அது ஒரு ஷெல் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை. ஆயுதம் தாங்கிய நான்கு பேர் அந்த ரிபைனரி உள்ளே நுழைந்தனர். ஜப்பான் சிகப்புப் படை என்ற தீவிரவாதக் குழுவினர். அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் செல்வதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு வந்தவர்கள். பணி முடித்து, அங்கிருந்த ஒரு படகை திருடிக் கொண்டு கிளம்பியவர்கள், தப்பிப்பதற்கு வசதியாக படகின் பணியாளர்கள் அய்ந்து பேரை பணயக் கைதியாக பிடித்துக் கொண்டு தப்பித்தனர். அது 1974ஆம் ஆண்டு.
பணயக் கைதிகளை விடுவிக்க சிங்கப்பூர் அரசு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தப்பிப்பது திட்டம். அதற்கு பணயக் கைதிகளுக்கு பதிலாக வேறு சிலரை அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அரசு ஊழியர்கள் சிலர் தாங்கள் பணயக் கைதியாக செல்ல முன் வந்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய நாதன்.
எஸ்.ஆர்.நாதன். மறைந்த சிங்கப்பூர் ஜனாதிபதி. இன்னொரு தமிழர் இவர் போல் சிங்கப்பூர் அரசியல் வானில் புகழ் பெறுவது இனி சிரமம். தன் பணியின் மூலமாக வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து, மக்கள் மனதிலும் உயர்ந்து, உயர்ந்த மனிதராக, சிங்கப்பூரின் அனைத்துத் தரப்பு மனிதர்களும் பாராட்டும் மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
மிகக் கொடூரமான சிறுப்பிராய வாழ்விலிருந்து இந்த உயரத்தை அவர் அடைந்திருப்பது பிரமிக்க வைக்கிறது. செல்லப்பன் மகன் ராமநாதன் தான் எஸ்.ஆர்.நாதன். செல்லப்பன் மலேசியாவின் ஜொகுர் மாநிலத்தில் ஒரு ரப்பர் தோட்டத்தின் வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். 1930 வாக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் செல்லப்பன் குடும்பம் சிக்கி சீரழிந்தது.
பெரும் கடன் சுமையால் செல்லப்பன் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அப்போது ராமநாதனுக்கு வயது எட்டு. குடும்பம் சிங்கப்பூர் திரும்பியது. பள்ளி காலத்திலேயே வேலைக்கு சென்றார் நாதன். அப்போது சிங்கப்பூர் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்த நேரம். ஜப்பான் காவல் துறைக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார்.
இப்படி கஷ்டமான சூழலிலும் கல்வியை விடவில்லை. பள்ளிப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1954ல் மலேயப் பல்கலைக்கழகத்தில் சமூகக் கல்வியில் பட்டயம் பெற்றார். 1955ல் சிங்கப்பூர் அரசின் ஆட்சித்துறையில் மருத்துவ சமூகப் பணியாளராக துவங்கினார் தன் நீண்டப் பயணத்தை. பிறகு தொழிலாளர் துறையில் பணியாற்றினார்.
உதவி செயலாளர், துணை செயலாளர் என உயர்ந்தார் பணியில். வெளி விவாகரத்துறை, உள்துறை என மாறி ராணுவத்துறையிலும் பணியாற்றினார். அங்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் இயக்குனர் ஆகப் பணிபுரிந்தார். சிங்கப்பூர் அரசின் முக்கிய இடத்தைப் பிடித்தார். மீண்டும் வெளிவிவாகரத்துறைக்கு வந்த அவர் மலேசியாவின் சிங்கப்பூர் தூதரகத்தின் ஆணையர் ஆனார். பிறகு அமெரிக்காவிற்கு சிங்கப்பூரின் தூதராகப் பணியாற்றினார்.
1999ல் பொதுவாழ்விற்கு வந்தார். சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கினார். எதிர்த்து மனு செய்திருந்தவர்களின் மனுக்கள் முறைப்படி இல்லாததால் தள்ளுபடியாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூரின் சிற்பி லீ க்வான் க்யூ இவருக்கு ஆதரவு. சிங்கப்பூரின் ஆறாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். 2000ல் பொது சேவைக்கான நிதி திரட்டுவதற்கு ஒரு முன்னெடுப்பை துவங்கினார்.
தற்போது 160 மில்லியன் சிங்கப்பூர் டாலர் சேர்ந்துள்ளது, இந்த நிதிக்கு. இது போன்ற பணிகளால், "மக்களின் ஜனாதிபதி" என மக்களால் பாராட்டப் பெற்றார். 2005 தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தான் நீண்டகாலம் பணிபுரிந்த சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் ஆவார்.
சிங்கப்பூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த தமிழர், தன் தொடர் உழைப்பு மூலம் சிங்கப்பூரின்
குடியரசுத் தலைவர் ஆனது ஒரு வரலாற்றுச் சாதனை.
# எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூரின் சிறந்த தலைமகன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக