பிரபலமான இடுகைகள்

சனி, 6 ஆகஸ்ட், 2016

மலேசியாவில் தமிழ் பாடம்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில்  இருக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் உணர்வே ஏற்படாது. எங்கு சென்றாலும் தமிழ் முகங்கள் நீக்கமற நிறைந்திருக்கும். கடைகளில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளில் மலாய், ஆங்கிலத்திற்கு அடுத்தது தமிழ் இருக்கும். டாக்சி பிடித்தால் பாதி ஓட்டுனர்கள் தமிழராக இருப்பார்கள்.

கடைவீதியில் இரண்டு சீன ஹோட்டல் இருந்தால், மூன்றாவதாக அவசியம் இருப்பது தமிழ் உணவுக் கடையாக இருக்கும். தமிழர்கள் நடத்தும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் சமைப்பவர், பரிமாறுபவர் தமிழ்நாட்டுக்காரராக இருப்பார்கள். இன்னும் ஆழ்ந்து விசாரித்தால் புதுக்கோட்டை மாவட்டமாக இருப்பார்கள். அதற்கடுத்தப் படியாக பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர்கள்.

இது கோலாலம்பூரில் மாத்திரமல்ல மலேசியாவின் பாதிப் பகுதியில் இதே நிலை தான். எங்கெல்லாம் தொழிற்சாலை பகுதி இருக்கிறதோ அங்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் நிறைந்திருப்பார்கள். ஜொகூர், மலாக்கா, க்ளாங், பினாங், சிலாங்கூர் என எந்தப் பகுதிக்கு சென்றாலும் இதே நிலை தான்.

மலாய்க்காரர்கள், சீனர்கள், மலேசிய தமிழர்கள் என மலேசியா ஒற்றுமையாக வாழ்கிறது. இதல்லாமல் தமிழகத்து தமிழர்கள்.

மலேசியாவின் தேசிய மொழி 'மலாய்' ஆக இருந்தாலும், அதை அறியாமலே அங்கு வாழ்ந்திட முடியும். சென்னை பெரம்பூரை சேர்ந்த ராஜ் மலேசியத் தமிழராகவே மாறி விட்டார். அவரது துணைவியார் மலேசிய தமிழர். எட்டாண்டுகளாக அங்கு வாழும் ராஜிடம் "மலாய் தெரியுமா ?" என்றுக் கேட்டேன். "தெரியாது சார். ஆங்கிலம், தமிழ் ஆகியவை போதுமானதாக இருக்கிறது",என்றார்.

ஆனால் மலேசியத் தமிழர்கள் மலாய் பேசக் கூடியவர்கள். அங்கேயே பிறந்து, வளர்ந்து, படித்தவர்கள் என்பதால். அவர்கள் சரளமாக மலாய் பேசுகிறார்கள். மலாய் பேசுவது நமக்கு சற்று வேடிக்கையாகத் தான் இருக்கிறது, மூக்கால் பேசுவது போல. அதை விட வேடிக்கை மலேசிய தமிழர்கள் பேசும் தமிழ் தான்.

மேம்போக்காக கேட்டால் வித்தியாசமாக தெரியாது. தொடர்ந்து உரையாடும் போது தான் உணர்வோம். இதைச் சொன்னால்,"ஆமாவா?" என்றுக் கேட்டார் ஷான். 'அப்படியா' என்றப் பதத்திற்கு பதிலாக 'ஆமாவா' என்கிறார்கள். இரண்டு தலைமுறைக்கு முன்பாக மலேசியா சென்றவர்கள் ஷான் முன்னோர்கள். சண்முகம் செட்டியார் தான் 'ஷான்' ஆகி விட்டார் , மலாய்க்காரர்கள் அழைக்க வசதியாக. ஜொகூரில் புகழ்பெற்ற "சக்ரா ஹோட்டலின்'' உரிமையாளர்.

ஆங்கிலத்தில் 'T'  வரும் இடத்தில் நாம் 'ட' பயன் படுத்துவோம். உதாரணத்திற்கு Saturdayவை 'சட்டர் டே' என்போம். மலேசியத் தமிழர்களுக்கு அது "சத்தர் தே". டொயோட்டோ அவர்களுக்கு 'தொயொத்தோ'. பேச்சு வழக்கில் இதைக் கேட்கும் போது, சிறிது நேரமாகும் நமக்கு விளங்க. போகப் போகத் தான் பழகும்.

நான் சரா என்கிற சரவணன் இடம் கேட்டேன். "பள்ளிக் கூடத்துல உங்களுக்கு  தமிழ் பாடம் உண்டா? ?" என்றுக் கேட்டேன். சரா, மலேசிய தமிழ் இளைஞர். ஒரு வகையில் உறவினர். அவரது காடி தான் எங்களுக்கு மலேசியாவை சுற்றிக் காட்டியது. வாகனத்திற்கு மலேசிய தமிழ் தான் 'காடி'. அவர் தான் எங்கள் சாரதி. அங்கு ஓட்டுனர் எல்லாம் தனியாகக் கிடையாது. அவர்கள் வாகனத்தை அவர்களே ஓட்டுகிறார்கள்.

"" என்ன பாஸ் இப்புடி . ஆறாவது வரை தமிழ் உண்டுல்ல" என்றார் சரா. "உங்க தமிழ்ல 'ட' உண்டா, இல்லியா? இங்கிலீஷ் Tய இப்படி உச்சரிக்கிறீங்களே ?", என்றுக் கேட்டேன். வாய் விட்டு சிரித்தார். சிரிக்கும் போது, சாலையில் லேன் பிரிக்கும் கோட்டைத் தாண்டினார். உடன் இருந்த செல்வம் கேட்டார்,"இந்த லேன்ல போலாமா?". "இது டக்ஸி, பஸ் போறது தான். சும்மா போவோமே"என்றார் சரா. அது கோலாலம்பூரின் மையப் பகுதியான ப்ரிக்பீல்ட்.

"சட்டம், கட்டம். இத சொல்லு சரா. ட அப்ப தான் 'ட' ஒழுங்கா வரும்" என்றேன். எங்கள் காடி ஒரு திருப்பத்தை கடந்தது. அந்த இடத்தில்  போலீஸ்காரர்கள் நின்று காடியை மறித்தார்கள். அபராதம் விதிப்பதாக கடுமைக் காட்டினார் போலீஸ்காரர். சிறிது நேரம் போக்குக் காட்டிய போலீஸ்காரர் அய்ம்பது வெள்ளியை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.

"பாஸ் பாடம் நடத்துறன்னு சட்டத்துக்கிட்ட மாட்டி விட்டுட்டீங்களே?" என்றார் சரா. " நீ கட்டம் தாண்டியதால் தான் சட்டம் பாய்ந்தது" என்றேன். "பாஸ், இது தான் ஆகப் பெரியப் பாடம்" என்று ஓங்கி சிரித்தார். 'ட'வை இப்போது மிகச் சரியாகவே உச்சரித்தார்.

("அந்திமழை" ஆகஸ்ட் மாத இதழில் எனது பத்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக