அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்.
கல்லூரி வாழ்க்கை என்றால் இனிமை தான். காரணம் பள்ளியில் படிக்கும் போது, தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இருக்கும். குடும்பத்தினரின் கட்டுப்பாடும், அழுத்தமும் கூடுதலாக இருக்கும்.
கல்லூரி சென்ற பிறகு நெருக்கடிகள் இல்லாததால், சுதந்திரம் கிடைத்த உணர்வு வரும். அது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சற்று மிகுதியாக வரும்.
கல்லூரி வாழ்க்கையில் இரவுகளில் நண்பர்களோடு உரையாடி, அளவளாவி, விவாதித்து, கதைப் பேசி தாமதமாகப் படுத்து, காலையில் தாமதமாக எழுவது பெரும்பாலானவர்களின் வழக்கம்.
கல்லூரி மாணவர்கள் என்றால் அந்த இளம் வயதிற்குரிய ஆர்வத்தோடு வண்ண, வண்ண உடைகளை விதவிதமான ஸ்டைல்களில் அணிவது இயல்பு.
அதிலும் குக்கிராமத்தில் இருந்து சிதம்பரம் நகருக்கு சென்று பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இன்னும் சற்று கூடுதல் உற்சாகம். காரணம் கிராமத்தில் கிடைக்காத வாய்ப்பு, சுதந்திரம் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது கிடைக்கும்.
ஆனால் இந்த மாணவர் காலை 5 மணிக்கு எழுந்து, 5.30க்கு குளித்து முடித்து விட்டு, தலையில் எண்ணெய் தடவி, படிய வாரி தயாராகி விடுவாராம், கல்லூரி செல்ல.
எப்போதும் ஒரே நிற உடை தான். ஆமாம் வெண்ணிற சட்டை, வெண்ணிற கால்சராய். அதைத் தாண்டி மற்றொரு நிற சட்டை தான் அவருக்கு பிடிக்கும். அது "கருப்பு சட்டை".
சிதம்பரம் நகரில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அதிகம் செல்வது "நடராஜர் கோவில்". அடுத்து சிதம்பரத்தின் பிரசித்திப் பெற்ற நடராஜா, லேனா சினிமா தியேட்டர்கள்.
இதிலும் இவர் மாறுபட்டவர் தான். கல்லூரிக்கு அடுத்தபடியாக அவர் சென்ற இடம், திராவிடர் கழக பொதுக் கூட்டங்கள். சுற்று வட்டார பகுதிகளில் எங்கு அய்யா தந்தை பெரியார் வந்தாலும் இவர் இருப்பார்.
இது 1960ம் ஆண்டு வாக்கில். பிறகு அந்த மாணவர் அரசியலில் இணைந்து, தலைவர் கலைஞரின் தம்பியானார். அவரை சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார் தலைவர் கலைஞர். 2015ல் அந்த மாணவருக்கு திமுகழகத்தின் சார்பில்,"பெரியார் விருது" அறிவித்திருக்கிறார் தலைவர் கலைஞர்.
ஆம். என் தந்தையார், 'பெரியாரின் தொண்டர்' எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு பெரியார் விருது.
தலைவர் கலைஞர் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும், கழகப் பொருளாளர் தளபதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக