குவைத், எண்ணெய் வளத்தால் பொருளாதார வளமாக இருக்கும் ஒரு நாடு. 1990 ஆகஸ்ட் 2 அன்று ஈராக் படைகள் குவைத் நாட்டின் உள் நுழைந்தன. சுதந்திரத்திற்கு போராடும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான படையெடுப்பு என ஈராக் அறிவித்தது. ஆகஸ்ட் 4, "சுதந்திர குவைத்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 8, குவைத் ஈராக் நாட்டோடு இணைக்கப்பட்டது என்ற அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் 28, குவைத் ஈராக்கின் ஓர் மாநிலம் என அறிவிக்கப்பட்டது.
அரபு நாடுகள் அல்லோகல்லோப்பட்டுப் போயின. இதன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பதறிப் போனார்கள். படையெடுப்புக்காகப் பயப்படவில்லை. படையெடுத்த மனிதரை கண்டு பயம். ஈராக்கின் தன்னிகரற்ற தலைவனாக முடிசூட்டிக் கொண்ட "சதாம் உசேனை" கண்டு தான் அந்த பயம். உலகின் வல்லாதிக்க நாடுகளின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது.
அமெரிக்கா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ், போர் தான் வழி என்றார்.
ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. காரணம், பொருளாதார அரசியல். ஈராக் குவைத்தை கைப்பற்றியதற்கும், அமெரிக்கா குவைத்தை விடுவித்ததற்கும் காரணமும் அதே பொருளாதார அரசியல் தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் அரசியல். மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய் தான் கிட்டத்தட்ட உலக பொருளாதார சுழற்சிக்கான மைய அச்சு. எனவே அதை சுற்றி தான் உலக அரசியல்.
மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் முதலீடு செய்த உலகப் பெரு நிறுவனங்கள், சதாம் ஜுரத்தால் பீடிக்கப்பட்டன. அடுத்து சதாமால் "உலக எண்ணெய் விலை"க்கு பாதிப்பு வரும், அதனால் உலக பொருளாதாரத்திக்கு பாதிப்பு வரும் என ஆதிக்க நாடுகள் கவலை கொண்டன. குவைத்தின் பெரும் பணம் பிரிட்டன் நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் குவைத்திற்கு 'தேள் கொட்டியது', பிரிட்டனிற்கு 'நெரி' கட்டியது. பெரு நிறுவனங்கள், ஆதிக்க நாடுகள், பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் கதறின.
உலக பாதுகாப்பு கவுன்சில் ஆதரவுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 1991 ஜனவரி 16ல் குவைத்தின் உள் நுழைந்தன. பிப்ரவரியில் சதாமின் ஈராக் படை வெளியேற்றப்பட்டது. அத்தோடு பிரச்சினையை விடவில்லை அமெரிக்கா. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஈராக்கிடம் "அணு ஆயுதங்கள், ஆந்த்ராக்ஸ், விஷவாயு ஆயுதங்கள் குவிந்திருக்கின்றன" என அறிவித்தது.
1993ல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து படிப்படியாக அமெரிக்கா ஈராக்கிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஈராக் தீவிரவாதத் தாக்குதலுக்கு தயாராகிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்தார். எதிரிகளான இவர்கள் எண்ணெய் அரசியலில் மட்டும் ஓரணி. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் அறிவித்தார்.
போருக்கு முன்பாகவே ஈராக் கிட்டத்தட்ட தளர்ந்து போயிருந்தது. ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை. ஈராக்கிற்கு உணவுப் பொருட்கள் செல்ல முடியவில்லை. ஈராக்கால் பெட்ரோலியப் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக் அடிபணிந்தது. 1996 ஆம் ஆண்டு "உணவுக்கு எண்ணெய்" திட்டத்திற்கு ஈராக் ஒப்புதளித்தது. ஆனாலும் அமெரிக்க விடவில்லை.
2003 மார்ச் 20, போர் துவங்கியது. அமெரிக்கப் படைகள் மெல்ல முன்னேறின, அவர்களின் கை ஓங்கியது. சதாம் தலைமறைவானார். ஏப்ரல் 9ல் நெடிதுயர்ந்த சதாமின் சிலை கீழே தள்ளப்பட்டது. சதாமின் சகாப்தம் முடிந்ததற்கான குறியீடாக இது அமைந்தது.
அப்புறம் தான் எதிர் கிளைமாக்ஸ். எந்த ஆயுதங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்கிறது என போர் தொடுத்தாற்களோ, அதன் பிளாஸ்டிக் மாடல்கள் கூட ஈராக்கில் இல்லை. இந்தப் போரின் நோக்கம் "எண்ணெய் அரசியல்" தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் வெட்கப்படவில்லை, அமெரிக்கா.
2017 ஜூன் 5. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பிற்கு கத்தார் ஆதரவு தருகிறது என சவுதி அரேபியா குரல் கொடுத்தது. இதற்கு ஐக்கிய அரேபிய குடியரசு, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் சவுதி அரேபிய குரலுக்கு ஆதரவு தெரிவித்தன. இது என்ன புதிய பிரச்சினை என்ற கேள்வி எழுந்தது. பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் கத்தார் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த நாடுகளின் குரலுக்கான வேறு அர்த்தம் என்ன என ஆராயப்பட்டது. கத்தார் மீது இந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.
அப்போது தான் அமெரிக்க அதிபர் பெரியண்ணன் டிரம்ப் காட்சிக்கு வந்தார். "தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்" என எச்சரித்தார்.
கத்தார் இன்றைய தேதிக்கு உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்கார நாடு. ஆனால் சுண்டைக்காய் அளவு நாடு. நாட்டில் இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் வெளி நாட்டினர், வேலைக்காக வந்தவர்கள்.
"இந்தத் தடையால எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என கத்தார் அறிவித்தது. இன்னொரு ஈராக்கா என்ற பேச்சு வந்தது. ஆனால் சதாம் போல் நாங்கள் வீம்பு காட்டி ஏமாந்துவிட மாட்டோம் என கத்தாரின் அடுத்த நடவடிக்கை காட்டி விட்டது.
ஜூன் 14 அன்று ஒரு அறிவிப்பு. அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ரூபாய் 77,460 கோடி மதிப்பிலான எப்-15 ரக விமானங்கள் 72ஐ கத்தாருக்கு விற்க அமெரிக்காவின் ஒப்பந்தம் தான். அப்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கை குறித்து விவாதித்தது தான் ஹைலைட்.
கத்தார், பொருளாதார அரசியலின் நுட்பம் உணர்ந்து அடி எடுத்து வைப்பதாகத் தோன்றுகிறது. பலத்தால் அடிக்காதே, பணத்தால் அடி.
# என்று தணியும் இந்த எண்ணெய் மோகம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக