பிரபலமான இடுகைகள்

புதன், 13 ஜூலை, 2016

கள்ளிக் காட்டில் பொறந்த கவியே

"இது ஒரு பொன்மாலை பொழுது 
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்", இந்த வரிகள் தான் கவிஞரின் முதல் திரை வரிகள். 'நிழல்கள்' திரைப்படம் கவிஞர் வைரமுத்துவின் தமிழ் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதற்கு பிறகு கவிஞருக்கு ஒவ்வொரு நொடியும் பொன்னானப் பொழுதாகிப் போனது. அந்தப் பாடல் வெளியான ஆண்டு 1980.

இசைஞானி இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து காம்பினேஷன் என்றால் 'வெற்றி' என எழுதி வைத்துக் கொள்ளலாம். 'முதல்மரியாதை' திரைப்படம் அதில் உச்சம். இன்றும் 'வெட்டி வேரு வாசம்' வீசிக் கொண்டே இருக்கிறது. 'பூங்காற்று திரும்புமா, எம் பாட்ட விரும்புமா?' கவிஞர் கேட்ட கேள்விக்கு மக்கள் மட்டும் விரும்புவதாக சொல்லவில்லை, அரசே சொன்னது, 'தேசிய விருது' கொடுத்து.

இசைஞானியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் கூட்டணி உடைந்த போது, வைரமுத்து அவ்வளவு தான் என பலரும் ஆருடம் கூறினர். ஆனால் கவிஞர் இசையமைப்பாளர் சந்திரபோஸோடு இணைந்து சஙகர்குரு, மனிதன், ராஜா சின்ன ரோஜா என ஒரு ரவுண்ட் வந்தார்.

யாரோடு இணைய நேரிட்டாலும் அங்கு தன் முத்திரையை பதிப்பார் கவிஞர். கமலுக்காக "அந்திமழை பொழிய" உருகுவார். ரஜினிக்காக "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்று அதிரடிப்பார். முரளிக்காக 'ஆத்தாடி பாவாடக் காத்தாட' என நெஞ்சு கூத்தாடுவார். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவைக்காக "கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என தத்துவம் பேசுவார்.

1992ல் புதுயுக இசையோடு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். அவரும் கவிஞரும் இணைந்து 'ரோஜா'வுக்காக  பின்னிய 'சின்ன சின்ன ஆசை' பெரிய, பெரிய ஹிட் ஆகிப் போனது. கவிஞருக்கு தேசிய விருதை மீண்டும் பெற்றுக் கொடுத்தது. இந்தக் கூட்டணி இன்றும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கானா பாடல்களால் பிரபலமாக இருந்த தேவா, கவிஞரோடு இணைந்து கொடுத்த படங்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றன. அண்ணாமலை, ஆசை, பாட்சா, குஷி என ஒவ்வொரு படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய அளவில் ஹிட். ரஜினிக்கும் இந்த தேவா, வைரமுத்து கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ரஜினியின் பிம்பத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு சென்றன பாட்சா படப் பாடல்கள்.

பரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என அடுத்த சுற்று இசையமைப்பாளர்களோடு இணைந்து ஸ்கோர் செய்து வந்தார். காலத்திற்கு தகுந்தாற்போல் தன்னையும், தன் தமிழையும் புதுப்பித்துக் கொண்டே வந்தார்.

இப்போது அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களான ஜி.வீ.பிரகாஷ், தேவி ஶ்ரீபிரசாத், ரகுநந்தன், ஜிப்ரான் , இமான் என எல்லாக் கூட்டணியும் இவருக்கு பொருந்திப் போகிறது, இவரது வார்த்தைகள் பாடல்களில் லாகவகமாகப் பொருந்திப் போவது போல. இளைய தலைமுறையோடும் கைக்கோர்க்கிறது இவரது தமிழ்.

2011ல் 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படப் பாடலுக்கு  ஆறாவது முறையாக தேசிய விருது பெற்றார். 'கள்ளிக் காட்டில் பொறந்த தாயே' பாடல் மண்ணின் மணம் வீச மனதைத் தைக்கிறது. தன் சொந்த மண்ணின் சாரத்தை அப்படியே அள்ளித் தருகிறார். 'எந்திரன்' திரைப்படப் பாடல்களுக்கு அறிவியலை அரைத்து ஊற்றி எழுதிய அதே எழுதுகோல் தான், இந்தத் 'தென்மேற்கு பருவக்காற்று'க்கு கள்ளிக் காட்டு மண்ணை கரைத்து ஊற்றி கவி தீட்டியிருக்கிறது.

1980ல் துவங்கிய பொன்னான பொழுது கவிஞருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் தான். 2016லும் தன் வார்த்தைகளின் வீரியம் குறையாமல், இளமை குறையாமல், வளமை குறையாமல், கவர்ச்சி குறையாமல் தன் பாடல் கொடியை உயரப் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு "சராசரி ரசிகனாக" இந்த மக்கள் மனம் கவர்ந்தக் கவிஞனை, அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

# கள்ளிக் காட்டில் பொறந்த கவியே, என்ன  ரசிக்க வச்ச நீயே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக