பிரபலமான இடுகைகள்

சனி, 3 டிசம்பர், 2016

குழந்தைகள் குழந்தைகள் தான்

மோடியின் 'மாஜிக்' இரண்டாயிரம் ரூபாய் நோட்டு சின்ன மகன் சூர்யா கையில் இருந்தது. நேற்றைய இரவு, 'மடம், மடமாக ஏறி இறங்கி உணவு தேடும்  பிக்க்ஷாந்திகள் போல்', சாலையில் இருந்த ஆறுக்கும் குறையாத ஏ.டி.எம்களில் ஏறி இறங்கி கடைசியாக மோடியின் கருணை பெற்ற ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் இருந்து  இணையர் பாடுபட்டு எடுத்த இரண்டாயிரம் ரூபாய்.

"இதக் கிழிச்சி பாக்கட்டுமா?". "ஏய். பணத்த ஏன் கிழிக்கறங்கற?". "உள்ள 'சிப்' இருக்கான்னு பார்க்கனும்".  "அதெல்லாம் சும்மா கதப்பா". "மோடி பேசறாரான்னு பாக்கட்டுமா?" என்று கேட்டாலும் நோட்டை கிழிப்பது போல பாவ்லா காட்டினார். ஸ்மார்ட் போனும் கையுமாக இருக்கும் ஆண்ட்ராய்ட் தலைமுறை இவர். கலாய்ப்பதற்கு கேட்ட கேள்வியாகத் தான் தோன்றியது.

அய்ந்தாம் வகுப்பு படிப்பவர். நான் மெதுவாக அவரது தலையில் என் தலையை முட்டுக் கொடுத்து, காது மடலை லேசாக இழுத்து, நெட்டி எடுக்க முயற்சி செய்தேன். கண்ணில் இருந்து பொலபொலவென நீர் கொட்டியது, ஓ' என்ற கதறலோடு. "லேசா தானே இழுத்தேன். அவ்வளவு வலிக்குதா?", என்றுக் கேட்டேன். பதில் வரவில்லை, கண்களில் இருந்து அனல் பதிலாக வந்தது.

"அவனுக்கும் நெட்டி எடுத்திருக்கேன். அவன் இப்படி அழுததில்லை. கேளு" என்று பெரிய மகன் சரணை சாட்சிக்கு இழுத்தேன். "அவனுக்கு வலிச்சிருக்காது, எனக்கு வலிக்குது", பதில் அம்பாய் வந்தது. " வலிச்சதில்லையே", என்று சரண் சொன்ன சாட்சிக்கும் மரியாதை இல்லை. கடைசியாக சரண்டர் ஆனேன்,"சாரிப்பா". கண்டு கொள்ளாமல் அடுத்த அறைக்கு போய் விட்டார்.

நாடா புயல் புண்ணியத்தில் பள்ளி விடுமுறை. சில மணி நேரங்கள் கழித்து ஏதோ நோட்டை எடுத்து வைத்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் சலித்துப் போய், அம்மா அலைபேசியை மெல்ல எடுத்து விளையாட ஆரம்பித்தார். என் அலைபேசியில்  கார்டன்ஸ்பேஸ் விளையாடிக் கொண்டிருந்த நான் அவரைப் பார்த்தேன்.

"ஹோம் ஒர்க் முடிக்காம என்னப்பா கேமு?" , என அலைபேசியை பிடுங்கி வைத்தேன். லேசாக என் அலைபேசியை பார்த்தவர், ஒன்றும் பேசாமல் நோட்டை கையில் எடுத்தார். மீண்டும் எழுத ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், " கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு" என்றார். "எழுதி முடிச்சிருப்பா" , என்றேன். மீண்டும் பணி துவங்கியது.

கொஞ்ச நேரத்தில் மறுபடியும் ஆளைக் காணோம். பார்த்தால், சாப்பாட்டு மேசையில் ஏதோ வேலை நடந்துக் கொண்டிருந்தது. சரி, பசிக்கு கேக் இரையாகிறது போல என நினைத்துக் கொண்டு, ஆனந்த விகடனில் மோடிக்கு கடிதத்தில் மூழ்கி விட்டேன். திடீரென ஒரு கிளாஸ் கண் முன் நீண்டது.

நன்னாரி சர்பத் கிளாஸோடு நின்றுக் கொண்டிருந்தார் சூர்யா. "நன்னாரி போதுமான்னு பாருங்கப்பா" என கிளாசைக் கொடுத்தார். வாங்கி சுவைத்தேன். சிறப்பாக இருந்தது. "தேங்க்ஸ்பா" என்றேன். "வெல்கம்" என்று சிரித்தார்.

எனக்கு பெருத்த சந்தேகம். காலையில் நடந்த சம்பவத்திற்கு நாமாக சமாதானம் ஆன போது ஏற்றுக் கொள்ளாதவர், இப்போது எப்படி. கேட்டும் விட்டேன். "ஏம்பா, காலையில் அவ்வளவு கோவமா இருந்த, அப்புறம் எப்புடி ஜூஸ் போட்டு தர மனசு வந்துது?".

சிம்பிளாக பதில் சொன்னார், "அதெல்லாம் அப்படி தாம்பா".

#  குழந்தைகள் குழந்தைகள் தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக