பிரபலமான இடுகைகள்

சனி, 9 மே, 2015

அன்பின் உருவம் அன்பில் பொய்யாமொழி !

1989. கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. தலைவர் கலைஞர் மூன்றாவது முறையாக முதல்வர்.

         

என் தந்தையார் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். தலைவர் கலைஞர் அவர்களால் சட்டமன்றக் குழுக்களில் ஒன்றான, பொது நிறுவனங்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

குழுவில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள் உறுப்பினர். குழு வட இந்திய சுற்றுப் பயணம் மேற் கொண்டது. அப்பா, அம்மா, தம்பி போன பயணத்தில் கல்லூரி மாணவனாக, வேலை நாட்கள் என்பதால் நான் பங்கேற்க இயலவில்லை.

குழுவில் தளபதி அவர்களோடு அண்ணன் அன்பில் பொய்யாமொழி அவர்களும் பயணித்தார். அதில் இருந்து என்னை எங்கு பார்த்தாலும் , "டெல்லி வராமல் போயிட்டியே "என்று வருத்தப்படுவார்.

"சங்கர், அடுத்து எங்கக் கூட வர்ற" என்று உரிமையோடு சொல்லுவார். காலங்கள் கடந்தது. 1996-ல் மீண்டும் கழக ஆட்சி. அப்போது அண்ணன் பொய்யாமொழி திருச்சி-2 சட்டமன்ற உறுப்பினர். நான் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்.

கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ஆரம்பித்தன. திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தான் பெரம்பலூர் மாவட்டத்திற்கும். அதன் இயக்குனர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அண்ணன் பொய்யாமொழி அவர்களும் போட்டியிட்டார்கள். வாக்களிக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் தலைவர்களை அரியலூர் பகுதியில் இருந்து அழைத்து சென்றிருந்தேன்.

பிறகு அண்ணன் பொய்யாமொழி அவர்கள் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். என்னை அழைத்தவர், "உன் பகுதிக்கு வங்கி மூலம் என்ன வேலை ஆக வேண்டுமோ சொல். உடனே நடக்கும்" என்றார்.

உரிய அதிகாரியை அழைத்து "தம்பி வந்தால் என்னிடம் வர வேண்டாம், வேண்டியதை முடித்துக் கொடுங்கள்" என்று ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தார். எப்போது வந்தாலும் வங்கி விருந்தினர் இல்லத்தில் அறை வழங்கவும் உத்தரவிட்டார்.

அண்ணன் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்படியானால் எங்களை போன்ற இளையோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பது எங்களது எண்ணம்.

அண்ணன் இளையவர்களை ஊக்குவித்து, தளபதி அவர்களிடம் கொண்டு சேர்ப்பார் . அவரால் ஏற்றம் பெற்றோர் எண்ணற்றோர்.

ஆனால் உழைப்புக்கு உரிய உயரம் அடைவதற்குள் காலம் முந்திக் கொண்டது. அவரைப் பறித்துக் கொண்டது. எனை போன்றோருக்கு பேரிழப்பு . கழகத்திற்கும், தளபதி அவர்களுக்கும் அளவிட முடியா இழப்பு. இன்று அண்ணன் பிறந்தநாள் .

# மறைந்தாலும் வாழ்கிறார், மறையாமல் நம் மனதில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக