பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 10 ஜனவரி, 2014

1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு.


பத்து நாட்களாக பதிவுகள் இடவில்லை. காரணம் உட்கட்சித் தேர்தல். பெண்டு எடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் பொறுப்புக்கு வர ஆசை. அவர்களை பேசி சமாதானம் செய்து யாராவது ஒருவரை விட்டுக் கொடுக்க செய்வதற்குள் போதும் என்றாகி விடும்.

சில இடங்களில் இரண்டு தரப்பாக இருப்போருக்குள் சமாதானம் செய்வது இன்னும் சிரமம். இரண்டு தரப்புக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து, கை கொடுக்க வைத்து ஒற்றுமைப் படுத்தி அனுப்ப வேண்டும். முடியும் தருவாயில் யாராவது ஒருவர் திரும்ப ஆரம்பிப்பார்.

பெரும்பாலோர் என்னை விட மூத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனம் கோணாமல் பேச வேண்டும். அவர்கள் வயதை, உழைப்பை மதித்து பேசித் தீர்க்க வேண்டும். மூத்தோரையும், இளையோரையும் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். 

திருமானூர் ஒன்றியம், காமரசவல்லி ஊராட்சிக்கானத் தேர்தல். உள்ளூரில் மூத்த கழகத் தோழர் கலியபெருமாளை சிலர் முன்மொழிய யாரும் போட்டி போடவில்லை. அவர் மற்றவர்களை அழைத்து பேசி எல்லா பொறுப்புகளுக்கும் யார், யார் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இதில் ஒருவருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வருத்தம். இப்படியே ஒரு குழு சேர்ந்து விட்டது. அரியலூருக்கு வந்து மனு கொடுக்கும் போது போட்டியாக மனு கொடுத்து விட்டார்கள். இது போன்று போட்டியாக இருந்த ஊர்களை அழைத்து பேசினோம்.

காமரசவல்லியினரை பேச அழைத்தோம். “யார், யார் செயலாளருக்கு போட்டி போடறீங்க ?” என்று கேட்டேன். செயலாளர் பொறுப்பு தான் முதன்மையானது. கலியபெருமாள் “நான் போட்டியிடுகிறேன்” என்றார். “யார் போட்டியாளர் ?” என்று கேட்டேன். யாரும் முன்வரவில்லை. 

“அப்புறம் ஏன் மனு கொடுத்தீங்க?” என்று கேட்டேன். “எங்களை அழைத்து கலந்து பேசவில்லை, அதனால் தான் மனு கொடுத்தோம்”. “அப்பன்னா என்ன விட்டுடுங்க.... எனக்கும் வயசாயிடுச்சி. சின்னப் பசங்களா யாரையாவது போட்டுக்குங்க.” “அட இருங்கண்ணா, பேசிக்கலாம். யாராவது அனுசரிச்சு தான் போகனும்” என்றேன்.

“சரி அண்ணன், நீங்க தான் செயலாளர். மற்ற பொறுப்புகளை கலந்து போட்டுடலாம்.” என்றேன். அவர் தனது உறுப்பினர் அட்டைகளை எடுத்துக் கொடுத்தார். அதில் ஒன்று மிக பழையதாக இருந்தது. எடுத்துப் பார்த்தேன். 

1957-ல் பேரறிஞர் அண்ணா கையெழுத்து இட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு. ஒரு நிமிடம் ஆடிப் போனேன். “யாருக்கு யார் பஞ்சாயத்து பேசுவது ?”

                       

அடுத்து அவர் சொன்ன செய்தி இன்னும் உச்சம். “ராபின்சன் பூங்காவில், கட்சி ஆரம்பிச்ச அடுத்த வாரமே காமரசவல்லியில் கிளை ஆரம்பிச்சோம், நானும் இவரும்.” இவர், பக்கத்தில் இருந்த சுப்ரமணியன். அவரை அவைத் தலைவராக இருக்க சொன்னேன். “இதுவரை பொறுப்பை எதிர்பார்க்கவில்லை. இப்பவும் மற்றவங்க சொல்றதுனால தான்.” என்றார் கலியபெருமாள்.

“மூத்தோர் நீங்கள் களப் பணியாற்றும் போது, நான் மாவட்ட செயலாளராக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை” என்று எழுந்து வணங்கினேன். அண்ணா கையெழுத்திட்ட அட்டையை வாங்கி ஸ்கேன் செய்து கொண்டேன். பொக்கிஷம்.

# யான் பெற்ற பேறு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக