பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பேஸ்புக் மவுசு குறைகிறது - சமீபத்திய சர்வே

பொதுவாக முகநூல் மற்றும் இணைய பயன்பாடு குறைந்திருக்கோ அப்படின்னு ஒரு சந்தேகம் கொஞ்ச நாளா எனக்கு. பணி நெருக்கடியால, நான் அதிகம் வர முடியாததால இப்படி எனக்கு தோனுதோன்னு இருந்தேன். தினத்தந்தியில் ஒரு செய்தி, “அமெரிக்காவில் பேஸ்புக் மவுசு குறைகிறதுஎன சமீபத்திய சர்வே அடிப்படையில்.

                        

பேஸ்புக் நல்லதா, கெட்டதா அப்படிங்கிற விவாதமும் அடிக்கடி இங்க வருது. போதை மாதிரி ஆயிடுச்சி, சண்டை நடக்குது, பலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்குது இப்படி வாதங்கள் பல. .  கொஞ்சம் பின்னோக்கி பார்த்ததில் என்னை பொறுத்த வரை பேஸ்புக் நல்ல முறையில் பயன்படுவதாகவே நினைக்கிறேன்.

நான் இவ்வளவு எழுத முடியும் அப்படிங்கறத, நானே தெரிஞ்சிக்கிட்டதற்கு பேஸ்புக் தான் காரணம். கடந்த வருடம் முழுதும் நிறைய எழுதியிருக்கேன் அப்படிங்கறத இப்போ உடகார்ந்து புரட்டும் போது தான் தெரியுது. சில விஷயங்கள் தேவையில்லாததாக இருந்தாலும் பல விஷயங்கள் பிரயோசனமா அமைஞ்சதுன்னே நினைக்கிறேன்.

சட்டமன்ற நிகழ்வ விளையாட்டா தான் எழுத ஆரம்பிச்சேன். பிரச்சினை வரும்னு சிலர் எச்சரிச்சாலும், உள்ளே வராதப் பிரச்சினையா இங்க வரப் போகுதுன்னு தொடர்ந்தேன். பலரும் பாராட்டினார்கள். ஹைலைட்டா நக்கீரன் இதழ்ல எழுதற வாய்ப்பு கிடைச்சது. பேஸ்புக் இல்லன்னா இது சாத்தியம் இல்ல.

எனக்கு மட்டும் பேர் கிடைச்சதினால இத சொல்லல. நான் சிலரை பற்றி எழுதிய பிறகு அவர்களுக்கு கிடைச்ச ஊடக வெளிச்சம் மகிழ்ச்சியானது. என் தொகுதியை சேர்ந்த கண்பார்வையற்றவரான கிளியூர் கொளஞ்சிநாதன் பற்றி எழுதினேன். 

என் செய்திக்கு பிறகு புதிய தலைமுறைவார இதழ் அவர் குறித்து கவர்ஸ்டோரி வெளியிட்டது. அதை பார்த்த சென்னையை சேர்ந்த ஒருவர் மாதம் தோறும் அவருக்கு உதவி செய்கிறார். தர்மபுரி வினோத் இந்தியன் பில்லர்ஸ்அமைப்பு மூலம் ரத்ததானத்திற்கு பெரும் பணி ஆற்றுவதை எழுதினேன், ஆனந்த விகடன் ஸ்டோரி வெளியிட்டது.

கண்பார்வை குறைவுடைய மாணவி கண்மனி +2ல் 1148 மதிப்பெண்கள் பெற்றதற்கு, நேரில் சென்று பாராட்டு தெரிவித்து பகிர்ந்து கொண்டதை 2803 பேர் லைக் செய்தும், 1441 பேர் ஷேர் செய்த செயல் நல்ல செயல்பாடுகளுக்கு நம்பிக்கை அளித்தது.

எனது தந்தைக்கு பார்க்கின்ஸன் நோய்க்கு ஹைதரபாத்தில் அறுவை சிகிச்சை செய்ததை, இங்கு விரிவாக பகிர்ந்து கொண்டதால், இன்று வரை அது குறித்து பலரும் என்னிடம் விபரம் கேட்டு பயன் அடைகின்றனர்.

என்னுடைய ரயில் பயணங்கள் பற்றிய பதிவுகள் பலருக்கு புதிய ஆர்வத்தை உண்டாக்கி, ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்.

தொகுதியை சேர்ந்த புதிய நண்பர்கள் பலர் கிடைத்தது பேஸ்புக் மூலம். இவர்கள் மூலம் பல செய்திகள், பிரச்சினைகள் பார்வைக்கு வந்தது. அதில் சில தீர்வும் கிடைத்தது.

இன்னும் பல துறையை சேர்ந்த நண்பர்கள் தமிழ்நாடு முழுதும் கிடைத்துள்ளனர். அவர்கள் மூலம் பல துறை குறித்து அறிவு பெற வாய்ப்பு. அறிவுப் பசி தீர்ந்த பிறகு முகநூல் நட்பு முகம்மது அலி வீட்டில் சாப்பிட்ட பட்டியல போட்டு வயிற்றெரிச்சலும் வாங்கியாச்சி.

அப்புறம் பத்திரிக்கை உலக ஜாம்பவான்கள் நட்பும் கிடைச்சிது. ஆனந்தவிகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர், உரிமையாளர்களுக்கு ஓப்பன் லெட்டர் எழுதி விரோதித்துக் கொண்டதும் இங்கு தான். 

இருபது ஆண்டுகள் கழித்து ஒரு கர்நாடகா நண்பரை கண்டுபிடிக்க முகநூல் தான் உதவியது. இல்லை என்றால் அவரை கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை.

இசை ரசனையை வெளிப்படுத்தி பாராட்டும், பாட்டும் வாங்கிய அனுபவமும் உண்டு. மனதில் பட்டதை கவிதயா நினைச்சி எழுதி மிரட்டுகிற துன்பியல் சம்பவங்களும் அரங்கேறின.

மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.பி.செந்தில்குமார் ஒரு முறை கேட்டார், “செம்பருத்தி கேட்ட நூலகம் கட்ட தொகை ஒதுக்கிட்டீங்களா ?”. நெருங்கிய உறவினர் கேட்டார் கிண்டலாக, “ நாங்க போன் செஞ்சா எடுக்க மாட்டேங்கறீங்க, தொகுதியில இருந்து ஏழாவது படிக்கிற மதுமிதா போன் பண்ணா பதில் சொல்றீங்க”. பதிவின் ரீச் தெரிந்தது. 

இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் அவ்வப்போது ஒவ்வொரு குரூப்பிடம் சிக்கி ரணகளமாவதும் உண்டு. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு வேற வேலை இல்லையா, பேஸ்புக்ல சுத்தறாருன்னு மாசம் ஒரு பஞ்சாயத்தும் உண்டு.

குடும்பத்திலேயேயும் பிரச்சினை. இதே வேலையான்னு கேட்டு பார்த்திட்டு, தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க வீட்டுக்காரம்மாவும், பெரிய பையனும். ஆனா சின்ன பையனுக்கு தான் தீராத பிரச்சினை, “ஏம்ப்பா கேம் ரெக்குவஸ்ட் கொடுத்தா, விளையாட மாட்டேங்கறீங்க ?”

#
சரி, நாளைக்கு என்ன ஸ்டேடஸ் போடலாம் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக