பிரபலமான இடுகைகள்

திங்கள், 4 மே, 2015

படிச்ச துறையில் தான் இருக்கனும்னு அவசியமா?

"சத்யா எங்க இருக்கற, என்ன செய்யற?"
"டெல்லியில் ஒரு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் லெக்சரரா இருக்கேன்"
"என்ன எஞ்சினியரிங் படிச்சிட்டு ஆர்ட்ஸ் காலேஜிலா ?"
"ஆமாம்பா. கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் லெக்சரர்"
"எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் படிச்சுட்டு, கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்டா?"
"படிச்ச துறையில் தான் இருக்கனும்னு அவசியமா?"

இது தான் சத்தியசீலன். எனது நண்பர். ஓராண்டு பள்ளித் தோழர். அப்புறம் தொடர்பு இல்லை. மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்தோம்.

இப்போது ஒரே வகுப்பு, மின்னியல் மற்றும் மின்னணுவியல். நான்கு ஆண்டுகள் ஒன்றாக திரிந்தோம். பொறியியல் படித்ததை விட கலையை சுவாசித்தார்.

மேடை ஏறினால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேரில் வந்ததாகவே இருக்கும். லயித்து, ஒன்றிப் பாடுவார். பென்சில் கையில் எடுத்துவிட்டால், நாம் காகிதத்தில் உயிர் பெறுவோம்.

கல்லூரி முடிந்து மறுபடி காணாமல் போனார். அப்புறம் தான், டெல்லியில் இருந்து இந்தப் பிரசன்னம்.

மறுபடியும் ஜூட். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்தேன். வித்தியாசமான கெட்டப். நீண்ட தலைமுடி. பிரெஞ்சு தாடி. சயின்டிஸ்ட் போல இருந்தார்.

"இப்போ எந்த டிபார்ட்மெண்ட் சத்யா?"
"ஆட்டோமொபைல் டிசையினிங்"
"அட அதையும் விடலையா ?"
" புது ஆட்டோ ஒன்னு டிசைன் பண்ணினேன். இப்போ கார்"
"எந்தக் கம்பெனி?"
"அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் டி.ஜி.எம்"

மிகுந்த மகிழ்ச்சி. என் ஊர், பள்ளி, கல்லூரித் தோழனின் உயர்வு. இரண்டு, மூன்று முறை சந்தித்தோம். அவ்வப்போது அலைபேசி தொடர்பு. ரெண்டு பேரும் அவ்வளவு பிஸி. ஒரு நாள் ஒரு மெயில் அனுப்பினார்.

ஒரு ஓவியம். விமானத்திற்கு காத்திருந்த நேரத்தில், என் நினைவு. என்னை அலைபேசியில் ஓவியமாய் தீட்டியிருக்கிறார். என் முகநூல் முகப்புப்படத் தொகுப்பில் இருக்கிறது.

         

கடந்த வாரம் ஜூனியர் விகடன் பத்திரிக்கையை புரட்டும் போது கடைசி பக்கத்தில் சத்யா முகம். மோட்டார் விகடன் பத்திரிகை நடத்தும் "ஆட்டோமொபைல் டிசைன் மற்றும் வேலைவாய்ப்புக் கருத்தரங்கம், கோவையில்"

க.சத்தியசீலன் , டிசைன் பிரிவுத் தலைவர், பொது மேலாளர், அசோக் லேலாண்ட். பதவி உயர்வு பெற்ற பிறகு, இப்போ வேற கெட்டப். வெளுத்த தலையுடன் புரொபசர் போல.

     

கருத்தரங்க பேச்சை கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வருத்தத்தை போக்கியது மோட்டார் விகடன். தொலைபேசி சேவையில் அவரது கருத்துக்களை வழங்குகிறது. நான் கேட்டு மகிழ்கிறேன். நீங்களும் கேட்டு மகிழ : 044-66802916.
பயனுள்ள தகவல்கள், எளிமையாக. என்ன படிக்கலாம் என்பன குறித்தும். நேரில் பேசுவது போல, சகஜமான, நட்பானக் குரலில்.
# இன்னும் பல உயரங்கள் எட்டுவாய் சத்யா ! 

                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக