பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

உதவி மகிழ்வோம், இயலாதோர்க்கு

எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர், அதனால் அரசு ஒத்துழைக்கவில்லை என சும்மா இருக்கவும் முடியாது.

             

எனது கல்லூரி நண்பர் செல்வம் அவர்களால், எங்களது தொகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு குன்னம் பகுதியில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு.

இந்த முறை செந்துறை பகுதியில் அந்த வாய்ப்பு. செயற்கை கை, கால், உபகரணங்கள் தேவையானவர்களை கண்டறியும் முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தது. அதில் அளவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

அளவுகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கை, கால்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 28.01.2015 அன்று செந்துறையில் நடைபெற்றது. 45 பேர் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

எனது நண்பர் செல்வம், தஞ்சாவூர் பவர் கம்பெனியில் துணை பொது மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர்களது நிறுவனத்தின் சமூகப் பணிகள் செய்வதற்கான நிறுவனம் லேன்கோ பவுண்டேஷன்.

அந்த லேன்கோ பவுண்டேஷன் தான் இந்த பொருட்களை இலவசமாக வழங்கினார்கள். பயனாளிகளுக்கு கடிதம் அனுப்பி, தொலைபேசியில் தகவல் சொல்லி, கழக நிர்வாகிகள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தோம்.

அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய பிறகு உணவு வழங்கி, திரும்பி செல்ல ஏற்பாடு செய்திருந்தோம். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசை எதிர்பார்க்காமல், இதை செய்ய முடிந்தது ஒரு ஆத்ம திருப்தி.

இந்த நிகழ்ச்சியின் நேரத்தில் எனது மலேசிய நண்பர் ஷரீன் தமிழகம் வருகை தந்திருந்தார். ஷரீன் மொகம்மது ஜமாலுதீன் மலேசிய ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர். பாசிங்குடா பகுதி கவுன்சிலர். நமது கிராமப் பகுதிகளையும், மக்கள் வாழ்நிலையையும் பார்க்க விரும்பினார்.

அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். அவரது பங்களிப்பாக செந்துறையில் ஒரு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவிட விரும்பினார். அதே போல நோட்டு, பேனா, பென்சில் வழங்கி மகிழ்ந்தார்.

பிறகு செயற்கை கை, கால் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வந்திருந்தோரை பார்த்து நெகிழ்ந்து போன ஷரீன், அடுத்த வருடம் இந்தப் பகுதி மக்களுக்கு தன்னாலான ஏதேனும் ஒரு உதவியை செய்வதாக, நிகழ்ச்சியில் பேசும் போது உறுதி அளித்தார்.

எம் மக்களுக்கு உதவிய லேன்கோ பவுண்டேஷனுக்கும், நண்பர் செல்வம் அவர்களுக்கும், நண்பர் ஷரீன் அவர்களுக்கும் நன்றி பல.


# உதவி மகிழ்வோம், இயலாதோர்க்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக