பிரபலமான இடுகைகள்

புதன், 22 அக்டோபர், 2014

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....

மகராஷ்டிர தேர்தல் முடிவுகளை ஒட்டி  தமிழ் நாளிதழ்கள் ஒரு “பெரிய சாதனையை” பாராட்டி எழுதியுள்ளார்கள். சாதனை தான். மகிழ்ச்சி தான்.

19.10.2014 அன்று மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் தான் அந்த சாதனை. இதில் சங்கோலா என்ற தொகுதியில் இருந்து கண்பத் ராவ் தேஷ்முக் 11 முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். சாதனை தான்.

      

ஆனால் இன்னொருவர் சாதனையை மறந்து விட்டார்கள், வசதியாக. காரணம் அவர் தமிழர். அதிலும் திமுக-வின் தலைவர். கலைஞர் என்றால் சாதனை கூட மறந்து போகிறதே. மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தது கூட கண்ணுக்கு படாமல் போகிறது.

1957-ல் அந்த வெற்றி சரித்திரம் துவங்கியது. முதல்முறையாக குளித்தலையில் 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்து 1962-ல் தஞ்சாவூரில் பெரும் பணக்காரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

1967 தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி திமுகவின் முதல் அமைச்சரவையில், அண்ணா தலைமையில் அமைச்சரானார். மீண்டும் 1971-ல் மீண்டும் சைதாப்பேட்டையில் போட்டியிட்டு வென்று முதலமைச்சரானார்.

1977, 1980 தேர்தல்களில் சென்னை-அண்ணாநகர் தொகுதியை கைப்பற்றினார். எம்.ஜி.ஆர் முதலமைச்சர், தலைவர் கலைஞர் எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். சட்டசபை பயிற்சி வகுப்பாக ஆனது.

1989 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் முதலமைச்சரானார். 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ராஜீவ்காந்தி கொலையால், திமுக பெரும் தோல்வியடைந்தது. அப்போது வெற்றி பெற்ற ஒரே திமுக வேட்பாளர் கலைஞர்.

1996-ல் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதலமைச்சரானார். 2001 தேர்தலில் மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றி. 2006-ல் மீண்டும் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்று அய்ந்தாம் முறையாக முதல்வர் ஆனார்.

2011-ல் தன் மனம் கவர்ந்த சொந்த மண்ணான, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது 12-வது முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று சாதனை. தேஷ்முக் 11 முறை தான்.

தேஷ்முக் போட்டியிட்ட இரு தேர்தல்களில் தோல்வி கண்டவர். ஆனால் தலைவர் கலைஞர் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே கண்டவர்.

தமிழகத்தின் மற்ற தலைவர்களின் தோல்விகளை சொல்லி சிறுமைப் படுத்தக்கூடாது என்பதால் பட்டியலிடவில்லை, இவரின் வெற்றிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

அவரின் இந்த சாதனையை சொல்லக் கூட பயந்து கொண்டு பத்திரிக்கை நடத்தினால் அது பத்திரிக்கைத் துறைக்கே அவமானம்.

# கலைஞரை வென்றவருமில்லை, வரலாற்றை மறைத்து வாழ்ந்தவருமில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக