பிரபலமான இடுகைகள்

வியாழன், 8 ஜூன், 2017

டாக்டர் சாமிநாதன்

"ராசேந்திரன கம்பத்துல கட்டி வச்சிருக்காங்களாம்".  மகனை கட்டி வைத்திருக்கும் சேதி கேட்டு பதறி ஓடுகிறார் தந்தை சாமிநாதன்.  " கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று ஊர் சுவர் எல்லாம் எழுதி வைத்தது தான் ராசேந்திரன்  செய்த குற்றம். கோபத்தில் இருந்த நாட்டார்களிடம் "இதுக்கு மேல இப்புடி செஞ்சான்னா, அடுத்தத் தடவ கெடா வெட்டும் போது சேத்து வச்சி இவன வெட்டிடுறேன்"என்று சமாதானம் சொன்னார்.

நிண்ணியூர் கிராமத்தில் கோயில் படைக்க வேண்டுமானால் சாமிநாதனை தான் அழைப்பார்கள். சாமிக்கு வேண்டி கொண்ட ஆட்டுக் கெடா வெட்டவும் இவரைத் தான் நாடுவார்கள். அவர் மகனே 'கடவுள் இல்லை' என்று எழுதினால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் ராசேந்திரன். செந்துறை பள்ளிக்கு போகும் போது, புலவர் பொன்னம்பலனார் அவர்களை நலம் விசாரிக்க வந்த தந்தைப் பெரியாரைப் பார்த்திருக்கிறார் ராசேந்திரன்.

பெரியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, திராவிடர் கழக கொள்கைகளை உள்வாங்கி இருக்கிறார். அதன் விளைவு தான், 'கடவுள் இல்லை' சுவர் எழுத்து. இது போல் எழுதக் கூடாது என்று மகனுக்கு அறிவுரை சொன்னார் சாமிநாதன். மகன் ராசேந்திரனோ கொள்கை பேசியிருக்கிறார்.  மகன் சொன்ன செய்திகள் மீது  ஆர்வம் ஏற்பட்டது சாமிநாதனுக்கு. கீழமாளிகை கிராமத்திற்கு சென்ற போது, உறவினர் பாவாடைராயனை சந்தித்திருக்கிறார் சாமிநாதன். அந்தப் பகுதி திராவிடர் கழகத்தின் முக்கியமானவர் பாவாடைராயன்.

அங்கு நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டத்தை பார்த்திருக்கிறார் சாமிநாதன். அவர்களது வாதம், பகுத்தறிவு மீது இவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி விட்டது. அதற்கு பிறகு மகனின் கொள்கை விஷயங்களில் தலையிடவில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த ராசேந்திரன் முழு நேர திராவிடர் கழக செயற்பாட்டாளர் ஆனார். பிற்காலத்தில் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தார் ராசேந்திரன். ஒரு கூட்டத்தில் அவரது உரையையும், சமூக ஆர்வத்தையும் கண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வியந்துப் போனார். புழல் சிறையில் இருக்கிற கைதிகளுக்கு பாடம் நடத்த இயலுமா என்று கேட்கிறார் மாவட்ட ஆட்சியர். ஒப்புக் கொண்ட ராசேந்திரனை, புழல் சிறைக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறார். ஒன்பது ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர். அத்தோடு, அங்கேயே கைதிகளில் படித்தவர்களை தேர்வு செய்து சிறைக்குள்ளேயே ஒரு பள்ளியை கட்டமைத்து விட்டார் ராசேந்திரன். செய்தித் தாள்களில் இது குறித்து வந்த செய்திகளைப் பார்த்து உள்ளம் பூரித்துப் போனார் சாமிநாதன்.

சாமிநாதனுக்கு ஆறு மகன்கள், இரண்டு மகள்கள். விவசாயியாக வாழக்கை நடத்தினார். மழை பொய்த்த நேரத்தில், இறந்த மாடுகளின் எலும்பை சேகரிக்கும் வேலைக்கு சென்றார். பதறிப் போன அந்தத் தொழிலாளர்கள், "சின்னவரே, நீங்க இந்த வேலைக்கு வரக்கூடாது" என சொல்ல, "பிள்ளைகளை காப்பாற்றி, படிக்க வைக்க எந்தத் தொழிலும் இழிவு இல்லை" என்று மறுத்து வேலை செய்தார்.

ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றினார், மற்றொருவர் வெளிநாடு சென்று பொருளீட்டுகிறார். நான்காவது மகன் வழக்கறிஞர் பகுத்தறிவாளன். இவருக்கு சூட்டப்பட்டப் பெயர் திருஞானம். கல்லூரி காலத்தில் தன் பெயரை தமிழ்படுத்தி 'பகுத்தறிவாளன்' ஆக்கிக் கொண்டார். கல்லூரி கடைசி ஆண்டில் செந்துறையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். "சாதி மறுப்பு அல்லது விதவை மறுவாழ்வு திருமணம் செய்து கொள்வேன்".

சொன்னபடியே, இரண்டு குழந்தைகளோடு நிராதரவாக இருந்த 'தவமணி' அவர்களை மணமுடித்தார் பகுத்தறிவாளன். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், இரவு எட்டு மணிக்கு, "சுயமரியாதை திருமணம்" நடைபெற்றது. துவக்கத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை சாமிநாதன், பிறகு உணர்ந்து திருமணத்தில் மகிழ்ச்சியாய் கலந்து கொண்டார். விஜய் டிவியில் இந்த திருமண நிகழ்வு குறித்த செய்தி வெளியான போது, கூடுதல் மகிழ்ச்சி அடைந்தார்.

கடைசி மகள் சாதி கடந்து, மொழி கடந்து ஆந்திரத்து மருமகனை கைபிடித்ததையும் ஏற்றுக் கொண்டார் சாமிநாதன். கிராமத்து பூசாரி மெல்ல, மெல்ல பகுத்தறிவாளரானார் மகன்களால்.

இளம்வயதில்  மாட்டுவைத்தியம் பார்க்க  துவங்கிய சாமிநாதன், அதனால் சுற்றுவட்டாரத்தில் பிரபல்யமானார். மாட்டை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு விலாவை தடவி விட்டால், மாடு நலம் பெறும். கன்று போட திணறும் பசுக்களுக்கு வைத்தியம் பார்க்க இவரை அழைத்து செல்வார்கள். இவர் கை நுழைந்தால், எவ்வளவு சிக்கலான நிலையிலும் கன்றை கையோடு இழுத்து விடுவார்.

ஊரில் இவரது பங்களிப்பு பெரிது. யார் வயலில் ஏர் வோட்டுவதாக இருந்தாலும், இவரை முதல் ஏர் ஓட்டச் சொல்வார்கள். பயிர் விதைப்பிலும் இவரது கைராசி அந்தப் பகுதியில் பிரபலம். மிக முக்கியமானது, ஏரியில் கட்டைப் போடுவது. அடை மழை காலத்தில், ஏரியில் நீரை தேக்க, மூன்று ஆள் மட்டம் மூழ்கி,  மதகில் மரக்கட்டையை செலுத்தி நீரை தடை செய்ய வேண்டும். அதில் முதன்மையாக இருந்து செய்வார் சாமிநாதன். சிறுவயதில்,நண்பர்களோடு சாராயம் காய்ச்சினார் எனவும் செய்தி உண்டு.

இப்படி மக்களோடு வாழ்ந்தவர் 90வது வயதில், கடந்த ஜனவரி மாதம் மறைவுற்றார். இவரது சிதைக்கு மருமகள்களே கொள்ளி வைத்தனர். குடும்ப நிகழ்வுகளை சுயமரியாதை நிகழ்வாக நடத்தியவரது, இறுதி நிகழ்வும் அவ்வாறே நிகழ்வுற்றது.

அவரது இறப்புக்கு ஒரு மாதம் முன்,  ஆசிரியர் கருணாநிதி படத்திறப்பு நிகழ்விற்கு சென்றிருந்தேன். முதல் வரிசையில் பெரியவர் 'சாமிநாதன்'. நிகழ்ச்சி முடிந்து அருகே சென்றேன், எழுந்து விட்டார். உட்கார சொன்னேன், மறுத்து விட்டார். வயதை தாண்டி, பதவிக்கான மரியாதையை கொடுத்தார். கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

படத்திறப்பு நிகழ்வில், அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அவரது இளையமகன் தங்கசாமி பேசியது,"கடவு சீட்டில் என் பெயர் சாமிநாதன் தங்கசாமி என்று இருக்கும். நான் முனைவர் பட்டம் பெற்ற போது,  சாமிநாதன் பெயருக்கே சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மிகச் சரியானது தான். படிக்காமலே மாட்டுவைத்தியம், பயிர் செய்தல், கோவில் பூசை, சாராயம் காய்ச்சுதல், கடைசியில் பகுத்தறிவு என ஆய்வு செய்து வாழ்ந்திருக்கிறார். அவர் 'டாக்டர் சாமிநாதன்' தான்"என்றார்.

**********************

(அந்திமழை மே 2017 மாத இதழில்  விருந்தினர் பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக