பிரபலமான இடுகைகள்

திங்கள், 12 டிசம்பர், 2016

வெற்றி நிச்சயம் !

வர்தா புயல் துரத்தி டீவி முன் உட்கார வைத்தது.  அப்போ, அப்போ நடுவுல கொஞ்சம் புயல காணோம்னு சொல்ல, சேனல் தாவினார்கள் மகன்கள். ராஜ் டிவியில் 'அண்ணாமலை', சன் டீவியில் 'குருசிஷ்யன்', கலைஞர் டீவியில் 'மிஸ்டர்.பாரத்', இன்னும் சில டீவிக்களில் 'தீ', ' பொல்லாதவன்','ஊர்காவலன்', ஜெயா'க்களில் வழக்கம் போல் அம்மா நினைவுகள். ரஜினி பிறந்தநாள்.  ராஜ்'ல் நிலைத்தார்கள். ரஜினி 'வந்தேண்டா பால்காரன்' பாடி, நடந்து முடித்திருந்தார்.

எனக்கு பிளாஷ்பேக் ஓடியது. பழைய பெங்களூரு வாழ்க்கை. படித்து, முடித்த பிறகு எஞ்சினியர் பணி. ஸ்ரீராம்புரா, பண்டிரெட்டி சர்க்கிள். காம்ப்ளெக்ஸ் அறை வாசம். சுஜாதா தியேட்டர். 'அண்ணாமலை' ரிலீஸ். அதில் ரஜினி ஒரு காட்சியில் அணிந்திருந்த உடை மனதில் பதிந்து போனது. கொஞ்ச நாளில் பேலஸ் கிரவுண்டில், 'ரேமண்ட்ஸ்' துணிவகைகள் தள்ளுபடி விற்பனை.

சந்தனக் கலரில் சட்டை துணி, வெந்தயக் கலரில் பேண்ட் துணி வாங்கி தைத்து, உட்லாண்ட்ஸில் மரக் கலரில் ஷூ வாங்கி  அணிந்து ரஜினியாகவே கற்பனை செய்து கொண்ட காலம். அந்தப் படம் தந்த உத்வேகத்தில் தான் சுய தொழில் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பம் அமைந்த உடன் பற்றிக் கொண்டேன். வாழ்க்கை பாதை மாறியதற்கு இந்தப் படமும், ரஜினியுமே அடிப்படை.

"வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம். கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்" தான் தேசிய கீதம் ஆகிப் போனது. தொழிலில் சுணக்கம் வரும் போதெல்லாம், அந்தப் பாடலை பாடி மனதில் தெம்பேற்றிக் கொள்வது. வைரமுத்துவின் வரிகள் தேவாவின் இசையில் முறுக்கேற்றும். "இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது.
சூரியன் தூங்கலாம், எனது விழி தூங்காது".  தூங்கவேயில்லை.

அந்தப் படம், அதில் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே ஒரு திருப்புமுனை. அது வரை இருந்த இசையமைப்பாளர் தேவா வேறு, அண்ணாமலைக்கு பிறகு வேறு. வைரமுத்து, தேவா காம்பினேஷன் ஒரு ரவுண்ட் வந்தது, அந்தப் படத்திற்கு பிறகு. ரஜினிக்கு ஒரு மாபெரும் திருப்புமுனை,'அண்ணாமலை'. இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு 'அண்ணாமலை' தான் விசிட்டிங்கார்ட். அடுத்து, சொல்லி அடித்தார்கள் 'பாட்சா'வில். கவிதாலயா நிறுவனத்திற்கு பொருளாதார ஏற்றம்.

வழக்கமான ரஜினியின் கமர்ஷியல் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று என்று தோன்றினாலும், இது தனி ரகம். முன்னேற்றத்தை நெகட்டிவாக இல்லாமல், பாசிட்டிவ்வாக செல்லும் படம். ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், பாட்டு, நடனம் என சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட ரஜினி மசாலா எண்டர்டெயினர். நட்பின் இறுக்கம், துரோகம், சவால், மோதல், வெற்றி என போனாலும், மன்னிப்பின் மூலம் வெற்றி கொண்டு, மீண்டும் நட்பு என டைட் பேக்ட் திரைக்கதை.

வீடு இடிக்கப்பட்ட பிறகு ரஜினி, சரத்பாபு அண்ட் ராதாரவி டீமிடம் தொடையை தட்டி, "தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டிங்க", என்று ஆர்ப்பரிக்கும் வசனம் தான், சிவசங்கர் உள்ளிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியது. மாட்டுக் கொட்டகையில் ஆரம்பிக்கும் " வெற்றி நிச்சயம்"
பாடல், அந்த சிங்கத்தை முறுக்கேற்றியது.

ரஜினியின் காஸ்ட்யூம் இந்தப் படத்தில் டாப். தொழிலதிபரான பிறகு, அந்த கோட்டும், சூட்டும் கலக்கல். அதுக்கு ஒரு தடவ படம் பார்க்கலாம். ரஜினி பெறுகிற தொழில் வெற்றி ஒரு பாசிட்டிவ் லைப்ஃபுக்கு தூண்டியது. சாதாரண கிராமத்து இளைஞன், ஒரே பாட்டில் முன்னேறுகிற வழக்கமான கதையாக இருந்தாலும், ரஜினி என்பதால் அந்த இடத்தில் நம்மையே பொருத்திக் கொள்ள வைத்தது.
ரஜினி, சுரேஷ் கிருஷ்ணா, வைரமுத்து ஆகியோருக்கு நன்றி.

கிளைமாக்ஸ் முடிந்து, பழைய எளிய வாழ்க்கைக்கு திரும்ப, ஜீன்ஸ், ஜிப்பாவில் ரஜினி கிளம்பிவிட்டார். ஆடாமல் அசையாமல் நாலு பேரும் படம் பார்த்து முடித்தோம். அரசியல்வாதி, டாக்டர், +2, 5ம் வகுப்பு என எல்லா வயது, தரப்பையும், 25 வருடத்திற்கு முந்தைய படம் ஒன்று உட்கார வைக்கிறது என்றால், ரஜினி தான். ரஜினி குறித்து ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால் இந்த ஒரு படத்திற்காக நான் அவரை வாழ்த்துகிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

#ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக