பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சின்சியர் சி.பி.அய்

"சார், இந்த பொம்மை எதுல செஞ்சது?"

"வாங்கும் போது, மண்ணுல சுட்டு செஞ்சதா தான் சொன்னாங்க சார்"

"மார்பிள்ல செஞ்ச மாதிரி இருக்குது"

"எடுத்துக்கிட்டு போய் செக் பண்ணிடுங்க சார்"

***********************

"இந்த குத்துவிளக்கு தங்கத்துல செஞ்சதா?"

"சார், குத்துவிளக்கு தங்கத்துல செய்வாங்களா?. எடுத்துக்கிட்டு போய் பாருங்க"

***********************

"சார், இந்த மூக்குத்தி ஒரு பவுன் இருக்குமா?"

"மூக்குத்தி ஒரு கிராம்ல தான் போடுவாங்க வழக்கமா. அதிகம் போனா ரெண்டு கிராம். அதுக்கு மேல போட்டா மூக்கு தாங்காது சார்"

************************

இவை அண்ணன் ஆ.ராசா அவர்களின் சொந்த கிராமமான வேலூர் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் சி.பி.அய் ரெய்ட்டின் போது நிகழ்ந்த உரையாடல். சி.பி.அய் அதிகாரிக்கும் ராசா அவர்களின் அண்ணன் கலியபெருமாள் அவர்களுக்கும் நடந்த உரையாடல்.

அந்த வீடு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருக்கும். அண்ணன் ராசா அவர்களின் தாத்தா இலங்கைக்கு தோட்ட தொழிலாளியாக சென்றவர். இவரது தந்தை அங்கு உழைத்து முன்னேறி, துணிக்கடை நடத்தும் அளவுக்கு உயர்ந்தவர்.

இலங்கையில் ஈட்டிய பொருளைக் கொண்டு, வேலூரில் விவசாய நிலங்கள் வாங்கினார். அப்போது கட்டிய வீடு தான் இது. அந்த காலத்தில் 'மெட்ராஸ் டெரஸ்' எனப்படும் மாடி வீடாகக் கட்டப்பட்டது. ஊரில் அது தான் அப்போது மெத்தை வீடு. இது அவர்கள்  பொருளாதாரத்தில் அப்போதே எந்த அளவிற்கு முன்னேறி இருந்தார்கள் என்பதை உணர்த்தும்.

அந்த வீட்டில் இருந்த மின்விசிறி, மின்விளக்கு வரை சின்சியராகக் கணக்கெடுத்திருக்கிறார்கள் சி.பி.அய்.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் முன்னேறிய குடும்பம். பெரிய அக்கா விஜயா அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் படிப்பு முடித்து, ஆசிரியராக பணியாற்றியவர். பெரிய அண்ணன் ராமச்சந்திரன் அய்.எப்.எஸ் தேர்வில் வென்று வனத்துறையில் பணியாற்றியவர். சுற்றுசூழல் துறையில் பி.எச்டி முடித்து , குளோபல் வார்மிங் குறித்த ஆய்வாளர்களில் உலக அளவில் குறிப்பிடத் தக்கவர்.

சகோதர, சகோதரிகள் அத்தனை பேரும் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள். அண்ணன் ராசா அவர்களும் பி.எஸ்.சி, எம்.எல் முடித்து, பெரம்பலூரில் சிறந்த வழக்கறிஞராக பெயர் எடுத்தவர். இவர்கள் வீடுகளில் தான்  ரெய்டு செய்யப்பட்டு, கணக்கிடப்பட்டுள்ளது.

இவை அத்தனையும் ஏற்கனவே சி.பி.அய் தலைமையகத்தாலேயே கணக்கிடப்பட்டு , சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு மீறிய சொத்து இல்லை என நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அண்ணன் ராசா அவர்களின் இல்லத்தில் சோதனை செய்து ஏகப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக செய்தி பரப்பப்பட்டது. அவை அத்தனையும் ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணைக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்.

இதில் கொடுமை என்ன என்றால் அமலாக்கத்துறையும் சி.பி.அய்யும் இணைந்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு, முடிவுக்கு வந்த ஆவணங்கள் தான் இப்போது இவர்களுக்கு புதிய ஆவணங்களாம்.

இதில் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மற்றும் இன்னும் சில நண்பர்களின் சொத்துக்களும் அடங்கும். விசாரணைக்கு வரும் போது தான் இந்த வழக்கின் அவசர கோல புனைவின் அலங்கோலம் வெளியில் வரும்.

*********************

மீண்டும் பெரம்பலூர்.

"இது என்ன பத்திரம் சார்?"
"அரசு மருத்துவக்கல்லூரி கட்ட, அரசு இடம் இல்லாததால் எங்களது 'ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை ' மூலம் இடம் அரசுக்கு இலவசமாக வழங்கியதின் நகல்"
"அரசாங்கம் வந்து உங்கள இடம் கேட்டுதா? உங்களுக்கு ஏன் இந்த வேலை?"

ரெய்டுக்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு?. இது யாருடைய வாய்ஸ் ஆக இருக்கும் என்பதைக் கூடவா  யோசிக்க முடியாது.

இறுதியாக டாப் நியூஸ்.

ஒரு மிக முக்கிய ஆவணம் கைப்பற்றிக் கொண்டு செல்லப் பட்டுள்ளது.

1996ல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன அண்ணன் ஆ.ராசா, 1999ல் அமைச்சராகி, 2003ல் தொலைத்தொடர்பு துறை அமைச்சராகி , 2G ஏலம் மூலம் பணம் ஈட்டி, ஒரு இடத்தை வாங்கி, யாருக்கும் தெரியாமல் இருக்க தன் பாட்டி "உண்ணாமை" பெயரில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதை எப்படியோ கண்டுபிடித்து ஆவணத்தை கைப்பற்றி விட்டார்கள்.

பதிவு செய்த ஆண்டு தான்  கொஞ்சம் அட்வான்ஸ். ஆமாம், 1935.

# வாட் இஸ் திஸ் ஆப்பிசர்ஸ் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக