கு செல்ல முடியவில்லை. நெருங்கிய உறவினர். இரண்டு நாட்கள் கழித்து தான் செல்ல முடிந்தது. வீட்டினுள் நுழைந்ததுமே பாட்டி அழ ஆரம்பித்தார்.

கிராமத்து வழக்கப்படி மாரடித்துக் கொண்டு என் அருகில் வந்தார். குரலெடுத்து ஒப்பாரி பாட ஆரம்பித்தார். கணீர் குரல். வேறு பக்கம் நகராமல் ஈர்த்தது.


                        

( படம் - ஓவியர் மணிவர்மா)


"பாத்து பாத்து கண்ணும் தான்
பூத்துப் போச்சே பூத்து போச்சே
வருவன்னு இருந்தனே, நீயும் வருவன்னு இருந்தனே"

"நான் ஊர்ல இல்ல ஆயா. அதான் வர முடியல" என் பதில்

"அப்பாரு நல்லாருந்தா வந்துருப்பாரே
அய்யான்னா ஆசையாச்சே அவருக்கும்" ஒப்பாரி தொடர்ந்தது.

"ஆமா ஆயா. அப்பா ஆஸ்பிட்டல் போயிருந்தாங்க. அதான் வரல"

"எப்படில்லாம் வாழ்ந்திருந்தோம்
என்னல்லாம் நினச்சிருந்தோம்"

ஒப்பாரி தொடர்ந்தது. இடையில் வந்த சில வார்த்தைகளை கூர்ந்து கவனித்து தான் அர்த்தம் கிரகிக்க முடிந்தது. இங்கே கொடுத்திருப்பதெல்லாம் சிம்ப்ளிபைட் ஃபார்ம்.

"ஒப்பாயி வந்தா பாக்காம போவாதே"
ஒரு நிமிடம் நிதானித்தே "ஒப்பாயியை" லைன் பிடித்தேன். ஒப்பாயி = ஒன் + அப்பா + ஆயி. என் அப்பாவின் அம்மா. என்ன அருமையான வட்டார வழக்கு. இதே போல பல வார்த்தைகள். லயம் தப்பாமல், ராகம் தப்பாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

உறவினர்களுக்குள் ஒரு பிரச்சினை. அதையும் ஒப்பாரியிலேயே சொன்னார்.

"இப்போ போறவரா, இப்போ போறவரா
அந்த பிரச்சினயால இடிஞ்சு போனாரே
நீ தான் முடிக்கனும் நீ தான் முடிக்கனும்
இல்லன்னா எங்காரியத்துக்கு தான் வரணும்"

கடைசியாக ஒப்பாரியிலேயே எனக்கும் 'செக்'கும் வைத்தார்.

இது தான் கடைசி தலைமுறை. இதற்கு அடுத்த தலைமுறை பெண்கள் கூட இப்போது கூச்சப் படுகின்றனர், ஒப்பாரி பாடுவதற்கு. ஆனால் ஒப்பாரியை புறக்கணிப்பதற்கில்லை. தங்கள் மனசுமையை இறக்கி வைக்க ஒரு அருமையான வடிவம்.

நயமான வட்டார வழக்குகள், ராகம் தப்பாமல் வந்து விழும் வார்த்தைகள், சொல்ல நினைக்கும் செய்திகளையும் அதில் ஏற்றி சொல்லும் பாங்கு என கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு வாழ்வியல் இசை வடிவம் ஒப்பாரி எனத் தோன்றுகிறது.

சிறு வயதில் விளையாட்டாக கிண்டல் செய்த விஷயத்தின் முக்கியத்துவம் இப்போது தான் புரிகிறது. ஒப்புக்கு பாடுவதல்ல ஒப்பாரி, ஒப்புமை இல்லாதது ஒப்பாரி.

# சொல்லிபுட்டன், சொல்லிபுட்டன்;
ஒப்பாரிய சொல்லிபுட்டன்
அதையும் "ஒப்பாரியா" சொல்லிபுட்டன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக