பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மலேசியாவில் அம்மா உணவகம்; மலேசியப் பயணம் - 2

சிங்கப்பூரிலிருந்து நாங்கள் பயணித்தது மலேசியாவில் உள்ள ஜோகுர் பாஹ்ரு மாநிலத்திற்கு. மொத்தம் 13 மாநிலங்களை கொண்டது மலேசியா. இந்த ஜோகுர் பாஹ்ரு மாநிலம் சிங்கப்பூரை ஒட்டியுள்ள பகுதி. அன்று 02.09.2014

                

முக்கால் மணி நேரப் பிரயாணம். சாலை தரத்தால் பயண சிரமம் தெரியவில்லை. இன்னொரு புறம் தூக்கக் கலக்கம். காரணம் சென்னையில் புறப்பட்டப் போது இரவு 1.30. பயண நேரம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம். அது இந்திய நேரப்படி அதிகாலை 5.30.

சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிப்பது கடலின் சிறு பகுதி. கடல் மேல் ஒரு பாலம் கட்டி இணைத்திருக்கிறார்கள். அவ்வளவு நெருக்கம். பாலம் தாண்டும் போது போக்குவரத்து வேகம் குறைய ஆரம்பித்தது.

கார்கள் நின்று, நின்று செல்ல ஆரம்பித்தன. "டோல்கேட்டா?" என்று கேட்டேன். "இல்லை. கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன்" என்றார்கள். சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அனுபவத்தை வைத்து நேரம் ஆகும் என்று நினைத்தேன்.

தொழிற்சாலைகளுக்கு அமைப்பது போல் பெரிய, பெரிய ஷெட்கள் அமைக்கப்பட்டிருந்தன். அதனுள் சாலைகள் பிரிந்து சென்றன. நம் டோல்கேட்களில் அமர்ந்திருப்பது போல் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தான் கஸ்டம்ஸ் அதிகாரி.

அவர் அருகில் காரை நிறுத்தி எங்கள் பாஸ்போர்ட்களை வாங்கி அவரிடம் கொடுத்தார். பரிசோதித்து திருப்பிக் கொடுத்தார். இரண்டு நிமிடங்கள் தான். காரை விட்டு இறங்கவில்லை. மிக எளிதான நடைமுறை. சந்தேகம் வந்தால் பரிசோதிப்பார்களாம்.

மலேசியா வந்தாயிற்று. எங்கே சாப்பிடலாம் என செல்வமும், அலனும் விவாதித்தார்கள். தமிழ் ஹோட்டல் என்று முடிவெடுத்தார்கள். "எங்கே சரவணபவனா?" என்று கேட்டேன், வெளிநாடுகளில் இருக்கும் ஹோட்டல் அது தானே என்ற எண்ணத்தில்.

"இல்லை அம்மா உணவகம்" என்றார் செல்வம். "கிண்டல் பண்றீங்களா? இப்போ தான் ஆந்திராவிலேயே பார்த்துட்டு போயிருக்காங்க. அதுக்குள்ள மலேசியாவில அம்மா உணவகம் வந்திடுச்சா?"என்று கேட்டேன். "வந்து பாருங்க' என்றார்.

காரை பார்க்கிங்கில் நிறுத்தி அழைத்து சென்றார்கள். உண்மை தான், அந்த ஹோட்டல் பெயரே 'அம்மா உணவகம்' தமிழ் உணவகம். உள்ளே சுவர்களை எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா என பழைய தமிழ் நடிகர்களின் படங்கள் அலங்கரித்தன. முன்னர் தமிழகத்தின் சிறு நகரங்களில் இது போன்று படங்கள் வைத்திருப்பார்கள்.

நம் தமிழ் குல வழக்கப்படி முதலில் "இட்லி" சொன்னோம். பக்கத்து மேசையில் ஊர்வன, பறப்பன எல்லாம் உணவாக உருவெடுத்திருந்தன. உள்ளூர் மலேய மக்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "முட்டை பரோட்டாவும், கறிகுழம்பும் சாப்பிடுறீங்களா? அது இங்க ஸ்பெஷல்" என்றார் அலன். ஆர்டர் செய்தோம்.

# மலேசியாவில் அம்மா (அசைவ) உணவகம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக