பிரபலமான இடுகைகள்

வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜூலை, 2016

கள்ளிக் காட்டில் பொறந்த கவியே

"இது ஒரு பொன்மாலை பொழுது 
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்", இந்த வரிகள் தான் கவிஞரின் முதல் திரை வரிகள். 'நிழல்கள்' திரைப்படம் கவிஞர் வைரமுத்துவின் தமிழ் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதற்கு பிறகு கவிஞருக்கு ஒவ்வொரு நொடியும் பொன்னானப் பொழுதாகிப் போனது. அந்தப் பாடல் வெளியான ஆண்டு 1980.

இசைஞானி இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து காம்பினேஷன் என்றால் 'வெற்றி' என எழுதி வைத்துக் கொள்ளலாம். 'முதல்மரியாதை' திரைப்படம் அதில் உச்சம். இன்றும் 'வெட்டி வேரு வாசம்' வீசிக் கொண்டே இருக்கிறது. 'பூங்காற்று திரும்புமா, எம் பாட்ட விரும்புமா?' கவிஞர் கேட்ட கேள்விக்கு மக்கள் மட்டும் விரும்புவதாக சொல்லவில்லை, அரசே சொன்னது, 'தேசிய விருது' கொடுத்து.

இசைஞானியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் கூட்டணி உடைந்த போது, வைரமுத்து அவ்வளவு தான் என பலரும் ஆருடம் கூறினர். ஆனால் கவிஞர் இசையமைப்பாளர் சந்திரபோஸோடு இணைந்து சஙகர்குரு, மனிதன், ராஜா சின்ன ரோஜா என ஒரு ரவுண்ட் வந்தார்.

யாரோடு இணைய நேரிட்டாலும் அங்கு தன் முத்திரையை பதிப்பார் கவிஞர். கமலுக்காக "அந்திமழை பொழிய" உருகுவார். ரஜினிக்காக "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்று அதிரடிப்பார். முரளிக்காக 'ஆத்தாடி பாவாடக் காத்தாட' என நெஞ்சு கூத்தாடுவார். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவைக்காக "கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என தத்துவம் பேசுவார்.

1992ல் புதுயுக இசையோடு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். அவரும் கவிஞரும் இணைந்து 'ரோஜா'வுக்காக  பின்னிய 'சின்ன சின்ன ஆசை' பெரிய, பெரிய ஹிட் ஆகிப் போனது. கவிஞருக்கு தேசிய விருதை மீண்டும் பெற்றுக் கொடுத்தது. இந்தக் கூட்டணி இன்றும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கானா பாடல்களால் பிரபலமாக இருந்த தேவா, கவிஞரோடு இணைந்து கொடுத்த படங்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றன. அண்ணாமலை, ஆசை, பாட்சா, குஷி என ஒவ்வொரு படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய அளவில் ஹிட். ரஜினிக்கும் இந்த தேவா, வைரமுத்து கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ரஜினியின் பிம்பத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு சென்றன பாட்சா படப் பாடல்கள்.

பரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என அடுத்த சுற்று இசையமைப்பாளர்களோடு இணைந்து ஸ்கோர் செய்து வந்தார். காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னையும், தன் தமிழையும் புதுப்பித்துக் கொண்டே வந்தார்.

இப்போது அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வீ.பிரகாஷ், தேவி ஶ்ரீபிரசாத், ரகுநந்தன், ஜிப்ரான் , இமான் என எல்லாக் கூட்டணியும் இவருக்கு பொருந்திப் போகிறது, இவரது வார்த்தைகள் பாடல்களில் லாகவகமாகப் பொருந்திப் போவது போல. இளைய தலைமுறையோடும் கைக்கோர்க்கிறது இவரது தமிழ்.

2011ல் 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படப் பாடலுக்கு  ஆறாவது முறையாக தேசிய விருது பெற்றார். 'கள்ளிக் காட்டில் பொறந்த தாயே' பாடல் மண்ணின் மணம் வீச மனதைத் தைக்கிறது. தன் சொந்த மண்ணின் சாரத்தை அப்படியே அள்ளித் தருகிறார். 'எந்திரன்' திரைப்படப் பாடல்களுக்கு அறிவியலை அரைத்து ஊற்றி எழுதிய அதே எழுதுகோல் தான், இந்தத் 'தென்மேற்கு பருவக்காற்று'க்கு கள்ளிக் காட்டு மண்ணை கரைத்து ஊற்றி கவி தீட்டியிருக்கிறது.

1980ல் துவங்கிய பொன்னான பொழுது கவிஞருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தான். 2016லும் தன் வார்த்தைகளின் வீரியம் குறையாமல், இளமை குறையாமல், வளமை குறையாமல், கவர்ச்சி குறையாமல் தன் பாடல் கொடியை உயரப் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு "சராசரி ரசிகனாக" இந்த மக்கள் மனம் கவர்ந்தக் கவிஞனை, அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

# கள்ளிக் காட்டில் பொறந்த கவியே, என்ன  ரசிக்க வச்ச நீயே !

வியாழன், 16 ஜூலை, 2015

கள்ளிக்காட்டு காதற் காற்றே !

எங்கள் கவி தேசத்தின் கருப்பு ராஜ குமாரனே. ஆம், நீ உடுத்தும் உடையும், நடக்கும் நடையும், மீசை முறுக்கும், பேச்சு நறுக்கும், ஊடுருவும் பார்வையும், தேனூறும்  வார்த்தையும்  உன்னை ஓர் ராஜகுமாரனாய் தான் நிலை நிறுத்திக் கொள்கிறாய்.

வடுகப்பட்டியில் கிளம்பும் போதே முடிவெடுத்துக் கொண்டாயா? பேயத் தேவரின் உடை சிக்கனத்தை உடைத்து, தனக்கென ஒரு தனி உடை அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதென. பால் உன் உடையோடு தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதாய் கேள்வி.

ரஜினி நடையை சிலாகித்து பாடல் எழுதுவாய், ஆனால் உன் நடையை நாங்கள் ரசிக்கிறோம். சிவாஜி நடைக்கும், ரஜினி நடைக்கும் மத்தியிலே இது ஒரு தனி ரகம். மனக் கேமராவில் ஓட விட்டு பார்த்து அடியை எடுத்து வைப்பாயோ.

போருக்கு கிளம்பும் வீரனைப் போல் முறுக்கிய மீசை. சின்ன சின்ன சிறு வயது ஆசையில் இது ஒன்றோ. தாவணிக்கு நல்ல தலைவனாய் காதல் மொழி உன் பேனாவில் ஊற்றெடுக்கையில் இது வித்தியாசமாய்  தான் இருக்கிறது.

மேடை ஏறிவிட்டால் உன் பேச்சு மகுடியாகி விடுகிறதே, எதிரே இருப்போரை மயக்கிப் போடுகிறதே. அழுத்தம் திருத்தமாய் நீ தமிழை உச்சரிக்கையில், அந்தத் தமிழே மெல்ல மயங்கித் தான் போய் விடும்.

ஊடுருவி, சிணுங்கி, சிரித்து, முறைத்து, கம்பீரம் காட்டி உன் பேச்சை ஒட்டி நடமிடுகிறதே உன் கண்கள். சினிமாவில் நடிக்கப் போயிருந்தால், உன் கண்களை காட்டியே ஒரு பாடலை முடித்திருப்பார் பாரதிராஜா.

ஒவ்வொரு வார்த்தையையும் எங்கிருந்து பிடிக்கிறாய்? கவிதையாகட்டும், பாடலாகட்டும், கட்டுரையாகட்டும், பேச்சாகட்டும் மது சுமந்து வருகிறதே உன் வார்த்தைகள். கேட்டவன் சொக்கித் தான் போகிறான்.

கவிஞன் என்றால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்பதை மறுத்து,  திருத்தமாயும், மிடுக்காயும், முடுக்காயும், நறுக்காயும், நறுவிசாயும், நயமாயும் இருந்து காட்டுகிறாய். எல்லாவற்றிலும் வித்தியாசம் நீ.

கவிஞர்கள் பாடலாசிரியராய் பரிணமிப்பது சிரமம். பாடலாசிரியர் கட்டுரையாளராய் மிளிர்வது குறைவு. கட்டுரையாளர் நாவலாசிரியராய் வெல்வது அரிது. நாவலாசிரியர் பேச்சாளராய் முத்திரை பதிப்பது கடிது. நீ எல்லா பரிணாமமும் எடுக்கிறாய்.

# கள்ளிக்காட்டு காதற் காற்றே வாழ்க நீ !

செவ்வாய், 10 மார்ச், 2015

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

 ஊர் கிளம்பினேன். கார் பயணம். வழக்கம் போல் இளையராஜா உடன் பயணித்தார். 80-கள் பாடல். அதில் ஒரு பாடல் ஆழமாக மனதை கிளறியது. “அந்தி மழை பொழிகிறது” தான் அது.

     


பழைய நினைவுகள் அலைபாய்ந்தது. ஆமாம். இந்தப் பாடல், நான் சென்னையில் பார்த்த முதல் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல். சிறு வயது நினைவுகள். அப்போது உணர்ந்ததை விட, இப்போது தான் முழுதும் உணர்ந்தேன்.

Image result for raja paarvai

கமல் நடித்த “ராஜபார்வை” திரைப்படம். அப்போது நான் ஏழாம் வகுப்பு. திருப்பெரும்புதூரில் பணியாற்றிய எனது சித்தப்பா  நெடுஞ்செழியன் அவர்களது இல்லத்திற்கு, விடுமுறைக்கு சென்றிருந்தேன். அப்போது தான் சென்னை சென்றிருந்தேன்.

வடபழனியில் உள்ள ஏவிஎம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்ததாக நினைவு. கண்பார்வை இல்லாத கமல் ஹீரோ. மாதவி ஹீரோயின். இயக்கம் சிங்கீதம் சீனிவாசராவ். கமல் இன்றும் மனதில் நிற்கிறார். பாடலை பார்த்தால் அவர் முதல்.

பாடலை கேட்டால் இசைத்த இசைஞானி இளையராஜா முதலா? எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து முதலா? என்ற கேள்வி தான் எழும். பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

அந்த வினா இன்றும் எழுந்தது. என்னால் முடிவு செய்ய முடியவில்லை. காரணம் நான் ஒரே சமயத்தில் இசைஞானிக்கும் ரசிகன், கவிப்பேரரசுக்கும் ரசிகன்.

“அந்திமழை பொழிகிறது; ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”. யார் முகம்? இசையா, கவியா?.

“நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்” இளமை துள்ளலை அன்று கவிஞரை தாண்டி யாரும் சொல்லி இருக்க முடியாது. அதே போல் அதற்கு இசை ராஜாவை தாண்டி யாரும் கட்டி இருக்க முடியாது.

“கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?; தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது” கண் பார்வை இல்லா மனிதனின் காதலையும், காதலின் சிறப்பையும் இதற்கு மேல் சிறப்பாக, மனம் தைக்க சொல்ல முடியாது. அதே போல் அந்த இசை.

“நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்” இது அக்மார்க் வைரமுத்து குறும்பு.

அந்த வயதில் தோன்றாத கற்பனை எல்லாம் இப்போது தோன்றுகிறது. மீண்டும் “ராஜபார்வை” பார்க்க வேண்டும். கமலின் நடிப்பு, மாதவி கண்கள், வயலின், ராஜாவின் இசை, வைரமுத்துவின் இளமை வரிகள், ஒருங்கிணைத்த இயக்கம்.

மீண்டும் வாய்க்குமா இதே போன்ற பாடலுக்கான வாய்ப்பு. வாய்ப்பில்லை. அந்த பாடலையே ரசிப்போம்.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
யார் ? கமலா? ராஜாவா? வைரமுத்தா?
எனக்கு என்னவோ தோன்றுகிறது.... !

# ராஜாவின் இசை ராஜபார்வை

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

நலிவு நீங்கி வாழ்க கவிப்பேரரசே !

நோய் வந்தால் முடங்கிப் போவோம் அல்லது புலம்பி தீர்ப்போம். இங்கொருவர் கொண்டாடித் தீர்க்கிறார். நோய் தன்னை வாட்டி, மருத்துவமனையில் தள்ளி வதக்கியதை “கொண்டாடிவிட்டுப் போகிறது நோய்” என்று இலக்கியப்படுத்திவிட்டார்.

           

வேறு யார், கவிப்பேரரசு வைரமுத்து தான். நோயை கொண்டாடி மூன்று பக்கத்திற்கு ஆனந்தவிகடனில் கட்டுரை எழுத அவரால் தான் முடியும். “இடுப்பில் சூல் கொண்டது வலி” எனும் போதே கட்டுரையை தொடர்ந்து படிக்க வைக்கிறார்.

இயற்கையாகவே அறிவியலை சற்று ஆழ்ந்து உள் வாங்கி தன் கவிதைகளில் கையாள்பவர் கவிப்பேரரசு. அதிலும் தன்னையே பீடித்த நோய் எனும் போது, தன் அனுபவத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

“வலி சிரித்தது; சிரிப்பு வலித்தது” படிக்கும் போதே நமக்கு வலிக்கிறது. இரண்டு வார்த்தைகளை மாத்திரம் கொண்டு ஒட்டு மொத்த உணர்வையும் சொல்லிவிட்டார்.

“என் வலி மீது புன்னகையை அள்ளி அப்பி ஒப்பனை செய்தேன். தமிழ் நடைக்குப் புறப்பட்டேன்” ஒவ்வொரு வரியும் வலியை ரசிக்க வைக்கிறது. அது தான் கவிஞரின் தமிழ்.

மயக்க மருந்து கொடுத்து அறுவைசிகிச்சை முடித்த போது நினைவு வருகிறது கவிஞருக்கு. இப்படி சொல்கிறார், “இன்னொரு கிரகத்தில் இருந்தேன். என் உடலும் உயிரும் என் வசம் இருப்பதை உணர்ந்தேன்”.
வழக்கமாக காதலை வர்ணிக்கும் போது, கழியும் நிமிடங்கள் கணங்களாகும் என்பார். இங்கு “ஒவ்வொரு கணமும் ஓராண்டின் கனத்தில் கழிகிறது”. சிறுநீர் கழிக்க அவர் பட்ட சிரமத்தை விளக்கும் போது, நாமே உணர்கிறோம்.

“நிமிர்தல், குனிதல், கழித்தல், குளித்தல், படுத்தல், புணர்தல், நகைத்தல், அழுதல், நட்த்தல், ஓடுதல், அமர்தல், எழுதல்..என்று உடம்பின் ஒவ்வொரு வினையும் ஒட்டு மொத்த உடம்பின் சம்மதமின்றி முற்றிலும் நிகழ்வது இல்லை, முழுமையும் அடைவது இல்லை”

இதை படிக்கும் போது கவிஞர் மேடைகளில் அடுக்கும் வார்த்தைகள் போல் தோன்றினாலும் உணர்ந்து படித்தால் அப்படியே உண்மை.

கடைசியாக நமக்கு சில அறிவுரைகள் போல் தான் கற்றுக் கொண்டவைகளை சொல்கிறார். "வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று. உலகம சிறிது; பேரன்பு செலுத்து".

படித்து, வலியை ரசியுங்கள்.

# உன் தமிழ் உன்னை குணப்படுத்தும். நலிவு நீங்கி வாழ்க கவிப்பேரரசே !