வழக்கம் போல் வழக்கறிஞர் அண்ணன் துரைராஜ் அறைக்கு போயிருந்தேன். அவர் தான் எனது வழக்குகளுக்கு ஆஜராகிறவர். எனக்கு மட்டுமல்ல, அரியலூரில் பல வி.ஐ.பி-களுக்கும் அவர் தான் வழக்கறிஞர். சிக்கலான வழக்குகளை பிரித்து மேய்வார், வாதத்தால்.
அன்று மிகுந்த சிந்தனையில் இருந்தார். “என்னண்ணே சிந்தனை ?” என்றேன். “குமணன் காலேஜ்-ல சேரனும். என்ன படிக்க வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு” என்றார். குமணன் அவரது மகன்.
“குமணன் என்ன சொல்றாப்ல?” என்று கேட்டேன். “எஞ்சினியரிங் படிக்க விருப்பப் படறான்” என்றார். “வேண்டாம்ணே. வேற கோர்ஸ் யோசிங்க” என்றேன். “என்ன நீங்க எஞ்சினியரிங் படிச்சிட்டு, நீங்களே வேண்டாம்னு சொல்றீங்க?”
“ஆமாம்ணே. அதனால தான் சொல்றன். வக்கீலுக்கு படிக்க வைக்கலாமே. நீங்களும் வக்கீல். குமணன ஹைக்கோர்ட்டுக்கு அனுப்பலாமே” என்றேன். “எனக்கும் அந்த யோசனை இருக்கு. ஹைக்கோர்ட் என்ன, சுப்ரீம் கோர்ட்டுக்கே அனுப்பலாம். ஆனா குமணன் ஒத்துக்கனுமே” என்றார்.
“வர சொல்லுங்க அண்ணே. பேசி கன்வீன்ஸ் செய்வோம்”. வந்த குமணனை கன்வீன்ஸ் செய்தோம். அது 2003.
சட்டம் படித்தார் குமணன். 2008, சொன்னபடி சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஆக்க, அண்ணன் துரைராஜ், குமணனை டெல்லிக்கு அனுப்பினார். அண்ணன் ஆ.ராசா, பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் வழிகாட்டுதல்.
உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் டங்கா அவர்களிடம் ஜூனியராக பணியாற்றத் துவங்கினார். நாங்கள் டெல்லி செல்லும் போதெல்லாம் சந்திப்போம். 2ஜி வழக்கின் விபரங்களை எங்களுக்கு எளிதாக எடுத்துக் கூறி புரிய வைப்பார்.
வழக்கின் அவ்வப்போதைய அப்டேட்கள் குமணனிடமிருந்து எங்களுக்கு கிடைக்கும். புதிதாக வரும் நண்பர்களிடம் அவரை அறிமுகப்படுத்தினால் வட இந்தியர் என்றே நினைப்பார்கள். தோற்றமும், நிறமும் இயற்கையாக அப்படி. பெயரை கேட்டு தான் நம்ம ஆள் என்று உணர்வார்கள்.
சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஹரியானா முன்னாள் முதல்வர் சௌடாலாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். வழக்கமான செய்தியாக விட்டு விட்டேன்.
ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட சௌதாலா வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருந்தார். நிபந்தனையை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதை ஆட்சேபித்து ஹேமந்த் சர்மா என்பவர் வழக்கு தொடுத்தார்.
வழக்கு நீதிபதி சித்தார்த் மிருதுளா முன் வந்தது. ஹேமந்த் சர்மாவிற்காக இரு இளம் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். சௌதாலாவிற்கு பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். ஆவேசமாக வாதாடினார். தன் வழக்கப்படி கோர்ட் மீது குற்றம் சுமத்தி வாதாடினார்.
இளம் வழக்கறிஞர்கள் மென்மையாக ஆனால் அழுத்தமாக தங்கள் வாதங்களை வைத்தார்கள். இவர்களது வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீனை ரத்து செய்து சௌதாலாவை திகார் சிறையில் சரணடைய உத்தரவிட்டார்.
இளம் வழக்கறிஞர்களில் முதன்மையானவர் நம்ம குமணன். அண்ணன் ஜெத்மலானி புலி, சிங்கம் என்று பில்டப் கொடுக்கப்படும் வேளையில் அவரது வாதங்களை முறியடித்திருக்கிறார் குமணன். இப்போது லைம் லைட்டில் குமணன். தமிழனாக பெருமை.
# வாழ்த்துக்கள் சகோதரர் குமணன், டெல்லியை வெல்ல !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக