பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஆக்சன் ஹீரோ காமெடியன் ஆனார் !



          

நாடாளுமன்றத் தேர்தலில் உச்சத்துக்கு போன மோடி கிராஃப், டெல்லித் தேர்தலில் தரைக்கு வந்து விட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே மோடிக்கு அறுவடையானது.

காங்கிரஸின் தொடர் ஆட்சியும், அதன் மீதான ஊடகங்களின் விமர்சனமும் மக்கள் மனதில் மெல்ல மெல்ல சேர்ந்து வந்த நேரம். அதற்கு மாற்று வழியாக பா.ஜ.க சித்தரிக்கப்பட்டது ஊடகங்களால்.

அப்போது தான் மோடி களத்தில் குதிக்க ஆயத்தமானார். முதலில் கட்சிக்குள் தன்னை நிலை நிறுத்தி, கட்சி மீதான தன் பிடியை இறுக வைக்க திட்டம் தீட்டினார். குஜராத மாநிலத்தில் அவரது தொடர் வெற்றி அவரது இமேஜுக்கு வலுவூட்டியது. அப்படி வலுவூட்டுவதற்கான பணியை விளம்பர நிறுவனங்கள் முலம் மேற்கொண்டார்.

அதே பா.ஜ.க-வில் இன்னும் சில முதல்வர்கள் மூன்று முறையாக தொடர் வெற்றி பெறுகிறவர்களும் உண்டு, அவர்கள் மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சவுகான், சட்டீஸ்கரின் ராமன்சிங். இவர்கள் மீது மோடி போன்று கரையும் கிடையாது.

இவர்கள் தான் உண்டு, தன் மாநிலம் உண்டு என்றிருப்பவர்கள். ஆனால் மோடி அப்போதே திட்டமிட்டு தேசிய அரசியலில் தன்னை திணித்துக் கொண்டவர். அதற்காக கார்ப்போரேட்டுகள் துணையோடு, விளம்பர நிறுவன “வெளிச்சத்தில்” உலா வந்தார்.

திட்டமிட்டபடி காங்கிரஸின் பலவீனத்தை, தனது பலமாக மாற்றிக் கொண்டார். “வளர்ச்சி” என்ற மந்திரத்தை பிடித்துக் கொண்டு தொங்கினார். காங்கிரஸுக்கு மாற்று கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த மக்கள், ஒரு “கதாநாயகன்” கிடைத்ததாக எண்ணி விட்டார்கள். இப்படி தான் ஒரு காமெடியன், “கதாநாயகன்” ஆனார்.

மெகா மெஜாரிட்டியை கொடுத்தார்கள் மக்கள். இது அவரே எதிபாராத ட்விஸ்ட். “கதா” ஆன பிறகு அற்புத விளக்கை தேய்த்து வளர்ச்சி பூதத்தை வெளியில் கொண்டு வருவார் எனக் காத்திருந்தார்கள். கடைசியில் அது “சத்த”பூதம் தான் என்பது தெரிந்து போனது. மைக் மன்னாருவாக மாறி, காதை கிழிக்க ஆரம்பித்தார். வெறும் பேச்சு தான் வந்தது.

மைக் இல்லை என்றால் அடுத்த விமானத்தை பிடித்து வெளிநாட்டில் குதிக்க ஆரம்பித்தார். பிரதமரா, வெளியுறவுத் துறை அமைச்சரா என்று கார்ட்டூன் வந்தது.

இதை தாண்டி அதிக நேரம் ஒதுக்கியது காஸ்ட்யூம் டிசைனுக்கு தான். தினம் ஒரு டிசைன் உடை என ஆரம்பித்தவர், மணிக்கொரு டிசைன் உடைக்கு மாறி ரேம்ப் மாடலானார். ஒபாமா வந்த அன்று அவர் போட்ட “பத்து லட்ச ரூபாய்” உடை தான் அவரது காமெடியை உணர எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தது.

“வளர்ச்சி” ஓவர் கோட்டை கழட்டி விட்டு, காக்கி டிரவுசருடன் வலம் வந்ததற்கு விலை தான் டெல்லி ரிசல்ட். இந்துத்துவா, ஹிந்தி, சமஸ்கிருதம், மதமாற்ற தடைச்சட்டம், குறை சொன்ன காங்கிரஸ் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றியது என மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றினார்.

அமித்ஷாவை வைத்துக் கொண்டு கட்சியின் சீனியர்களை ஓரம் கட்டினார். மெகா மெஜாரிட்டி கிடைத்த தெம்பில் கூட்டணிக் கட்சிகளை கழட்டி விட்டார். “உலக நாயகன்” கனவில், வெளிநாடு சுற்ற ஆரம்பித்து உள்ளூர் மக்களையும் மறக்க ஆரம்பித்தார்.

மற்ற மாநிலங்களில் வந்த தேர்தல் முடிவுகள் தனக்காக கிடைத்ததாக மயக்கத்தில் இருந்தவருக்கு டெல்லி மக்கள் கொடுத்த “தெளிவு மருந்து” தான் இது.

மற்ற மாநிலங்களில் நடத்திய பிள்ளை பிடிக்கும் வேலையை டெல்லியிலும் நடத்தினார்கள். உச்சகட்டமாக முதல் நாள் கட்சியில் சேர்ந்த கிரண் பேடியை “முதல்வர்” வேட்பாளராக்கினார்கள். மோடி-அமித்ஷா கெமிஸ்ட்ரி டெல்லி லேபில் ஓர்க் அவுட் ஆகவில்லை.

டெல்லி மக்கள் நரேந்திர மோடியை, கிரண்பேடி வடிவில் ஒதுக்கித் தள்ளியுள்ளார்கள்.

# ஆடம்பரக் குப்பையை சின்ன துடைப்பத்தால் ஒதுக்கித் தள்ளியுள்ளனர் டெல்லி மக்கள் !

          !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக