பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா....

ஒரு திரைப்படப் பாட்டு நம்மை பல ஆண்டுகளுக்கு பின் இழுத்து செல்லும் என்பதை இன்று உணர்ந்தேன். அப்படியே 1986க்கு கொண்டு சென்று விட்டது. வயது குறைந்து விட்டது. அந்த நாள் நினைவுகள்.

     

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பொறியியல் புலம். முதலாண்டு. மின்னியல் மற்றும் மின்ணணுவியல். வீட்டிலிருந்து பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற நேரம். கட்டுபாடுகள் தளர்ந்து வாழ்க்கையின் சிறகுகள் விரிந்த நேரம்.

பள்ளிப்படிப்பு காலத்தில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் அம்மாவிடம் அனுமதி பெற வேண்டும். கல்லூரி, ஹாஸ்டல் வந்த பிறகு, நாமே நமக்கு தலைவன். அது தான் பல ரசனைகள் பிடிபட்ட காலம்.

பள்ளி காலத்திலேயே டிரான்சிஸ்டரை தலையணைக்கு கீழ் வைத்து பாடல்கள் கேட்ட இளையராஜா ரசிகக் கூட்டத்தின் தலைமுறை. இளையராஜா பாடல்களை கேட்டே பசியாற்றும் கூட்டத்தின் அங்கம்.

அந்த இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்த படம் என்றால் எவ்வளவு ஆர்வம் கிளம்பியிருக்கும்? அப்படி தான் அந்த படம் எங்களுக்கு அறிமுகம். ரிலீஸ் அப்போது.

படம் பார்க்க சென்றோம். லேனா தியேட்டர். கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்றோம். அது தான் நகரத்தில் சினிமா பார்க்க சென்று, கும்பலில் நின்ற முதல் அனுபவம். தோளில் ஏறி குதித்து செல்கிறார்கள்.

டிக்கெட் கவுண்டரை நெருங்குகையில் சட்டை கசங்கி, வியர்வை பெருத்து, தலை கலைந்து, நிலை குலைந்து போனோம், எங்கள் கேங். ஆனாலும் டிக்கெட் வாங்கி, வாழ்க்கையின் உச்சம் எட்டினோம்.

பாடல்கள் தான் படத்தின் பலம். டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன். பல வெற்றிப் படங்களின் டைரக்டர். மெல்லிய உணர்வுகளை கொண்டு திரைக்கதை நெய்யக் கூடியவர். ஆனால் இந்தப் படம் இசை மேல் கட்டப்பட்டது. மெல்லத் திறந்தது கதவு.

இன்று ஜெயா டிவியில் "குழலூதும் கண்ணனுக்கு" பாடல் பார்த்தேன். நம்ம "மைக் மோகன்" புல்லாங்குழல் வைத்துக் கொண்டு குழலூதூகிறார். ராதா கண்டாங்கி சேலைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் ஓடி பாடுகிறார்.

உடலை ஒட்டிய சட்டை. பல நிறங்கள் கொண்ட சட்டை. டைட்டான கருப்பு பேண்ட். இது மோகன். நீல நிற சேலை. மேக்கப் பெரிதாக இல்லாத ராதா. இவர்களை கொண்டு படமாக்கப்பட்ட பாடல். ஆனால் ஹிட் பாடல். அது அந்த காலம்.

இசை, பழைய நினைவுகள்.....

# பாடலில் வரும் மோகனை போல மனம் பழைய நினைவுகளை தேடி அலைகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக