பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் !

மாலை நேரம் விளையாட்டுத் திடல் உற்சாகத் திடல் ஆகியிருக்கும். ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடல் அது. 

ஆண்கள், பெண்கள், சிறார்கள் என அவரவர் விருப்பத்திற்கேற்ற குழுவில் சங்கமித்திருப்பார்கள். காலையில் இருந்தே வார்ம்-அப் செய்து ஆயத்தமாகியிருப்பார்கள். 

மூன்று நாட்களாக கிரிக்கெட் லீக் எல்லாம் முடிந்து காலையில் இருந்து செமி ஃபைனல், ஃபைனல் என்று ஒரு பக்கம். கபடிக் குழுக்கள் இன்னொரு பக்கம். சில காலம் முன்னர் சிலம்பம், சுருள் வீச்சு என சில நாட்டுப்புறக் கலைகள் உயிரோடிருந்தன.

                                  - Kabadi Kabadi (Camera ) Tags: camera blue india playing game love sports team village play near district indian culture tournament tamilnadu kabaddi rajapalayam kabbadi kabadi virudhunagar seithur nikond7000 kirukan devathanam

பெண்கள் உலகம் தனி. கும்மி, கோலாட்டம் என மகிழ்ச்சியாக இருப்பார்கள். காலையில் இருந்தே இதற்காக தயாராகி இருப்பார்கள். வாழை மட்டையில் பூவை வைத்து தைத்து, சடைப்பட்டி தயார் செய்து, நடமாடும் பூக்கடையாக வந்திருப்பார்கள்.

ஓராண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விடுதலை அல்லவா, அவர்களுக்கு. ஓராண்டின் சமூகச் சுமைகளை இறக்கி வைக்கும் நாளாகவே, அந்த நாள் கழியும் பெண்களுக்கு. சுற்றிலும் வேலி இல்லாமல், தோழிகளோடு திளைத்திருப்பார்கள்.

சிறுவர், சிறுமியர் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருப்பர். தெரிந்த அத்தனை விளையாட்டுகளையும் விளையாடித் தீர்ப்பார்கள். இவர்களுக்காவே ரங்கராட்டினமோ, குடை ராட்டினமோ வருடம் தவறாமல் ஆஜராகி விடும்.

தற்காலிக டீக்கடை, பலகாரக்கடை, கரும்புக்கடை என சிறு வணிகச் சந்தை. இதல்லாமல் பூக்கடை, ரிப்பன் கடை, ஜாக்கெட் பிட் கடை, வளையல் கடை, அதிலும் பிரசித்தி பெற்ற ஸ்டிக்கர் பொட்டுக்கடையில் கூட்டம் மொய்க்கும்.

சிறுவர்களுக்கான பலூன், ஊதாங்குழல் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களுக்கான கடைக்கான கூட்டம் போல இன்னொரு பக்கமும் ஒரு கூட்டம் உண்டு. அது மூனு சீட்டு குரூப். அதில் "உற்சாக"ப்பிரியர்கள் கூட்டம் எவ்வி இருக்கும்.

உற்சாகப் பிரியர்கள் தான் தனித்துவமானவர்கள். இவர்களை கண்டால் எல்லோரும் மிகுந்த மரியாதையோடு வழிவிடுவார்கள். தைப் பிறந்தால் வழி பிறக்குமோ இல்லையோ, இவர்களை கண்டால் தானாய், வழி பிறக்கும்.

பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தான் பாவம். நல்ல நாளை குடும்பத்தாரோடு செலவிட முடியவில்லையே என்று அவர்களே வருத்தத்தில் இருப்பார்கள். அதை அதிகப்படுத்தும் வகையில் வேலை அதிகம் அன்று, அந்த ஊரில் தகராறு, இந்த ஊரில் பிரச்சினை என்று. இவர்கள் வந்தால் தான் உற்சாகர்கள் கொஞ்சம் தணிவார்கள்.

இதை எல்லாம் தாண்டி, இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பக்கத்து கோவிலில் இருந்து திரௌபதி அம்மனும் வந்திருப்பார். மரச் சகடையின் மீது எழுந்தருளியிருப்பார். பூசாரிக்கு அன்று தான் உச்சபட்ச வருமானம். வருபவர்கள் ஒரு சூடம் ஏற்றி, தன் பாரத்தை அவர் மீது ஏற்றி விட்டு, விளையாட்டில் மூழ்கி விடுவார்கள்.

அருணா, சண்முகா தியேட்டர்கள் கூட்டத்தால் வழியும். மாலை மங்க, மங்க உற்சாகம் மிகும். ஆனால் மீண்டும் இந்த உற்சாகம் இனி அடுத்த ஆண்டு தான் என்ற ஏக்கத்தோடு கலைவார்கள். ஆனால் சில காலம் தான், அந்த ஆண்டுகள் வந்தன.

கருநாள் எனும் காணும் பொங்கல், நண்பர்களை காணும் பொங்கல், ஆனால் இப்போது நினைக்கும் பொங்கலாக கூட இல்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது. நினைக்கவும் நேரமில்லாமல் வாழ்வின் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது.

# கருநாள், கிராமத்து வாழ்வின் உற்சாகத் திருநாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக