பிரபலமான இடுகைகள்

புதன், 17 செப்டம்பர், 2014

அவர் தான் அண்ணா !

பேரறிஞர் அண்ணா ஒரு முறை சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார். இரவுப் பொதுக்கூட்டம் முடித்துக் கொண்டு கிளம்புகிறார். அண்ணாவின் பொதுக்கூட்டங்கள் இரவு நேர பாடச்சாலை.

                               

சமயங்களில் நள்ளிரவு தாண்டியும் நடக்குமாம். அப்படி கூட்டம் முடித்துப் புறப்படுகிறார். ஓட்டுனரை ஓட்டச் சொல்லி பின்னிருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். பயணம் நீள்கிறது.

"களைப்பானால் வண்டியை ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்கிறார். உடனிருப்போரை அக்கறையோடு கவனிப்பது அண்ணாவின் வழக்கமாம். அதே அன்போடு சொல்லி தூங்கிப் போகிறார்.

கார் நிறுத்தப்படுவதை உணர்ந்து அண்ணா விழிக்கிறார். கும்மிருட்டு. சாலை ஓரம் கார் நிற்கிறது. அண்ணா ஓட்டுனரை பின்னிருக்கையில் படுக்கச் சொல்கிறார். ஓட்டுனர் தயங்குகிறார்.

நீட்டிப் படுத்தால் அசதி நீங்கும் என வற்புறுத்தி ஓட்டுனரை பின்னிருக்கையில் படுக்க வைக்கிறார். அண்ணா முன்னிருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். ஓட்டுனர் தூங்கிப் போகிறார்.

மெல்லிய வெயில் முகத்தில் பட்டு ஓட்டுனர் விழித்துப் பார்க்கிறார். கார் மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதை உணர்கிறார். அண்ணாவுக்கு கார் ஓட்டத் தெரியாதே என்று பதைத்து எழுந்துப் பார்க்கிறார்.

அண்ணா தான் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். "என்ன அய்யா இது? என்னை எழுப்பியிருக்கலாமே" ஓட்டுனர் பதறுகிறார்.

காரை நிறுத்திய அண்ணா சொல்கிறார்,"எனக்கு தூக்கம் விலகியது. உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் நானே காரை ஓட்டினேன். பயண தூரமும் குறைந்ததல்லவா"

பேரறிஞர் அண்ணாவிற்கு பல அடையாளங்கள் உண்டு. அதில் மிகப் பிரசித்தமானது அவரது இந்த எளிமை தான். அண்ணாவின் திறமைகளை நாம் அடைய முடியாது. ஆனால் அவரது இந்த எளிமையை நாம் கடைபிடிக்க முடியும்.

# அண்ணா 106-வது பிறந்தநாள் விழா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக