நான் எழுதிய “நூல் மதிப்புரை”.
கிழக்கு பதிப்பகத்தாரால் நடத்தப்படுவது “மதிப்புரை” வலைதளம். இதில் என்.சொக்கன் எழுதியுள்ள “அக்பர்” நூல் குறித்து, நான் எழுதியுள்ள விமர்சனம் வெளியாகியுள்ளது. பல நூல்கள் குறித்த விமர்சனம் இந்த வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.
இணைப்பில் “மதிப்புரை”…
“வரலாற்றுப் புத்தகங்கள் நாயகரை மாத்திரமே சுற்றி சுற்றி வரும். ஆனால் அக்பரைப் பற்றிய வரலாறு துவங்குவதற்கு முன்பாக அவரது தந்தை ஹூமாயூன் பற்றியே 50 பக்கங்களுக்கு விரிகிறது புத்தகம். ஆனால் இது தான் அக்பர் வரலாற்றை முழுமையாக நாம் அறிவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது.”
அக்பர்
என். சொக்கனின் இனிய நடையால் “அக்பரோடு” இருப்பதாக உணர்கிறோம். அவரது அரியாசனத்துக்கு பக்கத்து இருக்கையில் அமர்கிறோம், அவரோடு சித்தூர் கோட்டையை முற்றுகையிடுகிறோம். வழக்கமாக அரசர்களது வரலாறு, எழுதப்படும் நடையால் சற்று ஆயாசம் தரும். ஆனால் இங்கு சமகால நிகழ்வுகளைப் படிப்பதைப் போல விறுவிறுப்பான நடையில் கொண்டு செல்கிறார்.
வரலாற்றுப் புத்தகங்கள் நாயகரை மாத்திரமே சுற்றி சுற்றி வரும். ஆனால் அக்பரைப் பற்றிய வரலாறு துவங்குவதற்கு முன்பாக அவரது தந்தை ஹூமாயூன் பற்றியே 50 பக்கங்களுக்கு விரிகிறது புத்தகம். ஆனால் இது தான் அக்பர் வரலாற்றை முழுமையாக நாம் அறிவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. ஹூமாயூனது போராட்ட வரலாறு மிகப் பெரிய தன்னம்பிக்கை வரலாறாக இருக்கிறது, தனிப் புத்தகமாக போடும் அளவிற்கு. பாடப் புத்தகத்தில் ஒரு பத்தியில் கடந்து போய்விடுகிற ஹூமாயூன், இந்தப் புத்தகத்தால் நம் மனதில் பதிந்து விடுகிறார்.
ஹூமாயூன் மாத்திரம் கொண்டாடப்படவில்லை. பாபர், ஹூமாயூன், அக்பர் என மூன்று தலைமுறைக்கும் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக விளங்கிய “பைரம் கான்” பற்றிய பதிவு அருமை. அவர் எப்படி மொகலாயப் பேரரசு சிதறிய நேரத்திலும் உறுதுணையாக இருந்தார், மீண்டும் ராஜ்யம் அமைந்த நேரத்தில் சிறப்பாக கோலோச்சி “செயல்”பட்டார் என விவரிக்கிறது. இதெல்லாம் பாடப் புத்தகங்களில் இடம் பெற வாய்ப்பில்லாத செய்திகள். ஆனால் இவைதான் வாழ்க்கைக்கு பாடமாகும் செய்திகள்.
ஆரம்பத்தில் விளையாட்டுப் பிள்ளையாக, எளிய மனிதராக இருக்கும் அக்பர், நேரடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நேரத்தில் பைரம்கானை சங்கடப்படுத்தாமல் எடுக்கும் நடவடிக்கைகள் அவரது ராஜதந்திரத்தை வெளிப்படுத்துகிறது. அதே சமயம் மஹம் அங்காவும் அவரது மகன் ஆதம்கான் ஆகியோரை சுதந்திரமாக விட்டு, அவர்களும் தவறு செய்யும் நேரத்தில் லகானை இழுத்துப் பிடிப்பதை சுவையாக நாவலைப்போல் கொண்டு சென்றிருக்கிறார் சொக்கன்.
சித்தூர் கோட்டை முற்றுகை குறித்த அத்தியாயம் அக்பரது களச் செயல்பாட்டுக்கு சான்று. அதே போல் நூல் ஆசிரியரின் உழைப்பும் அந்தக் காட்சிகளில் நம்மை உள் இழுத்துச் செல்கிறது. அந்தக் காட்சிகளை திரைப்படம் போல் சித்தரித்திருக்கிறார். அதே சமயத்தில் அக்பரின் எதிரிகளான ராஜபுத்திரர்கள் குறித்தும் பெருமையாகவே பதிவு செய்திருக்கிறார் சொக்கன்.
வெறுமனே அக்பரின் பெருமைகளை மாத்திரம் அடுக்காமல், சித்தூர் கோட்டையைக் கைப்பற்றும்போது அக்பரும், அவரது படையினரும் நடந்துகொண்ட தவறான விதம் குறித்துச் சொல்லியிருப்பது உண்மையான வரலாறு. விருப்பு, வெறுப்பற்ற எழுத்து. ராஜபுத்திர தளபதி “ஜெய்மால் ரதோர்” அக்பரால் சுட்டு வீழ்த்தப்பட்டது நியாயம், அநியாயம் என்ற இரண்டு வாதங்களையும் வைத்து, வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிட்டது நேர்மையான யுக்தி.
வழக்கில் உள்ள பல செய்திகளுக்கு, நேர்மாறான உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது இந்த நூல். அக்பரின் மகன் சலிம்-அனார்கலி காதல் மகா காவியமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் காதலுக்கு அக்பர் எதிரி என்ற தோற்றம் வேறு. ஆனால் “அனார்கலி” என்ற ஒருவரே கிடையாது என்ற தகவலை அழுத்தமாகத் தெரிவித்துள்ளார் சொக்கன். எதிர்காலத்திலாவது இது தெளிவாகட்டும்.
அதே போல பீர்பால் குறித்த செய்திகள். ஒரு விதூஷகராக மாத்திரமே நாம் அறிந்த “பீர்பால்” உண்மையில் சிந்தனையாளர், கவிஞர், அரசருக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர், படையை வழிநடத்திச் செல்லக் கூடிய வீரர் என பல பரிணாமங்களைக் கொண்டவர் என்ற செய்திகள் பிரமிப்பூட்டுகின்றன.
அக்பர் அரசவையில் இடம் பெற்றிருந்த ஒன்பது பேர் “நவரத்தினங்கள்” என்று அழைக்கப்பட்டதில் துவங்கி அவர்களைக் குறித்த விவரிப்பு சிறப்பு. அபுல் ஃபஸலோடு ஏற்பட்ட நெருங்கிய நட்பு, பைரம்கானின் மகன் கவிஞர் அப்துல் ரஹிம்கானை அமைச்சராக்கியது ஆகியவை அக்பரின் மேல் கூடுதல் மதிப்பை ஏற்படுத்துகின்றன. அதே போல் மத பேதம் இல்லாமல் திறமை இருந்தவர்களைத் தேடிப் பிடித்து தன்னோடு வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தியது அக்பரின் வெற்றி.
மொகலாய வம்சத்தில் வந்திருந்தாலும், ஒரு காலும் மதச்சார்பாக நடக்காமல், அனைத்து மதத்தினரையும் மதித்து நடந்தது மற்ற மொகலாயப் பேரரசர்களை விட அக்பரை ஒரு படி மேலே கொண்டு நிறுத்துகிறது. அதிலும் சிக்ரியில் அனைத்து மதத்தினரும் விவாதிக்க இடமளித்து, வாய்ப்பு கிடைக்கும்போது அக்பரும் பங்கேற்றார் என்பது நல்ல செய்தி.
கல்வியறிவை ஏற்காத அக்பர் பிற்காலத்தில் தேடித் தேடி அறிவைப் பெறுவது, அறிஞர்களோடு உறவாடியது, பெற்ற அறிவால் “தீன் இலாஹியை” உருவாக்கியது என மெல்ல விரியும் அக்பர் வாழ்க்கை, அவரது அமைச்சரவை, ஆட்சிமுறை, தலைநகர் உருவாக்கம் என சலிப்புத் தட்டாமல் நம்மைப் படிக்க வைப்பது நூல் ஆசிரியர் சொக்கனின் திறமைதான்.
கடைசிக் காலத்தில் மகன் சலிமால், அக்பர் மன வருத்தத்தோடு இருந்தது, அதற்குத் தீர்வு காண முடியாமல் தவித்தது, ஒரு கட்டத்தில் மகனா? பேரனா? எனத் திண்டாடியது, மகனையே சிறைப்பிடித்து சீர்திருத்தியது என எதையும் விட்டு வைக்கவில்லை சொக்கன்.
இன்னும் விரிவாக எழுதக்கூடிய அத்தனை வாய்ப்புகளோடும் அமைந்திருக்கிறது இந்த நூல். ஆனால் வாசகர்களை வருத்தாமல் படிக்க வைக்க, சுவையாக சுருக்கி அக்பரின் வரலாற்றை வழங்கியிருக்கிறார் சொக்கன். இன்னும் எழுதியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அக்பர் வரலாற்றோடு ஹூமாயூன், பைரம்கான், ஷேர் கான், ஹேமச்சந்திரா, ராணா உதய் சிங், அபுல் ஃபஸல், தான்சேன், பீர்பால் ஆகியோர் குறித்து சொக்கன் விவரித்திருக்கும் விதம் மேற்கொண்டு அவர்களது உண்மை வரலாற்றை அறியும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிப்பாடங்களில் அரசால் பாடமாக வடிவமைக்கப்பட்ட அக்பருக்கும், பீர்பாலுடனான நகைச்சுவைக் கதைகளில் உலாவும் அக்பருக்கும் இருந்த இடைவெளியை “உண்மையாக” நிரப்பியிருக்கிறார் என். சொக்கனின் “அக்பர்”.
- எஸ்.எஸ். சிவசங்கர்
ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-781-7.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக