('அந்திமழை' டிசம்பர் மாத இதழுக்காக, சென்னை வெள்ளத்திற்கு முன்பாக எழுதியப் பதிவு )
கப்பல் செய்வது மிகப் பிடிக்கும். அதிலும் சாதாக் கப்பல், கத்திக் கப்பல், நான்கறைக் கப்பல் என பல வகைகளில் செய்வது சிறு வயது மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்பைத் தந்தது மழை. மழை என்றால் மகிழ்ந்து வரவேற்ற காலம்.
இன்று போல் இல்லை அன்று. அன்று வெள்ளத்தையே வரவேற்று மகிழ்ந்தது உண்டு.
அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலுக்கு பின்புறம் எங்கள் வீடு. அப்போது திடலை சுற்றி சுற்றுச் சுவர் கிடையாது. திறந்த வெளி. திடலின் ஒரு மூலையில் பெரிய புளிய மரம்.
புளிய மரத்தின் கீழ் தான் சிறு, சிறு கடைகள். ரொட்டி, மிட்டாய், நாவல்பழம், இலந்தப்பழம் என விற்கும் கடைகள். அதுவே ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. புளிய மரத்தின் பரந்த நிழலில் பஸ்ஸுக்கு காத்திருப்பார்கள்.
திடலை சுற்றி சுவர் இல்லாதக் காரணத்தால், மக்கள் போக்கு வழியாகவும் பயன் படுத்துவார்கள். மக்களைப் போலவே, மழை நீரும். அதுவும் சுதந்திரமாக திடலின் உள் நுழைந்து வெளியேறும். அது அதன் சொந்த பூமி. கால மாற்றத்தில் அதன் குறுக்கே பள்ளிக் கட்டிடங்கள். இருப்பினும் கிடைத்த இடைவெளியில் புகுந்து வெளியேறும்.
அது தான் கப்பல் விட்ட அந்த "களி" காலம்.
அப்போது மழைக் காலத்தில் ஒரு நீர்நிலை நிரம்பினால், நீர் தானாக அடுத்த நீர்நிலையை தேடிச் செல்லும். யாரும் வழிக் காட்டத் தேவை இல்லை. அதன் வழியை அதுவே அறியும். பாரம்பரிய வழியும் உண்டு, அவசரத்திற்கு கண்டுபிடிக்கும் வழியும் உண்டு.
குட்டை நிரம்பி குளத்திற்கு செல்லும். குளம் நிரம்பி ஏரிக்குச் செல்லும். ஏரி நிரம்பி வாய்க்காலுக்கு செல்லும். வாய்க்கால் காட்டாற்றை அடையும். அங்கிருந்து ஆற்றை அடைந்து, கடலை நாடிச் செல்லும். மிகும் மழை நீரின் பயணம் இதுவே அன்று.
அப்படித் தான் ஆண்டிமடத்தின் மேற்கு மூலையில் இருக்கும் வண்ணான் ஏரி நிரம்பினால், அடுத்தப் பயணம் குறவன் குட்டை. குறவன் குட்டை நிரம்பினால், பள்ளித் திடலைக் கடக்கும். கடந்து சிவன் கோவில் திருக்குளத்தையும், குட்டக்கரையையும் நிரப்பிக் கொண்டு விளந்தை பெரிய ஏரியை சேரும்.
பெரிய ஏரி நிரம்பினால், ஓடை வழியாக இடையில் பல ஏரிகளைக் கடந்து, செங்கால் ஓடையை சேரும். அங்கிருந்து 'பொன்னியின் செல்வன்' புகழ் வீராணம் ஏரி, அங்கிருந்து வெள்ளாற்றை பிடித்து, பிச்சாவரம் அருகே கடலில் கலக்கும்.
அப்படி கடலை சென்று அடைவதற்கு முன் பல ஏரிகளை நிறைத்து, விவசாயிகளின் வயலையும், மனதையும் குளிர்வித்துச் செல்லும். மழை மிகுந்து வெள்ளமானால் பயிரையும் நாசம் செய்யும். ஆனால் ஊருக்குள், வீட்டுக்குள் புகுந்ததில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது.
அப்போது மழை வலுக்கும் போது, விளையாட்டுத் திடல் எங்கள் விளையாட்டுக் கடல் ஆகும். தண்ணீர் வரும் பாதையில் மணலால் அணைக் கட்டி, கரிகாலனாய் ஆட்சி புரிவோம். அணையில் இருந்து வாய்க்கால் வெட்டி பொறியாளராய் பரிமளிப்போம். நீரில் அடித்து வரும் மீனை பழைய வேட்டி கொண்டு பிடித்து மீனவராய் திகழ்வோம்.
சமயத்தில் தலைப்பிரட்டையும், நத்தையும், வயல் நண்டும் வரும். காட்டாமணக்கு குச்சி ஒடித்து அவற்றை கரை ஏற்றி விளையாடுவோம். அப்படியே பாட நோட்டைக் கிழித்து கப்பல் செய்து, யார் கப்பல் நீண்ட தூரம் பயணிக்கிறது எனப் போட்டி நடக்கும்.
மைதானத்தின் ஒரு மூலையில் அறிவியல் ஆய்வகம் கட்டத் துவங்கினார்கள். அந்தப் பக்கம் வழக்கமாக நுழையும் நீர், அடுத்த வருடம் புதியப் பாதைக் கண்டுபிடித்தது. காடுவெட்டி சாலையில் செல்ல ஆரம்பித்தது.
குறவன்குட்டை தாண்டும் நீரின் பாதையில் புதிய வீடுகள் முளைத்தன. நீர் கடைவீதிக்கு வந்தது. கடைவீதி சேறும், சகதியுமானதால் வடிகால் வாய்க்கால் கோரிக்கை வந்தது. கான்கிரீட் வாய்க்கால் கட்டப்பட்டது.
இதனால், துவக்கமான வண்ணான் ஏரியில் இருந்து வரும் நீரின் பாதை குறுகியது. அது வேறு வழி தேடியது. பக்கத்தில் இருந்த வாரச் சந்தை தாழ்வான பகுதி. எளிதாக நுழைந்தது. சந்தையை ஒட்டி இருந்த குடியிருப்புகளையும் விட்டு வைக்கவில்லை வெள்ள நீர். அப்புறம் வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டி வந்தது.
நீரின் பாதையை மறித்ததால், மக்கள் வாழ்க்கை பாதிப்பு, அரசு பணிக்கும் நெருக்கடி. அது ஒரு புறம். இன்னொரு புறம் பால்ய பக்கங்களை காணவில்லை. ஊரின் அடையாளம் மாறிப் போனது.
இப்போது பள்ளித் திடலில் நீரின் தடமே இல்லை. திடலை சுற்றி காம்பவுண்ட் சுவர். உள்ளே நீர் நுழையப் பாதை இல்லை. புளியமரம் இல்லை. புளியமரத்து கீழ் இருந்த கடைகள் இல்லை. இயற்கையானப் பேருந்து நிறுத்தமும் இல்லை.
இன்றைய சிறுவர்களுக்கு மீன் பிடிக்கும் வாய்ப்பும் இல்லை, நத்தை ஓட்டும் வாய்ப்பும் இல்லை, மணல் அணைக் கட்டுகிற வாய்ப்பும் இல்லை, வாய்க்கால் வெட்டும் வாய்ப்பும் இல்லை. மொத்தத்தில் நீர் விளையாட்டே மறைந்து போனது, மறந்துப் போனது.
சமீபத்து மழை வெள்ள நாள். மகன் சொன்னான்,"அப்பா, பிளாட்ஃபார்ம் வரைக்கும் தண்ணி நிக்குது". நான் சொன்னேன், "நோட்ட கிழிச்சு, கப்பல் செஞ்சு விட்டுப் பாருப்பா. நாம் கப்பல் படை வைத்திருந்த ராஜேந்திர சோழன் மண்ணை சேர்ந்தவர்கள்".
இயற்கையின் பாதையை மறிக்க, மறிக்க அது புதியப் பாதை வகுக்கும்.
# மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக