அது 1945. சுதந்திரம் கிடைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. தலைவர் கலைஞர் பாண்டிச்சேரி சென்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அங்கு திராவிட நடிகர் கழகத்தின் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்ற நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தலைவர் 'சிவகுரு' என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்தார். நாடகம் இருபத்தைந்து நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.
புதுகை மக்கள் அவரை சிவகுரு என்றே அழைத்தனர். திராவிடக் கழக தோழர்கள் தலைவரை ஊக்கமளித்து, உற்சாகப்படுத்தினர். "தொழிலாளர் மித்திரன்" என்ற வார இதழில் கட்டுரை எழுத சொன்னார்கள். தலைவரும் 'அந்தப் பேனா' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். காந்தி அடிகளின் ஆசிரமத்தில் காணாமல் போன ஒரு பேனா பற்றி எழுதினார். காங்கிரஸார் தலைவரை அடையாளம் குறித்துக் கொண்டனர்.
அடுத்த வாரம் "காந்தி வைஸ்ராயானால்" என்ற கட்டுரை. காங்கிரஸார் கோபம் தலைக்கேறியது. நாள் தேடினர், தலைவரை தாக்க. அப்போது தான் புதுகையில் திராவிடர் கழக மாநாடு நடத்த முடிவானது. பெரியார், அண்ணா, அழகிரிசாமி பங்கேற்றனர். காலை பத்து மணிக்கு மாநாடு துவங்கியது. கலகம் செய்ய கும்பலும் கூடியது. "திராவிடத் தலைவர்களே திரும்பிப் போங்கள்" என்ற கோஷம் வேறு.
அண்ணா ஏற்றிய கொடி மரத்தை வீழ்த்தினார்கள் கலகக்காரர்கள். அமளி தொடங்கியது. பெரியாரையும், அண்ணாவையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். அந்த கும்பலின் கையில் தலைவர் கலைஞர் மாட்டினார். பலத்த அடிக்கு இடையே தலைவர் தப்பி ஓடுகிறார். வழியில் இருக்கும் வீடுகளில், பயந்து கதவை சாத்திக் கொள்கிறார்கள்.
ஒரு வீட்டின் கதவு திறந்திருக்கிறது. முன்னால் நின்ற பெண்கள் வாய் திறக்கவில்லை. அந்த வீட்டினுள் நுழைகிறார், தப்பிக்க. உள்ளே நுழைந்து பார்த்தால் எங்கும் மது பாட்டில்கள். அப்போது தான் புரிகிறது, அது தான் கலகம் நடத்த திட்டமிட்ட இடம் என்பது. அதற்குள் கலகக் கும்பல், தலைவரை பிடித்து விட்டது. ஆளாளுக்கு அடிக்க, தலைவர் மயக்கமுற்றார். இறந்துவிட்டார் என எண்ணி சாக்கடையோரம் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர்.
இரண்டு மணி நேரம் கழித்து தான் விழித்து பார்க்கிறார். ஒரு வீட்டு தாழ்வாரத்தில் படுக்க வைக்கப் பட்டிருக்கிறார். ஒரு சிறுமி மற்றும் இளைஞனோடு ஒரு வயதான தாயும் இருக்கிறார். "அய்யோ, யார் பெற்ற பிள்ளையோ ! இப்படி சாகக் கிடக்கிறதே?", என்று அந்த தாயின் கனிவான வாசகம் தலைவர் நெஞ்சில் பதிந்து விட்டது. இதை தனது "நெஞ்சுக்கு நீதி" தன் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார்.
தலைவர் கலைஞருக்கு என்ன ஆயிற்று என்று பெரியாரும், அண்ணாவும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவரை ஊர் முழுதும் ஆட்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். விடியற்காலை தலைவர்களிடம் சென்று சேர கலைஞர் புறப்படுகிறார். கலகக்காரர்களிடம் மாட்டினால் ஆபத்து என, காப்பாற்றிய வீட்டார் அவரை மாறுவேடத்தில் செல்ல சொல்கிறார்கள்.
தலையில் குல்லா, நீண்ட ஜிப்பா, கைலி என இஸ்லாமியர் வேடத்தில் ரிக்ஷாவில் ஏறி சென்றார். பெரியார் தூங்காமல் காத்திருந்தார். தலைவர் கலைஞரை கண்டதும் கலங்கிய பெரியார் கட்டி அணைத்துக் கொண்டார். அவரே காயங்களுக்கு மருந்திட்டார். "என்னுடன் வா, போகலாம்" என பெரியார் ஆணையிட்டார். தலைவரும் உடன் சென்றார். ஈரோட்டுக்கு பயணம். "குடியரசு" பத்திரிக்கையில் துணை ஆசிரியர் ஆக்கினார் பெரியார். துணை ஆசிரியரானது, தலைவர் கலைஞரது அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்.
இந்த நிகழ்வில் தாக்கப்பட்டு இறந்து விட்டார் என்று முடிவெடுத்து அவர்கள் செல்ல, தப்பியவர் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு சென்றார். இது போல் விபத்தில், இயற்கை சீற்றத்தில், உடல் நலக்குறைவில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்ற வதந்திகள் பரவி , அதை தாண்டி வந்து சாதனைகளை தொடர்ந்தார் கலைஞர்.
இப்போது ஜெயலலிதாவின் மருத்துவமனை செய்திகளுக்கு பிறகு மக்களுக்கும் குழப்பம், கலைஞர் உடல்நலம் குறித்து. இப்போதும் வந்து விட்டார் மீண்டு.
# போராட்டமே வாழ்க்கை, வெல்வதே வாடிக்கை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக