பிரபலமான இடுகைகள்

வியாழன், 16 ஜனவரி, 2014

உழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் !

ஊரே கோலாகலமாக இருக்கும். காலையிலேயே மாட்டையும், ஆட்டையும் பிடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள், ஏரியை நோக்கி. அப்போதெல்லாம் ஊரின் ஜனத் தொகையைத் தாண்டி, கால்நடைகளின் எண்ணிக்கை இருக்கும்.

ஊரின் முகப்பிலேயே, ரோட்டை ஒட்டியே ஏரி. அங்கிருந்து ஒரு கி.மீ நடந்தால் ஊர். தேவனூர், எங்கள் சொந்த ஊர். ஏரிக்கு சென்று குளித்து வரும் கால்நடைகள் ஊர்வலம் போல் வந்து சேரும்.

                                 

இதெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன். பிறகு மெல்ல கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. பாட்டி ராசாம்பாள் இருக்கும் வரை தான் எங்கள் வீட்டில் கால்நடை செல்வம் இருந்தது.

அப்போது 30-க்கும் குறையாத மாடுகள் இருக்கும் தாத்தா வீட்டில், காளை, பசு, எருமை என. பாட்டியின் உடல் தளர ஆரம்பித்த போதே, மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. பாட்டி மறைவுக்கு பிறகு, தாத்தா சாமிதுரையால் சமாளிக்க முடியவில்லை. வாரிசுகள் நகரங்களுக்கு இடப்பெயர்ச்சி. பிறகு அந்தச் செல்வம் அற்றே போனது.

ஒரு வாரம் முன்பே வேலைகள் துவங்கிவிடும். காளைகளுக்கு லாடம் கட்டப்படும். கொம்புகள் சீவப்பட்டு வர்ணம் பூசப்படும். மூக்கணாங்கயிறு புதுப்பிக்கப்படும். பசுமாட்டுகளுக்கு கயிறு மாற்றப்படும்.

வீட்டிற்கு எதிரில் ஒரு பெரிய காலிமனை. அதன் ஓரம் ஒரு மாட்டுக் கொட்டகை. ஒரு மூலையில் வைக்கோல் போர், இன்னொரு புறம் கடலைக்கொடி போர். ஆங்காங்கே முலைக் குச்சிகள் அடிக்கப்பட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.

தண்ணீர் காட்ட தொட்டிகள் கட்டப்பட்டிருக்கும். நிழலுக்கு சுற்றிலும் வேப்பமரங்கள், வாதநாராயண மரங்கள். பாதுகாப்புக்கு மூங்கில் வேலி.  அதுவும் ஒரு வீடாய் தான் பராமரிக்கப்படும்.

மாட்டுப் பொங்கல் காலை, அந்தப் பகுதி கூடுதல் சுத்தப்படுத்தலுக்கு உட்படும். மையப் பகுதியில் மணலால் ஒரு செவ்வகம் எல்லைக் கட்டப்படும். அது தான் பொங்கல் வைக்கும் பகுதி. அடுப்பு வெட்டப்படும்.

எல்லைக் கட்டிய பகுதிக்குள் கோலம் போடுவார்கள். சோலையுடன் கரும்பு வைத்து அலங்கரிக்கப்படும். வாழை இலை விரித்து, தேங்காய், பழம் வைத்து பூசைக்கு தயார் செய்யப்படும்.

மாட்டின் கழுத்தில் கட்ட ஜெயங்கொண்டம் சந்தையிலேயே சலங்கைக் கொத்து, வண்ணவண்ணமாய் நெட்டித்தக்கை மாலை வாங்கப்பட்டிருக்கும். இதல்லாமல் ஆவாரம்பூ, மாவிலை மாலை, பூ மாலையும். செல்வந்தர் வீட்டு மணப்பெண் போல், அன்று மாடுகளின் கழுத்து நிறைந்தே இருக்கும்.

புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, அடுப்பில் ஏற்றி பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது "பொங்கலோ, பொங்கல். மாட்டுப் பொங்கல்" குரல் உற்சாகம் பெறும். சிறுவர்கள் தட்டை எடுத்து குச்சியால் தட்டி ஒலி எழுப்புவார்கள்.

பொங்கியப் பானைக்கு சூடம் காட்டி படைத்து, மாடுகளுக்கு காட்டி படைப்பார்கள். மாட்டுக் கொட்டகை பகுதியை சூடத் தட்டோடு பெரியவர்கள் சுற்றி வர, சிறார்கள் பின்னால் ஒலி எழுப்பிக் கொண்டே குஷியாய் சுற்றுவார்கள்.

 பொங்கல் மாட்டுகளுக்கு ஊட்டப்படும். அடுத்த அடுத்த வீடுகள் சிறிது கால இடைவெளியில் பொங்குவார்கள், மற்றவர் வீட்டு மகிழ்ச்சியில் பங்கேற்க. அதிலேயே ஒரு ஒற்றுமை ஏற்படும். கூட்டு மகிழ்ச்சி.

பொங்கல் பொங்கிய பிறகு, மாட்டுவண்டிகள் பூட்டப்படும். ஊர்வலம் கிளம்பும். கிடைத்தப் பொருட்களை தட்டி ஒலி எழுப்பப்படும். "பொங்கலோ, பொங்கல், மாட்டுப் பொங்கல்". இதற்காகவே மாட்டு வண்டியை பராமரித்து வைத்திருப்போரும் உண்டு.

 ஊரே அதகளமாகும். ஊரே ஒன்றுபட்டு கொண்டாடும் திருவிழா, மாட்டுப் பொங்கல்.

# உழவனுக்கு துணை, உலகுக்கும். வணங்குவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக